ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''உண்ணாவிரதம் தொடரும்!''

செந்தூரன் அதிரடி

##~##

லங்கை ராணுவம் மற்றும் இலங்கை கால்பந்தாட்ட வீரர்கள் ஆகியோரின் பயிற்சி களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா, ஓர் அகதியாக தமிழக மண்ணை நாடிவந்த செந்தூரனின் நியாயமான கோரிக்கையைக் கண்டுகொள்ளாமல் வதைக்கிறார் என்பதுதான் ஈழ ஆதரவாளர்களின் கடுமையான விமர்சனம்!  'சிறப்பு முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்து, 26 நாட்கள் உணவு இல்லாமலும் 12 நாட்கள் தண்ணீர் இல்லாமலும் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்த செந்தூரனுக்கு ஆகஸ்ட் 31-ம் தேதி இரவு நேர்ந்த கொடுமை, தமிழகத்தைத் தலைகுனிய வைத்துள்ளது.இலங்கையில் அரசியல் கைதிகளை விசாரணை இல்லாமல் வைத்திருப்பதைப் போலவே இங்கும் வைத்திருப்பதுதான் கொடுமை. 

''மாலை 5 மணிக்கு, செந்தூரன் உடல் சோர்ந்து போய் மயக்க நிலையை அடைந்தார். உடனே, முகாம்களில் உள்ளவர்கள் காவல் துறையிடம் முறையிட்டனர். இரவு 7 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்த பிறகும், அவருக்கு எந்தச்சிகிச்சையும் அளிக்காமல் மிகவும் அலட்சி யமாகவே காவல்துறை நடந்துகொண்டது. அதனால், இரவு 10 மணிக்குப் பிறகு, ஸ்டெச்சர் கூட இல்லாமல் படுத்த படுக்கையோடே முகாம்வாசிகள் செந்தூரனை ஆம்புலன்ஸில் ஏற்றினனர்.

''உண்ணாவிரதம் தொடரும்!''

'செந்தூரனை மருத்துவமனைக்குக் கொண்டு வருகிறார்கள்’ என ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் குவிக்கப்பட, ஊடகங்கள் திரண்டு நின்றன. ஆனால், உயிருக்குப் போராடிய செந்தூரனை பூந்தமல்லி நடுவர் நீதிமன்ற நீதிபதி முகமது ஃபரூக்கின் வீட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்து விட்டனர். அறவழியில் உண்ணாவிரதம் இருந்தவர் மீது, 'தற்கொலைக்கு முயன்றார்’ என்று வழக்குப் பதிந்து சிறையில் அடைத்து விட்டனர்'' என்று குமுறுகிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

செந்தூரனின் நிலையைப் பார்த்து தமிழகம் வந்திருந்த அவரின் அத்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார். இப்போது அவரின் பாட்டியும் செந்தூரனின் நிலையை இணையத்தில் பார்த்து கண்டியில் மரணம் அடைந்துள்ளார்.

இளநீர் பருகி செந்தூரன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார் என்கிறது, தமிழக காவல் துறை. ஆனால் செந்தூரனோ, ''காவல் துறையின் வற்புறுத்தலின் காரணமாகத்தான் இளநீரைக் குடித்தேன். ஆனால் நான் உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை. சாகும் வரை உண்ணாவிரதம் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இழப்பு இருந்தால் மட்டும்தான் எந்த ஒன்றையும் அடைய முடியும்'' என்கிறார்.

ஒன்றரை லட்சம் சகோதரர்களைப் பலிகொடுத்து விட்டு, எல்லாவற்றையும் இழந்து தொப்புள்கொடி உறவென்று தமிழகம் வந்த ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்திலும் துயரமே என்ற கொடுமையை என்னவென்று சொல்ல?

- மகா.தமிழ்ப் பிரபாகரன்