ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கிரானைட் தில்லுமுல்லுக்குக் காரணம் கலெக்டர்களா?

கிரானைட் தில்லுமுல்லுக்குக் காரணம் கலெக்டர்களா?

##~##

கிரானைட் ஊழல் விவகாரத்தில் கோடி,கோடி யாகக் கொள்ளை அடித்த புள்ளிகளை அடுத்து, அவர்களுக்கு உதவி செய்த அதிகாரிகளை நோக்கி இரும்புக் கரங்கள் நீள்கின்றன. சமீபத்தில், டாமின் நிறுவன முதுநிலைத் திட்ட அலுவலர் மனோகரன், திட்ட அலுவலர் ஜவகர் மற்றும் ரகுபதி ஆகியோர் சிக்கினர். இதையடுத்து, கனிம மற்றும் சுரங்கத் துறையில் மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்த முன்னாள்-இந்நாள் அதிகாரிகள் பல ருக்கும் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடக் கிறது. 

இந்தச் சூழலில் கிரானைட் விவகாரங்கள் குறித்து கனிம மற்றும் சுரங்கத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகள் சிலரிடம் பேசினோம்.

''கிரானைட் குவாரிகளில் சைசென்ஸ் பெற்ற விவகாரத்தில் விதிமுறைகள் ரீதியாக எப்படிக் குளறுபடி நடந்துள்ளது?''  

''அரசு புறம்போக்கு நிலத்தில் குவாரி வெட்டி எடுப்பதற்கு, டெண்டர் முறை (ரூல் 8ஏ), அல்லது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை (ரூல் 39) என்ற வகையில் அனுமதி வழங்கப்படுவது வழக்கம். 19 வருடங்களுக்கு முன், அரசுத் தரப்பில் 59 தனியார் களுக்கு லைசென்ஸ்கள் வழங்கியதோடு சரி. அதன் பிறகு, ஏதேதோ டெக்னிக்கல் காரணங்களைச் சொல்லி லைசென்ஸ்களை நிறுத்தி வைத்து பழை யவர்களே ஆதாயம் பெறுவது மாதிரி அரசு நடந்து கொண்டது. இங்கிருந்துதான் முறைகேடுகள் தொடங்கின. இவை தவிர, பட்டா நிலங்களில் குவாரி வெட்டி எடுக்க அனுமதி வழங்குவதும் ஒரு முறை. இதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பது பற்றி இன்னும் விசாரிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதையும் விசாரித்தால், மிகப்பெரிய பூதங்கள் கிளம்பும்''

கிரானைட் தில்லுமுல்லுக்குக் காரணம் கலெக்டர்களா?

''அப்படியானால், அரசே நேரடியாக சைசென்ஸ் வழங்குகிறதா? இதில் மாவட்டக் கலெக்டர்களின் பங்குதான் என்ன?''

''அரசுப் புறம்போக்கில் கிரானைட் எடுக்க அனுமதி கேட்டு விண்ணப்பம் அனுப்புவது போன்ற சம்பிரதாயங்கள் அந்தந்த மாவட்டக் கலெக்டர் மூலமாகவே தலைமை அலுவலகங்களுக்குப் போகும். கிரானைட் குவாரிகளைப் பொறுத்தவரை, அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தாத மாதிரி குவாரி உரிமையாளர்கள் நடந்து கொள்வதைக் கண்காணிக்கும் பொறுப்பு கலெக்டருக்கு உண்டு. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக, பொருளாதாரக் கோணங்களில் அவர் கிரானைட் குவாரிகளை ஆய்வு செய்யவேண்டும்.  'ஆபரேஷன் இன்சார்ஜ்' என்ற வகையில் அனைத்து விதமான கண்காணிப்பு மற்றும் செயலாக்க அதிகாரம் மாவட்ட கலெக்டரிடம் உள்ளது. கனிம மற்றும் சுரங்கத் துறை, போலீஸ், வருவாய்த் துறை, வனத்துறை, போக்குவரத்துத் துறை, மாசுக் கட்டுப்பாட்டுத் துறை ஆகிய ஆறு துறைகளுக்கும் இணைப்பாளராகச் செயல்பட வேண்டிய பொறுப்பு மாவட்ட கலெக்டருக்கு இருக்கிறது. மத்திய அரசின் சுரங்கத் துறை விதிமுறைகளின்படியும், மாநில அரசின் விதிமுறைகளின்படியும் கிரானைட் குவாரிகள் நடக்கிறதா, வெட்டப்பட்ட கிரானைட் கற்களை சரியான ஆவணங்களுடன் கொண்டு போகிறார்களா என்றெல்லாம் சரிபார்ப்பது கலெக்டரின் வேலை. மாவட்ட நிர்வாகத்தில் அதிகப் பணிகள் இருப்பதால், துறைகளின் தலைமை அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு கலெக்டர் நடந்துகொள்வார். இவராக நேராக குவாரிகளில் ஆய்வு செய்வதில்லை. அப்படி செய்திருந்தால், தவறுகளை ஆரம்பத்திலேயே தடுத் திருக்க முடியும்''.    

''இதில், டாமின் நிறுவனத்தின் பங்கு என்ன?''

''அரசு நிறுவனமான டாமின், நிறைய சைசென்ஸ் களை வைத்திருக்கிறது. ஆனால், அனைத்தையும் வெட்டி எடுக்க முடியாது என்பதால், ஐந்து குவாரி களைத் தவிர மற்ற குவாரிகளை தனியாருக்குக் கான்ட் ராக்ட் விட்டுள்ளது. கான்ட்ராக்ட் எடுப்பவர்கள், வெட்டியெடுக்கும் கிரானைட் கற்களில் 10 சதவிகிதத்தை மட்டும் கணக்குக் காட்டிவிட்டு, 90 சதவிகிதம் கற்களை கடத்தி விடுகிறார்கள். மேலும், கிரானைட் குவாரிக்கு அருகில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் உள்ள குவாரிகளையும் சேர்த்தே கபளீகரம் செய்கிறார்கள். இதற்கு டாமின் அதிகாரிகளும் உடந்தை. புறம்போக்கில் கிரானைட் வெட்டி எடுப்பது தொடர்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் மத்திய அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் கடந்த 20 வருடங்களாக அதைப் பின்பற்றுவதே இல்லை.''

''அப்படியானால், கலெக்டர்களின் கண் காணிப்புக் குறைபாடுதான் இந்த முறைகேட் டுக்கு முக்கியக் காரணமா?''

''அப்படித்தான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட சில கலெக்டர்கள் மட்டும்தான் இதில் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்பட்டனர். மற்றவர்கள் பி.ஆர்.பி-யை பயன்படுத்திக் கொண்டனர். ஆனால், அதிகாரிகளை மட்டும் குற்றம் சொல்வதில் பயன் இல்லை. மேலிடத்தில் என்ன செய்யச் சொல்கிறார்களோ, எதற்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்கிறார்களோ அதைத்தானே செய்யமுடியும்...'' என்றார்கள்.

எனவே, அனைத்துக் கலெக்டர்களிடமும் முறையான விளக்கங்களைப் பெறுவதற்கு ஆட்சி மேலிடம் திட்டமிட்டு இருக்கிறது. உதயச்சந்திரன் கலெக்டராக இருந்த போது பி.ஆர்.பி. நிறுவனத்துக்கு அபராதம் விதித்தார். சந்திரமோகன் கலெக்டராக இந்த மதுரை மாவட்டத்தில் மிகக்குறுகிய காலமே இருந்தார். அவரது காலத்திலும் விதிமுறைகள் மீறப்பட்ட நடவடிக்கைகள், புதிய லைசென்ஸ்கள் இல்லை என்று சொல்கிறார்கள். ஒரு சில கலெக்டர்கள் பெயர் தான் அதிகளவிலான சர்ச்சைக்கு அடித்தளம் அமைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. மேலிடத்தின் விசாரணை நடக்கும் போதுதான் முழுஉண்மை தெரியவரும்.

தவறு செய்து விட்டு, அதில் இருந்து தப்புவதற்காக யாரையாவது கை காட்டுவது எல்லாம் அதிகாரி களுக்கு அழகா?

- கனிஷ்கா