ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

வெட்டு வாங்கிய பிறகும் திருப்பித் தாக்கிய வெள்ளைச்சாமி!

தென் மாவட்டத்தைப் பதற வைத்த படுகொலை!

##~##

ரசியல் படுகொலைகளின் வரிசையில் இன்னும் ஓர் அதிர்ச்சி மரணம்! 

தா.கிருஷ்ணன், ஆலடி அருணா, நேருவின் தம்பி ராமஜெயம் போன்ற தி.மு.க பிரமுகர்களின் பட்டியலில் மேலும் ஒரு பெயர் சேர்ந்து இருக்கிறது. அந்தப் பெயருக்கு உரியவர் முதுகுளத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. காதர்பாட்சா என்ற வெள்ளைச்சாமி. சிறுவயதில் உடல்நலமில்லாமல் போனதால், தர்காவில் சென்று அவருக்கு மந்திரித்தார்களாம். அதனால், நோய் குணமானது. இதைத் தொடர்ந்து காதர்பாட்சா என்ற பெயரையும் அவருக்குச் சூட்டினார்களாம்.

தென்மாவட்ட தி.மு.க. தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் காதர்பாட்சா. 1971-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஃபார்வர்ட் பிளாக் வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் வென்றதும் தி.மு.க-வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரது சொந்தக் கிராமமான மேலராமநதி பஞ்சாயத்தில் 1958 முதல் ஐந்து முறை தலைவராக இருந்தவர். தி.மு.க-வின் முக்கியப் பதவியான சொத்துப்பாதுகாப்பு உறுப்பினராகவும், 89 தேர்தலில் மீண்டும் எம்.எல்.ஏ-வாகவும் பதவி வகித் தவர். கடந்த தேர்தலில் அவருக்கு ஸீட் கிடைக்காமல் சிலர் 'பார்த்து'க் கொண்டனர்.

வெட்டு வாங்கிய பிறகும் திருப்பித் தாக்கிய வெள்ளைச்சாமி!

ராமநாதபுரம் மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் அமைந்து இருப்பது மேலராமநதி பஞ்சாயத்து. இதில் காவடிப்பட்டி கிராமமும் அடக்கம். மேலராமநதி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பெருவாரியாக வசிக்கின்றனர். தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த  காதர்பாட்சா, அந்த மக்களுக்கு ஆதரவாக இருந்த​தால் தொடர்ந்து அவரே அந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்குப் பிறகு, அவரது மகன் முத்துராமலிங்கம் மூன்று முறை போட்டியின்றித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  கடந்த ஆண்டு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் முத்துராமலிங்கம் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து அதே கிராமத்தைச் சேர்ந்த இமானுவல் என்பவர் போட்டியிட்டார். அவரை காதர்பாட்சா வீட்டில் வேலை பார்த்து வந்த தனசீலன் என்பவர் ஆதரித்ததாகக் கூறப்படுகிறது.  இறுதியில் இமானுவல் போட்டியில் இருந்து விலகிக்கொள்ள, முத்துராமலிங்கம் வெற்றி பெற்றார்.

'காதர்பாட்சாதான், இமானுவலை மிரட்டி வாபஸ் வாங்க வைத்தார்’ என்ற வருத்தம் தனசீலனுக்கு இருந்துள்ளது. இந்த தனசீலனும் அவரது அப்பாவும் காதர்பாட்சா வீட்டில்தான் பல ஆண்டுகளாக வேலைபார்த்து வந்தவர்கள். தேர்தல் கோபம் காரண மாக தனசீலன் அங்கே வேலைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டார். அவரது அப்பா மட்டும் தொடர்ந்து காதர்பாட்சாவிடம் வேலை செய்துள்ளார். இந்தப்பகை புலத்தில்தான், காதர்பாட்சாவை கொலை செய்ய தனசீலன் திட்டம் போட்டு இருக்கிறார் என்கிறது போலீஸ்.

வெட்டு வாங்கிய பிறகும் திருப்பித் தாக்கிய வெள்ளைச்சாமி!

கடந்த 31-ம் தேதி காலை...

வழக்கம் போல் நடைபயிற்சியை முடித்துவிட்டு, கமுதி மேட்டுத்தெருவில் உள்ள தன்னுடைய  வீட்டில் காலை உணவுக்குத் தயாராகி இருக்கிறார் காதர்பாட்சா. அந்த நேரத்தில் தனசீலன் வந்துள்ளார். ஏற்கெனவே, இந்த வீட்டில் வேலை பார்த்தவர் என்பதால் யாரும் சந்தேகப்படவில்லை. அதைச் சாதக​மாக்கிக் கொண்ட தனசீலன், வீட்டின் உட்புறம் இருக்கும் படுக்கை அறைக்குச் சென்றிருக்கிறார். அங்கே இருந்த இருக்கையில், தான் கொண்டு வந்திருந்த அரிவாளை வைத்துவிட்டு அமைதியாக நின்றிருக்கிறார்.

'தனசீலனுக்கு டீ போட்டுக் கொடு’ என்று காதர்பாட்சா தனது மனைவியிடம் சொல்லிவிட்டு, தான் சாப்பிட வைத்திருந்த பழத்தை எடுத்து தன சீலனுக்குக் கொடுத்திருக்கிறார். பழத்தை வாங் கியவர் கண் இமைக்கும் நேரத்தில், தான் கொண்டு வந்திருந்த அரிவாளை எடுத்து காதர்பாட்சாவை சரமாரியாக வெட்டியுள்ளார்.

''பின்பக்கமாக இருந்து வெட்டியிருக்கிறார் தனசீலன். வெட்டுப்பட்டதும் பின்னால் திரும்பிய காதர்பாட்சா அவர் கையில் இருந்த அரிவாளைப் பிடுங்கி தனசீலனை அடித்துள்ளார். சத்தம் கேட்டு  மனைவி ருக்மணி ஓடிவர அவரையும் தனசீலன் அரிவாளால் வெட்டி உள்ளார். வலியால் துடித்த ருக்மணியின் கதறலைக் கேட்டு மாடியில் இருந்த மூத்த மகன் முத்துராமலிங்கமும் அக்கம்பக்கம் இருந்தவர்களும் வீட்டுக்குள் ஓடி வந்துள்ளனர். தப்பியோட முயன்ற தனசீலனை அங்கு கூடியிருந்தவர்கள் சுற்றி வளைத்துத் தாக்கி இருக்கிறார்கள். இதனால், தனசீலனும் சம்பவ இடத்திலேயே பிணமானார்'' என்கிறார்கள் நடந்ததை அறிந்தவர்கள்.

வெட்டு வாங்கிய பிறகும் திருப்பித் தாக்கிய வெள்ளைச்சாமி!

தகவல் பரவி போலீஸ் வருவதற்குள் கூட்டம் கூடிவிட்டது. கூட்டத்தினரும் ஆவேசமும் பதற்றமும் வன்முறையைத் தூண்டிவிடக் கூடாது என்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் கவனமாக இருந்தனர் போலீஸார். மத்திய அமைச்சர் அழகிரி, முன்னாள் அமைச்சர்கள் ரகுமான்கான், சுப.தங்கவேலன், தஙகம்தென்னரசு, பெரியகருப்பன், திருநாவுக்கரசர் மற்றும் தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் வந்து சேர்ந்தார்கள்.

காதர் பாட்சாவின் படுகொலைக்குக் காரணமான தனசீலன் கொல்லப்பட்டாலும், அவருக்கு உடந்தையாக மேலும் சிலர் இருந்துள்ளதாகப் பேச்சு உள்ளது. அவர்கள் மேலராமநதியைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. போலீஸார் இது சம்பந்தமான தீவிர விசாரணையில் இருக்கின்றனர்.  இந்த மாதம் 11-ம் தேதி இமானுவல் குருபூஜை நடக்க உள்ள நிலையில்... இந்த மரணம் போலீஸாருக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. காலம்காலமாக கொழுந்துவிட்டு எரியும் இந்த சா'தீ’யை மேலும் பரவவிடாமல் தடுப்பது அரசு அதிகாரிகளின் பக்குவமான நடவடிக்கையில்தான் உள்ளது!

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி 

முத்துராமலிங்கமும் இமானுவலும்!

காதர்பாட்சாவை கொலை செய்த தனசீலன், இமானுவல் என்பவரைத்தான் தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று சொன்னாராம். அப்போது காதர்பாட்சா, 'ஏம்ப்பா... என் பையன் பேரு முத்துராமலிங்கம். அவர் பேரு இமானுவல். ஏற்கெனவே இந்த இரண்டு பெயர்களால்தான் தென் மாவட்டம் கொந்தளிப்பாகவே இருக்கிறது. அதனால இப்படி ஒரு சிக்கலுக்கு இடம் கொடுக்கிற எண்ணமே வேண்டாம்’ என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்திருக்கிறார். அதுவும் தவிர, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலரும் முத்துராமலிங்கம் நிற்பதே சரியாக இருக்கும் என்றார்களாம் அப்போது. ''அந்த அளவுக்கு,  பெயர்களை வைத்துக்கூட பிரச்னை எதுவும் வந்துவிடக்கூடாது என்று ஜாக்கிரதையாக இருந்தவர் காதர்பாட்சா'' என்று குறிப்பிடுகிறார்கள் அவருடைய அனுதாபிகள்.

 தி.மு.க-வினர் மத்தியில் திடீர் வைகோ!

காதர்பாட்சா படுகொலை செய்யப்பட்ட நாளில், சென்னை ம.தி.மு.க. அலுவலகத்தில், ஈழத்தமிழர் செந்தூரனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார் வைகோ. பேச்சிடையே தற்செயலாக காதர்பாட்சா பற்றியும் குறிப்பிட்டார்.

வெட்டு வாங்கிய பிறகும் திருப்பித் தாக்கிய வெள்ளைச்சாமி!

'கழுகுமலைக்குத் தெற்கே சிதம்பராபுரம் கிராமத்தில்  பூலித்தேவன் நினைவாக சிலை அமைக்க நானும் என் தம்பி ரவியும் சேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டோம். தி.மு.க-வில் நான் இருந்த நேரம் அது. சிலை திறப்பு விழாவுக்கு அருப்புக்கோட்டை தங்கப்பாண்டியன், கே.என்.நேரு, காதர்பாட்சா ஆகியோரை அழைத்துச் சென்றேன். பூலித்தேவனையும் விடுதலைப் புலிகளையும் இணைத்துப் பேசினேன். விழா முடிந்து கிளம்பியபோது, 'நம்ம வீட்டுக்குப் போலீஸ் வர்ற மாதிரி பேசிட்டீங்க’ என்று நேரு சொல்ல... அதை தங்கப்பாண்டியனும் வழிமொழிந்தார். என்னை, மதுரை ரயில் நிலையத்தில் வழி அனுப்பிவிட்டு காதர்பாட்சா சென்றார். அன்றைய இரவுதான் என்னுடைய தம்பி ரவியை தடா சட்டத்தின் கீழ் கைது செய்தனர்....'' என்று தன் நினைவை மலர விட்டார் வைகோ.

பேசி முடித்துவிட்டு உட்கார்ந்த அவரிடம் ஒரு துண்டுச்சீட்டு தரப்பட்டது. 'காதர்பாட்சா கொலை செய்யப்பட்டார்’ என்றது சீட்டு. தி.மு.க. பிரமுகர் என்றாலும் அஞ்சலி செலுத்த உடனே கிளம்பினார். அவரைத் திடீரெனப் பார்த்ததும் சுப.தங்கவேலன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு போன்றவர்கள் சற்றே அதிர்ச்சி அடைந்தார்களாம். ''வைகோவை 40 ஆண்டுகளாக காதர்பாட்சாவுக்குத் தெரியும். கோவை மாநாட்டில் அவரது பேச்சைக் கேட்டு ஆர்வமாகித்தான் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு முதன்முதலாக வைகோவை அழைத்துச் சென்று காதர்பாட்சா பேச வைத்தார். மிசாவில் இருந்த ஓராண்டு, பொடாவில் இருந்த இரண்டு ஆண்டுகள் நீங்கலாக சுமார் 37 ஆண்டுகள் வைகோ அங்கு செல்லத் தூண்டுதலாக இருந்தவர் காதர்பாட்சா. இவர் தனிக்கட்சி ஆரம்பித்து விட்டாலும், இருவருக்குமான நட்பு கடைசிவரை தொடர்ந்தது’ என்கிறார் அங்கு இருந்த ம.தி.மு.க. பிரமுகர் ஒருவர்.

வீட்டுக்குள் நுழைந்த வைகோவை காதர்பாட்சாவின் மகன் மூவேந்தன், 'அப்பா சொல்லி, நீங்கதானே வேலை வாங்கிக் கொடுத்தீங்க’ என்று அழுதார். காதர்பாட்சாவைப் பற்றி அன்றைய தினம் தற்செயலாகப் பேசியதை வைகோ சொல்ல, 'அண்ணன் மேல உங்களுக்கு இருந்த உண்மையான மரியாதைதான் இப்படி உங்களைப் பேச வைத்துள்ளது’ என்று சொன்னாராம் அருகில் இருந்த தங்கம் தென்னரசு.

 இரங்கல் கூட்டம் ஏன் நடத்தவில்லை?

பொதுவாக அரசியல் பிரமுகர்கள் இறந்தால் மயானக் கரையில் இரங்கல் கூட்டம் நடத்துவார்கள். ஆனால், காதர்பாட்சாவுக்கு அப்படி நடத்தப்படாதது, அவரது ஆதரவாளர்களை வருத்தப்பட வைத்துள்ளது. ''இரங்கல் கூட்டம் நடத்த முதலில் முடிவெடுத்தனர். ஆனால், வைகோ வந்ததால் அந்தத் திட்டத்தைக் கைவிட்டனர். முன்னாள் அமைச்சர் ஒருவர், தலைமைக்குப் போன் செய்து கேட்டார். அவர்களும் இதையே காரணமாகச் சொல்லி வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்'' என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறார்கள். 'அடக்கம் செய்யும் நேரத்தில் அழகிரி இல்லை. ஸ்டாலின் வரவே இல்லை. தென்மாவட்டத்து முக்கியத் தலைவருக்கு இவ்வளவுதான் மரியாதையா?’ என்ற உடன்பிறப்புகளின் புலம்பலும் கேட்டது.