Published:Updated:

அபகரிப்புப் புகாரில் அகப்பட்ட சிதம்பரம் குடும்பம்!

ஆவேசத்தில் மீனவர்கள்

##~##

ந்தியாவின் மாண்புமிகு குடும்பங்களில் ஒன்று ப.சிதம்பரம் குடும்பம். அவர்கள் மீதே சர்ச்சை கிளம்பி உள்ளது! 

குற்றச்சாட்டைக் கிளப்பி இருக்கும் தென்னிந் திய மீனவர் பேரவைத் தலைவர் ஜெய.பாலய்யனை முதலில் சந்தித்தோம்.

''சென்னையைத் தாண்டி உள்ள முட்டுக்காடு, கரிக்காட்டுக் குப்பங்களில் ஏராளமான மீனவர்கள் வசித்து வருகிறோம். இந்தப் பகுதியில், கடந்த 1991-ம் வருடம், சர்வே எண் 98 பிரிவு 5-ஏ, 5-பி  ஆகிய பகுதிகளில் ப.சிதம்பரத்தின் மனைவி நளினியும் மகன் கார்த்தி சிதம்பரமும் இடம் வாங்கிப் போட்டனர். அதைத் தொடர்ந்து அருகில் உள்ள பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.

அபகரிப்புப் புகாரில் அகப்பட்ட சிதம்பரம் குடும்பம்!

அதன்பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் தீர்ப்பு அளித்த உயர் நீதிமன்றம், கரிக்காட்டுக்குப்பம் கடலோரப் பாதுகாப்புப் பகுதி என்று கூறி, இந்தப் பகுதியில் சாலைகள் அமைக்கவும், கட்டடங்கள் மற்றும் சுற்றுச் சுவர் அமைக்கவும், புதிய குடியிருப்புக்கள் ஏற்படுத்தவும் நிரந்தரத் தடை விதித்தது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவை காலம்காலமாக இந்தப் பகுதியில் வாழும் படிக்காத மீனவ மக்கள் மதித்து நடக்கின்றனர். ஆனால், வழக்குத் தொடர்ந்த நளினி சிதம்பரமும் அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் அதை மீறிப் பல காரியங்களைச் செய்கின்றனர்.

அவர்கள் வாங்கிய இடத்தில் மிகப்பிரமாண்ட காம்பவுண்ட் சுவர் கட்டி உள்ளனர். அப்போது அவர்களுக்குச் சொந்தமான 280 அடி நிலத்தையும் தாண்டி, கூடுதலாக 40 அடியை ஆக்கிரமித்து இந்த காம்பவுண்ட் சுவரை கட்டியுள்ளனர். அடுத்து, கரிக்காட்டுக் குப்பத்தில் உள்ள சர்வே எண் 5-ஏ பகுதியையும் முறைகேடாக ஆக்கிரமித்து, காம்பவுண்ட் சுவர் கட்டி இருக்கிறார். அது உண்மையில் யாருக்குமே சொந்தம் இல்லாத நிலம் என்பதால், அரசுக்குத்தான் சொந்தம்.

அதேபோல், இந்தப் பகுதியில் கடல் நீர் ஏற்ற இறக்கத்தால் உண்டான நீர்நிலை இருந்தது. இதில், அனைத்து வகையான நாட்டு மீன்களும் கிடைக்கும். கடலில் மீன் கிடைக்காத நான்கு மாதங்கள் இந்தப் பகுதிதான் இங்குள்ள மீனவ மக்களின்  வாழ்வாதாரம். அதில் சுமார் 2,000 லாரி மணலைக் கொட்டி மூடி, அதை நிலப் பரப்பாக மாற்றி இப்போது அதையும் ஆக்கிரமித்து உள் ளனர். இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். அதன் மூலம் அரசாங்கத்துக்கு சொந்தமான உடைமை களையும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும்'' என்றார்.

அபகரிப்புப் புகாரில் அகப்பட்ட சிதம்பரம் குடும்பம்!

இந்தப் பிரச்னை குறித்து கார்த்திக் சிதம்பரத் திடமும் நளினி சிதம்பரத்திடமும் விளக்கம் கேட்க முயன்றோம். அவர்கள் தரப்பில் வழக்கறிஞர் அருண் நடராஜன் நம்மிடம் பேசினார். ''நளினி சிதம்பரமும் கார்த்திக் சிதம்பரமும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே சம்பந்தப்பட்ட இந்த இடங்களை கிரையமாக வாங்கி விட்டனர். அதற்கான ஆவணங்கள் எங்களிடம் உள்ளன. வேறு எந்த இடங்களையும் நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை. எனவே, நிலஅபகரிப்பு என்பது தவறான குற்றச்சாட்டு.

அபகரிப்புப் புகாரில் அகப்பட்ட சிதம்பரம் குடும்பம்!

கடலோரப் பாதுகாப்புப் சட்டம், கட்டடம் கட்டக் கூடாது என்றுதான் சொல்கிறது. சுற்றுச் சுவர் கட்டக் கூடாது என்று சொல்லவில்லை. இந்தப் பகுதியில் எங்களைத் தவிர்த்து பட்டா நிலம் வைத்திருப்பவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் சுற்றுச்சுவர் எழுப்பி உள்ளனர். ஆனால், நிதிஅமைச்சர் சிதம்பரத்தின் மீது புகார் சொன்னால், தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் என்று நினைத்து சிலர் பிரச்னை செய்கிறார்கள். இதை, நாங்கள் சட்டப்படி சந்திப்போம்'' என்றார்.

நாட்டின் சக்தி வாய்ந்த நிதிஅமைச்சர் குடும்பத்துக்கும் கடலை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தும் ஏழை மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்தப் போராட்டத்தில் நியாயம் ஜெயிக்கட்டும்!

- ஜோ.ஸ்டாலின்

படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்