Published:Updated:

கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு

கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு
கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு

புதுடெல்லி, ஜூன்.17,2011

கனிமொழிக்கு ஜாமீன் வழங்க சிபிஐ கடும் எதிர்ப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக எம்.பி. கனிமொழியையும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் ஜாமீனில் விடுவிக்க இன்று எதிர்ப்பு தெரிவித்த சி.பி.ஐ., கலைஞர் டிவிக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.200 கோடி தொகை லஞ்சப் பணமேயன்றி, கடன் தொகை அல்ல என்று உச்ச நீதிமன்றத்திடம் குறிப்பிட்டுள்ளது.

ஜாமீன் கோரி மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் தாக்கல் செய்துள்ள மனுக்களை கடந்த 13-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக ஒருவாரத்தில் விளக்கம் அளிக்க சிபிஐ-க்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. ##~~##

'லஞ்சமாகப் பெற்றதாகக் கூறப்படும் ரூ.200 கோடி இப்போது எங்கு இருக்கிறது? அதனை பறிமுதல் செய்திருக்கிறீர்களா?

முறைகேடாக வழங்கப்பட்ட 13 தொலைத் தொடர்பு உரிமங்களால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இழப்பின் மொத்த மதிப்பு எவ்வளவு?
 
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை எந்த நிலையில் உள்ளது? கனிமொழியிடம் விசாரணை முடிந்துவிட்டதா?' என சிபிஐ-க்கு கேள்விகளை அடுக்கியிருந்தது, உச்ச நீதிமன்றம்.

இந்தக் கேள்விகளுக்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும் என்று கூறியிருந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், ஸ்வதேந்தர் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், "ஊழல் என்பது மனித உரிமை மீறலின் மிக மோசமான வடிவம்," என்று குறிப்பிடிருந்ததும் கவனத்துக்குரியது.

சிபிஐ விளக்கம்...

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில்,
கனிமொழியையும், சரத்குமாரையும் ஜாமீனில் விடுவித்தால், அவர்கள் அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி தங்களுக்கு எதிரான ஆதாரங்களை அழிக்கக்கூடும், சாட்சியங்களை திசை திருப்பக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கலைஞர் டிவிக்கு பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ.200 கோடி, லஞ்சப் பணம்தான் என்றும், அவர்கள் இருவரும் கூறுவதுபோல அது கடன்தொகை அல்ல என்றும் சிபிஐ தனது விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை இறுதிகட்ட நிலையை எட்டியுள்ளச் சூழலில்,  இவ்விருவருக்கும் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்குவது முறையல்ல என்றும் சிபிஐ தெரிவித்தது.

டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றமும், டெல்லி உயர் நீதிமன்றமும் கவனமாக பரிசீலித்து இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்தற்காக ஆவணங்களையும் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பு இன்று சமர்ப்பித்தது.

கனிமொழி, சரத்குமார் ஆகியோரது ஜாமீன் மனு மீதான அடுத்தகட்ட விசாரணை, வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.

நீதிபதிகள் இருவர் விலகல்...

கனிமொழியின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் திங்கட்கிழமை நீதிபதிகள் பி.சதாசிவம், ஏ.கே.பட்நாயக் ஆகியோர் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு பெஞ்ச் முன்னிலையில் நடைபெற இருந்தது.

இந்த நிலையில், இரு நீதிபதிகளும் கனிமொழி ஜாமீன் மனு வழக்கு விசாரணையில் இருந்து விலகிக்கொள்வதாக முடிவு எடுத்து, தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியாவுக்கு தகவல் அனுப்பினார்கள்.

அதைத் தொடர்ந்து, கனிமொழி ஜாமீன் மனு விசாரணைக்காக நீதிபதி ஜி.எஸ்.சிங்வி, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக் கொண்ட மற்றொரு பெஞ்ச்சை தலைமை நீதிபதி நியமித்தார்.

இந்த பெஞ்ச் முன்பாக, திங்கட்கிழமை அன்று வழக்கு விசாரணை நடைபெறும்.

நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மேற்பார்வையில்தான் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.