ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

''ராஜபக்ஷேவை கால் வைக்க விடக் கூடாது!''

மீண்டும் ஒரு தீக்குளிப்பு!

##~##

பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17. சேலம், நெத்திமேடு கரிய பெருமாள் கரடு பகுதியைச் சார்ந்த விஜயராஜ் என்ற 27 வயது ஆட்டோ டிரைவர், அதிகாலை 6.30 மணிக்கு சேலம் போஸ் மைதானத்துக்கு வந்தார். 'லட்சக்கணக்கில் தமிழர்களைக் கொலை செய்த கொலைகாரப் பாவி ராஜபக்ஷே இந்திய தேசத்துக்குள் கால் வைக்கக் கூடாது’ என்று ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டு, தான் கையில் கொண்டுவந்திருந்த பெட்ரோல் கேனில் இருந்து பெட்ரோலை உடலை ஊற்றி, தீ வைத்துக்கொண்டார். அதைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடிப்போய் அணைத்தார்கள். கவலைக்கிடமான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

 ''லட்சக்கணக்கான தமிழர்களைக் கொலைச் செய்த கொலைகாரப் பாவி ராஜபக்ஷே இந்திய தேசத்துக்குள் வரக் கூடாது. தமிழர்களுக்காக உயிர் விடுவதைப் பெருமையாக நினைக்கிறேன். ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பளம் கொடுத்து வரவேற்கும் சோனியா, மன்மோகன் சிங் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று சொன்னார் வேதனையுடன்.

''ராஜபக்ஷேவை கால் வைக்க விடக் கூடாது!''

''எனக்கு நாலு பசங்க. இவன்தான் கடைசி பையன். இவனுக்கு 27 வயசு ஆகுது. இவங்க அம்மாவுக்கு உடல் சரியில்லைன்னு ஒரு வாரமா இந்த ஜி.ஹெச்-ல வச்சிருந்தோம். அவங்க அம்மாவுக்கு சோறுகூட இவன்தான் ஊட்டி விடுவான். எங்க குடும்பத்தையே இவன்தான் பார்த்துப்பான். எனக்குக் கிடைக்கிற வருமானத்தையும் இவன் கையிலதான் கொடுப்பேன். எந்தக் கெட்டப் பழக் கமும் கிடையாது. எங்க ஏரியாவுல யாருக்கு ஒரு ஆபத்துன்னாலும் உடனே ஆட்டோவைத் தூக்கிட்டு ஓடுவான். வாடகைகூட வாங்க மாட்டான். அதனால் இவனை எங்க ஏரியாவில் எல்லோருக்கும் பிடிக்கும். அதனால்தான் எங்க ஏரியாவில் இருந்து எல்லோரும் கேள்விப்பட்டதும் ஓடி வந்துட்டாங்க. ஆடி ஓடிட்டு இருந்தவன் வெந்துகிடக்கிறானே சாமீ'' என்று தலையில் அடித்துக்கொண்டு அழுகிறார் அவரது அப்பா தங்கவேல்!

விஜயராஜின் அண்ணன் தேவராஜ், ''என் தம்பி தமிழ், தமிழர் மீது மிகுந்த பாசம் உடை யவன். நேரம் கிடைக்கும்போதெல்லாம். கட்டுரைகள், கவிதைகள் எழுதிக்கொண்டே இருப்பான். புத்தகங்கள் வாசிப்பதும், ஈழத் தமிழர்களைப் பற்றிய தலைவர்களின் கருத்துக் களை சேகரித்து வைத்திருப்பதுமாக இருப்பான். ஈழத் தமிழர் சம்பந்தமாக எந்தத் தலைவர் கூட்டம் போட்டாலும் போயிடுவான். பெரியார் பிறந்த நாள் அதுவுமா இப்படி ஒரு காரியத்தைச் செஞ்சுட்டானே? பல உயிர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்துத்தான் நாம் போராடுகிறோம். நாமே நம் உயிரை மாய்த்துக் கொள்ளலாமா?'' என்று கதறி அழுதார்.

விஜயராஜ் எழுதிய டைரியைக் கைப்பற்றி இருக் கிறது போலீஸ். அந்தக் கடிதத்தில், 'இந்திய அரசே... நீதான் தமிழர்களை அழிக்க பீரங்கி கொடுத்தாய், ரேடார் கொடுத்தாய், துப்பாக்கிபோன்ற ஆயுதங்கள் கொடுத்தாய்’ என்று ஆவேசமாகத் தொடங்கி குமுறல்களைக் கொட்டி இருக்கிறாராம்.

- வீ.கே.ரமேஷ், படம்: எம்.விஜயகுமார்