Published:Updated:

அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவிமடுப்பதில்லை

கவிஞர் இன்குலாப் ஜூ.வி. நூலகம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அவலத்தைக் கண்டும் உன் உள்ளம் துடிக்குமானால் நீ எனக்குத் தோழனே’ - என்பது சேகுவேரா சொன்னது. அப்படி நடந்து காட்டும் தோழர்களில் ஒருவர். உலகின் எந்த மூலையில் மனித உரிமைகள் பாதிக்கப்பட்டாலும், ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டாலும், அதைத் தனது எழுத்தின் மூலமாக எதிர்ப்பதுடன்... அதற்காக நடக்கும் போராட்டத்தில் முதல் ஆளாக நிற்கக்கூடிய மனிதர். அந்தப் போராட்டத்தை யார் முன்னெடுக்கிறார்கள், எந்த அமைப்பு நடத்துகிறது என்றெல்லாம் பார்க்காமல், நோக்கம் சரியானதாக இருந்தால் தன் கையையும் இணைத்துக் கொள்பவர் இன்குலாப்.

தென் ஆப்பிரிக்காவில், பாலஸ்தீனத்தில், கியூபாவில் நடக்கும் ஏகாதிபத்தியப் போக்குகளைக் கண்டிக்கக்கூடியவர்கள்கூட 30 ஆண்டுகளுக்கு முன், ஈழம் பற்றி கேளாக்காதுகளாக இருந்தனர். 'நம்முடைய கம்யூனிஸ்ட்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் எப்போதும் தூரப்பார்வைதான். கிட்டப்பார்வை கிடையாது’ என்று வெளிப்படையாக விமர்சனம் வைத்த முதல்குரல் இன்குலாப் உடையது. அத்தகைய இன்குலாப் அளித்த நீண்ட பேட்டியே இந்தப் புத்தகம்!

அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவிமடுப்பதில்லை

பிரபலம் அடைந்து விட்ட கவிஞர்கள், பரிசுகள் வாங்கத் தொடங்கி விட்ட இலக்கியகர்த்தாக்கள் நிகழ்கால அரசியல் குறித்து மறந்தும் எழுதுவது இல்லை. அதற்கு நடுநிலை என்று காரணம் சொல்வார்கள். ஆனால் அதை, 'தன்னலக்கேடயம்’ என்று குற்றம் சாட்டுகிறார் இன்குலாப். போராட் டத்தோடு ஒட்டாத கலை இலக்கியப் புனிதர்களை தனது அனைத்துப் பதில்களிலும் நளினமாகக் குத்துகிறார்.

'உங்கள் இலக்கியப் பயணம் கலகம் நிறைந்ததா... அமைதி நிறைந்ததா?’ என்று இன்குலாபிடம் கேட்கப்படுகிறது. 'அகமும் புறமும் கலகம் செய்பவன் நான். எனக்கும் அமைதி உண்டு. ஆனால், அது ஒவ்வொரு போராட்ட முயற்சிக்கு முன்னும் பின்னுமாக இருக்கும். பெரும் கலகத்தில் நான் முகம் காட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், அதன் சொற்களில் எனதும் ஒன்று’ என்று கம்பீரமாகச் சொல்லும் துணிச்சல் இவருக்கு மட்டுமே உண்டு. உதட்டுச் சாயமாக பலர் இருக்க இவர் மட்டுமே ரத்தச் சிவப்பாக இருக்கிறார்.

மார்க்சியம், பெரியாரியம், தலித்தியம், தமிழ்த் தேசியம், ஈழப் போராட்டம் ஆகியவற்றை மிகச்சரியான திசையில் பார்க்க இவரது பதில்கள் பயன் படுகின்றன. அனைத்துக்கும் மக்களை மட்டுமே அடித்தளமாக நினைக்கிறார். 'ஒரு போராட்டம் வன்முறையாகத் திரட்சி கொள்வதைத் தடுக்கும் ஆற்றல் மக்களிடம்தான் உள்ளது. போராட்டத்தின் நியாயத்தை மக்கள் உரத்துப் பேச வேண்டும். நியாயத்தின் பக்கம் வெகுமக்கள் திரளும் பங்கேற்புதான் எந்த வன்முறையையும் தவிர்க்க உதவும்’ என்கிறார்.

'காலம், கவிஞனைப் புனைகிறது. கவிஞன், காலத்தைப் புனைகிறான். புதிய காலத்தின் குரல்களாக ஒலித்த பாரதியையும் பாரதிதாசனையும் காட்டாமல், இந்தக் காலத்தில் எந்த ஒரு கவிஞனையும் அடையாளம் காண முடியாது’ என்று சொல்லும் இன்குலாப், இந்தக் காலத்தின் குரலாக அடையாளமாக இருக்கிறார்!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு