Published:Updated:

''டாக்டர் இல்லீங்க... டுபாக்கூர்!''

பவர் ஸ்டார் வளர்ந்த கதை

பிரீமியம் ஸ்டோரி
##~##

'லத்திகா’ திரைப்படத்தின் மூலம் தமிழகம் முழுக்க காமெடிப் பீஸாகப் பேசப்பட்ட 'பவர் ஸ்டார்’ சீனிவாசன், இப்போது பண மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கிறார். 

அவரது கைது குறித்து சினிமா ஆட்கள் சிலரிடம் பேசினோம். ''சீனிவாசனுக்குப் பூர்வீகம் மதுரை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மருத்துவ அணியில் இணைச் செயலாளராக இருந்தார். இவருக்கு மூன்று மனைவிகள். இரண்டாவது மனைவிக்குப் பிறந்த மகள் பெயர்தான் லத்திகா. அவர் பெயரில்தான் 'லத்திகா’ என்ற படம் எடுத்து, தானே ஹீரோவாக நடித்தார். ஆடியோ வெளியிடும் விழாவை கமலா தியேட்டரில், திருமாவளவன் தலைமையில் நடத்தினார். மகாலட்சுமி தியேட்டரில் 11 மணிக் காட்சியில் 'லத்திகா’ படத்தை வாரம் 20,000 ரூபாய் சொந்தப் பணம் கட்டி 175 நாட்கள்

''டாக்டர் இல்லீங்க... டுபாக்கூர்!''

ஓட்டினார். அதுபோல இன்னொரு திரையரங்கிலும்  பணியாளர்களுக்கு தினமும் சிக்கன் பிரியாணி வாங்கிக்கொடுத்து 50 நாட்கள் ஓடவைத்தார்.      

'லத்திகா’வுக்குப் பிறகு, சீனி ஹீரோவாக நடிக்கும் 'ஆனந்த தொல்லை’, 'திருமா (எ) திருமாணிக்கம்’ படங்கள் படப்பிடிப்பில் இருக்கின்றன. அஜீத், விஜய் ஜோடியாக நடித்த சங்கவி, சீனிக்கு நாயகியாக நடித்து முடித்துள்ள படம் 'தேசிய நெடுஞ்சாலை’. சீனி முதலில் சின்ன கேரக்டரில் நடித்து வெளிவந்தது 'மண்டபம்’ திரைப்படம். அந்தப் படத்தை இயக்கிய செந்தமிழ்அரசு என்ற புண்ணியவான்தான் முதன்முதலில் சீனிக்கு 'பவர்ஸ்டார்’ பட்டத்தை பத்திரிகை விளம்பரத்தில் வெளியிட்டு, தமிழ் சினிமா ஹீரோக்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார். அவரே இப்போது 'மன்னவனே’ படத்தில் சீனியை நடிக்க வைத்துள்ளார்.

சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து, அதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிறைக்குச் சென்றவர்தான் சீனி. அவர் சென்னை அண்ணா நகரில் மட்டும் ஆறு அலுவலகங்கள் வைத்து இருக் கிறார். அங்கெல்லாம் ஆரம்பத்தில், 'பாபா டிரேடிங் கம்பெனி’ என்ற பெயரில் ஹெர்பல் மருந்துகளை ஏற்றுமதி செய்து வந்தார். அதை இப்போது நிறுத்தி விட்டார்.

தன்னைப் பார்க்க வரும் நபர்களை சீனி சந்திக்கும் விதமே அலாதியாக இருக்கும். யார் கேட்டாலும், சரியாக 10 மணிக்கு வரச்சொல்லி அப்பாயின்மென்ட் கொடுப்பார். தினமும் கிட்டத் தட்ட 20 நபர்களுக்கு 10 மணி சந்திப்புக்கு அழைப்பு அனுப்புவார். அப்படி வருபவர்களை, தனித்தனியாக வெவ்வேறு அறைகளில் பிரித்து அமர வைப்பார்கள். சீனிக்கு நெருக்கமான புள்ளிகளை மட்டும் அவருடைய பெர்சனல் அறைக்கு வெளியே இருக்கச் செய்வார்கள். சாய்பாபா படத்துக்கு முன், ஊதுபத்தி மணம் கமழ, ஸ்பீக்கரில் ஓம் மந்திரம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

சீனி ஆபீஸில் இருக்கிறாரா... இல்லையா? என்பது காத்திருக்கும் நபர்களுக்குத் தெரியாது. 12 மணிக்குத்தான் ஆபீஸுக்கு வருவார். யார் கண்ணிலும் படாமல் அறைக்கு எப்படிப் போவார் என்பது, அவரது ஊழியர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அவருடைய மேஜை டிராயரில் 1,000, 500 ரூபாய் சலவை பண்டல்கள் கண் சிமிட்டும். மருந்துக்குக்கூட 100 ரூபாய், 50 ரூபாய் தாள்கள் இருக்காது. புகழ்ந்து போஸ்டர் அடிப்பவர்கள், ரசிகர் மன்றம் தொடங்கும் புள்ளிகள் போன்றவர்களை முதலில் தனித்தனியாக அழைத்து... பணத்தைக் கொடுத்து அனுப்புவார். முதல் முறையாகக் கடன் கேட்டு வருபவர்களை நன்றாகக் கவனித்து அனுப்புவார். பலரை சந்திக்காமலேயே, 'பிஸி’ என்று விரட்டுவார்கள். திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்பவர்களுக்கு நிச்சயம் தனியே அழைத்து 'கவனிப்பு’ உண்டு. மதியம் சாப்பிடச் செல்பவர் அடுத்து 7 மணிக்குதான் ஆபீஸுக்குத் திரும்புவார். ஒரு சிலரை அத்தனை நேரமும் காத்திருக்கச் சொல்வார்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடந்த போது தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகரன், கேயாரை எதிர்த்து சீனிவாசன் போட்டியிட்டார். தயாரிப் பாளர்கள் சிலரின் வீடுகளுக்கு தேடிச் சென்று பணம் பட்டுவாடா செய்தார் என்றாலும் மொத்தமே 16 ஓட்டுக்கள் மட் டுமே வாங்கித் தோற்றார்.  

அண்ணா நகரின் இன்னொரு பகுதியில் 'லத்திகா கிளினிக்’ நடத்தி வருகிறார். ஆனாலும், சீனி தனது பெயருக்குப் பின்னே டாக்டர் பட்டம் போட்டுக் கொள்வது இல்லை. ஏன் தெரியுமா? சீனிவாசன் எம்.பி.பி.எஸ். படிக்கவில்லை. அக்குபஞ்சர் மற்றும் ஹோமியோபதி பற்றி அரைகுறையாகப் படித்துத் தெரிந்து கொண்டவர். இப்போது, இவர் மீது பதிவான வழக்கையும் தனது பவர் காட்டி ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்'' என்கிறார்கள்.

சீனிவாசனின் உதவியாளரான செல் வாவிடம் பேசினோம். ''பவர் ஸ்டார் முறைப்படி படித்த அக்குபஞ்சர் டாக்டர். தேவை இல்லாம அவரைப்பத்தி வதந்தி களைப் பரப்பி விடுறாங்க. பவர் ஸ்டார் மீது இப்போது தொடரப்பட்டிருப்பது அனைத்துமே பொய் வழக்குகள். கூடிய சீக்கிரமே நீதிமன்றத்தில் தன்னை நிரபராதி என்று நிரூபித்து வெளியில் வருவார். அண்ணனுக்காக உயிரையும் கொடுக்கக் கூடிய லட்சோப லட்சம் ரசிகர்கள் இருக்கும் வரை அவரை யாராலும் எதுவும் செய்ய முடியாது'' என்று கொந்தளித்தார். காமெடிப் படம் என்று நினைத்தால் திகில் படமாக இருக்கிறதே..!

- நமது நிருபர்கள்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு