Published:Updated:

புண்ணியம் தேடி முக்திநாத் போனால்...

திக்திக் பயண அனுபவம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'விமான விபத்து’, 'பாலம் அறுந்து பயணிகள் பலி’ என்று, நேபாளம் பற்றி அடிக்கடி செய்திகள் வருவது உண்டு. அந்த பயம் ஒரு ஓரத்தில் இருந்தாலும் பக்திப் பயணமாக நேபாளம் சென்றோம். அங்கே விபத்து நேராமல் இருப்பதுதான் ஆச்சர்யம் என்று சொல்லும் அளவுக்கு, நிலவரம் அத்தனை களேபரமாக இருக்கிறது. 

பொக்காராவில் கிளம்பி ஜோம்சொம் என்ற இடத்துக்கு விமானத்தில் போய், அங்கே இருந்து முக்திநாத் ஆலயத்துக்குச் செல்வதாகத் திட்டம். இந்த முக்திநாத், வைணவத் திவ்ய தேசங்கள் 108-ல் ஒன்று. இந்தியாவுக்கு வெளியே இருக்கும் திவ்ய தேசம் இது ஒன்றுதான்.

நாங்கள் சென்ற நேரத்தில், மோசமான வானிலை காரணமாக விமான சர்வீஸ்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தன. அதனால், சாலை வழியே பயணம் செய்தோம். சுமார் 25 நிமிடங்களில் விமானம் செல்லும் இடத்துக்குச் சாலை வழியே செல்வதற்கு 12 மணி நேரம் என்பதே மிரட்டியது. மேலும், விமானப் பயணம் ரத்து என்றவுடன் கூடுதலாக ஒவ்வொரு நபருக்கும் 4,000 ரூபாய் தந்தால் மட்டுமே சாலை வழிப் பயணத்துக்கு ஏற்பாடு செய்ய முடியும் என்று எங்கள் பயணத்தை ஒழுங்குசெய்த ஏஜென்ட், கூடுதல் பணத்தை அந்த இடத்திலேயே பிடுங்கிக் கொண்டதும் அதிர்ச்சியாக இருந்தது.

புண்ணியம் தேடி முக்திநாத் போனால்...

ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு இருந்த காரணத்தால், ஒரு குறிப்பிட்ட இடம் வரை ஒரு வாகனத்தில் போய் இறங்க வேண்டும். அங்கே இருந்து நடந்து போய் மறுபுறம் நிற்கும் இன்னொரு வாகனத்தில் ஏறிப் பயணத்தைத் தொடர வேண்டும். இப்படி ஒவ்வொரு வாகனத்துக்கும் தனித்தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது.

நம் ஊர் மினி பஸ் போன்ற வாகனங்கள்தான் அங்கு போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. பயணச் சீட்டு என்பதெல்லாம் நடைமுறையில் இல்லை. டூரிஸ்ட்களிடம் எவ்வளவு பணம் பிடுங்க முடியுமோ, அவ்வளவு பிடுங்குகிறார்கள். எந்த ஒரு வரைமுறையும் கிடையாது. ஒரு வாகனத்தில் இவ்வளவு பேர்தான் ஏற வேண்டும் என்ற வரைமுறையும் சுத்தமாகக் கிடையாது. 12 பேர் மட்டுமே அமரக்கூடிய வாகனத்தில் 30-க்கும் மேற்பட்டவர்களை சர்வ சாதாரணமாக அடைத்துச் செல்கிறார்கள்.

ஆண்டுக்கணக்கில் எந்தவிதமான பராமரிப்பையும் பார்த்திராத, குண்டும் குழியுமாக, மிகவும் சரிவான ஆபத்தான சாலை. ஒரு பக்கம் மலைத்தொடரும் மறுபக்கம் பல நூறு அடி ஆழத்தில் ஆக்ரோஷமாக ஓடும் கண்டகி ஆறும் பயணம் முழுக்க நம்மைத் தொடர்கிறது. சாலைகளுக்குப் பாதுகாப்புச் சுவர் பெரும்பாலான இடங்களில் இல்லவே இல்லை. சில இடங்களில் மரப்பலகைகளால் ஆன பாலத்தின் மீது வாகனம் செல்லும்போது... உண்மையிலேயே மரண பயம் கவ்விக்கொள்(ல்)கிறது.

சில இடங்களில் மழையின் காரணமாக முற்றிலும் சிதிலம் அடைந்த மலைப்பாதையில், வாகனம் ஏற முடியாமல் டயர் சேற்றில் புதைந்து சுழல்கிறது. அந்தச் சமயங்களில் பளு காரணமாக வாகனம் மெள்ளப் பின்நோக்கி நகர்கிறது. அந்த தருணத்தில் பிரேக் பிடிக்கா விட்டால்... நினைத்தாலே நடுங்குகிறது. ஆங்காங்கே இறங்கி, கிலோ மீட்டர் கணக்கில் நடந்தும் கடக்க வேண்டி இருக்கிறது. இடையில் வாகனம் பஞ்சர் ஆகிவிட்டது. ஸ்டெப்னிகூட அந்த வாகனத்தில் இல்லை. கொஞ்சநேரம் காத்திருந்து அடுத்து வந்த வாகனத்தில் ஸ்டெப்னி இரவல் வாங்கிப் பயணம் தொடர்ந்தது.

ஜோம்சம் சென்று அடைந்ததும் கோயிலுக்குச் செல்வதற்காக இன்னொரு வாகனம் மாற வேண்டும். இரண்டு கி.மீ தூரத்துக்கு முன்னாலேயே நிறுத்தி நடக்க வைக்கிறார்கள். அப்போதுதான் சாலை ஓரக்கடைகளில் வியாபாரம் ஆகுமாம். இதற்காக முதியவர்கள் என்றும் பார்க்காமல் பலரையும் நோகடிக்கிறார்கள். தாகத்துக்கு ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கினால், நம்ம ஊர் டாஸ்மாக் பாரே தேவலை என நினைக்கத் தோன்றுகிறது. ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை 50 ரூபாய். தொட்டதுக்கு எல்லாம் பணத்தைப் பழுக்க வைக்கிறார்கள்.

நாங்கள் திரும்பி வரும்போது இந்திய - நேபாள எல்லையில் சோதனை நடந்தது. அங்கே இருந்த ஒரு நபர் (பெயர் அட்டை எதுவும் இல்லை) எங்கள் உடமைகளைச் சோதனை செய்ய வேண்டும் என்று வாங்கி வைத்துக் கொண்டார். அவருடைய ஏஜென்ட் போல இருந்த லுங்கி கட்டிய ஒரு பேர்வழி, 'ஆளுக்கு 50 ரூபாய் கொடுத்தால் நோ செக்கிங். இல்லையென்றால் விடிய விடிய நடுத்தெருவில் நிற்க வேண்டியதுதான்’ என்று உரக்கவே சொன்னார். நாங்கள் ஐந்து பேருக்கு 100 ரூபாய் கொடுத்தும், அவர் வீசி எறிந்துவிட்டு மோசமாகத் திட்டத் தொடங்கினார். அதைக் கேட்க மனம் இல்லாமல், அவர் கேட்ட தொகையைக் கொடுத்தோம். அதன் பிறகே 'செக்கிங்(?)’ முடிந்தது. கடைசி நிமிடத்தில் ரயிலைப் பிடித்தோம்.

பகவானைத் தரிசித்த திருப்தி இருந்தபோதும், பராமரிப்பே இல்லாத ஆபத்தான சாலைகள், பகல் கொள்ளை மற்றும் ராக் கொள்ளை அடிக்கும் மக்கள் எல்லாம் சேர்ந்து பக்திப் பயணத்தை திகில் அனுபவமாக்கி விட்டன.

இனி, நேபாளம் செல்பவர்கள் ஜாக்கிரதையாகச் செல்லவும்!

- லதானந்த்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு