Published:Updated:

மீண்டும் வருகிறது குழப்பத் தேர்வு?!

தடுமாற்றத்தில் ஆசிரியர்கள்

பிரீமியம் ஸ்டோரி
##~##

6 லட்சம் ஆசிரியர்கள் எழுதி 2,000 பேர் பாஸ் ஆன தேர்வு மீண்டும் நடத்தப்படுகிறது! பல்வேறு சிக்கல்கள், குழப்பங்களுக்கு இடையே மறுதேர்வு நடத்த தயாராகி விட்டது, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம். ஒரு மாணவி தொடர்ந்த வழக்கில், செப்டம்பர் 21-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த யோசனையை ஏற்றுக்கொண்டு, புதிய தேர்வர்களையும் அனுமதித்து, அக்டோபர் 14-ம் தேதி தேர்வு நடத்த இருக்கிறது. ஆனால், நடந்து முடிந்த தேர்வில் தீர்க்கப்படாத குழப்பங்களே இன்னும் இருப்பதுதான், பலரையும் புலம்ப வைத்து இருக்கிறது. 

திருவண்ணாமலையைச் சேர்ந்தவரும் இப்போது பணியில் இருப்பவருமான ஆசிரியர் ராமகிருஷ்ணன், ''நடந்து முடிந்த தேர்வில் 2,448 பேரைத் தவிர தேர்வு எழுதிய ஆசிரியர்கள் யாரும் தேர்ச்சி அடைய​வில்லை. அதனால், 'இப்படிப்பட்ட ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் கல்வித் தரம் என்னாவது?’ என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். நடந்து முடிந்த தேர்வு, ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்​பதற்காக நடந்த தேர்வே அல்ல. தகுதியுள்ள ஆசிரியர்களைத் தட்டிக் கழிப்பதற்கான தேர்வுதான். இதுதான் பாடத்திட்டம், இதுதான் மாதிரி வினா என்று முன்கூட்டி வெளியிட்ட எதையுமே, தேர் வாணையம் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. 150 கேள்விகளில் 66 கேள்விகள் பாடத்திட்டத்துக்கு வெளியில் இருந்தே கேட்கப்பட்டன. ஒரு சதவிகிதம் பேர்கூட தேர்ச்சி பெறவில்லை என்றபோதே, தேர்வில் குழப்பம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

மீண்டும் வருகிறது குழப்பத் தேர்வு?!

கணக்குப் பாடத் திட்​டத்தில் கேட்கப்பட்ட 18 கேள்விகளுக்கு, அவர்கள் கொடுத்திருக்கும் 35 வினாடி​

மீண்டும் வருகிறது குழப்பத் தேர்வு?!

களில் எந்தக் கணித மேதை​யாலும் பதில் அளிக்கவே முடியாது. 23 கேள்விகளுக்கு அவர்கள் கொடுத்திருக்கும் பதில்கள், ஒவ்வொரு வினாத் தாளுக்கும் மாறுபட்டு இருக்கிறது. இப்படி ஒரு குழப்பமான தேர்வை நடத்திவிட்டு அதை எழுதிய அப்பாவிகளைக் குறை சொல்வது என்ன நியாயம்? அடுத்த தேர்வு எப்படி நடக்கும் என்பது குறித்து இதுவரை எந்தத் தெளிவும் தரப்படவில்லை'' என்று ஆவேசமானார்.

இந்தத் தேர்வில் இருந்த குழப்பங்​களைச் சுட்டிக்காட்டியும், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் பணிகளை வழங்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்​பட்டிருக்கின்றன. அதில் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்த மதுரை நீதிமன்றம், 'தேர்ச்சி பெற்றவர்களைத் தவிர மீதி தேவைப்படும் ஆசிரியர்களை, பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க மத்திய அரசை அணுகி அனுமதி பெற வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது. இன்னொரு மாணவி தொடர்ந்த வழக்கில், 'வழக்கு முடியும் வரை அவருக்கு ஒரு பணியிடத்தைக் காலியாக வைக்க​வேண் டும்’ என்றுசொல்லி இருக்கிறது. ஆனால், இதுபோன்ற எந்த உத்தர​வையும் தேர்வாணையம் கண்டு​கொள்​ளாமல் அடுத்த தேர்வை நடத்த ஏற்பாடு​களைச் செய்கிறது என்றும் குற்றம் சாட்டுகிறார்கள்.

பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் தலைமை நிலையச் செயலாளர் செல்வம், ''நடந்து முடிந்த தேர்வுக்கு தோராயமான கீ ஆன்சர் வெளியிட்டனர். ஆனால், சரியான பதில் எது என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. அதேபோல நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே, இர வோடு இரவாகத் தேர்வு முடி வுகளை வெளியிட்டனர். கட்டாயக் கல்வி சட்டத்தில் மறு தகுதித்தேர்வு குறித்த எந்த அறிவிப்பும் கிடையாது. ஆனால், நடத்தத் தெரியாமல் ஒரு தேர்வை நடத்திவிட்டு, அதில் தாங்கள் செய்த எல்லாத் தவறுகளையும் முதல்வரிடம் மறைத்துவிட்டு, 'நேரம் போதவில்லை, அதனால்தான் ஆசிரியர்களால் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை’ என்று சொல்லி அனுமதி வாங்கி, மறுதேர்வு நடத்தப்போகிறார்கள். இதையாவது குழப்பங்கள் இல்லாமல் நடத்த வேண்டும். அதே நேரத்தில் இந்தச் சட்டம் அமல் ஆவதற்கு முன் அறிவித்திருந்த, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்திருந்த அனைவருக்கும் பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்து, அவர்களை ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தத் தகுதித் தேர்வில் வெற்றிபெறச் சொல்ல வேண்டும்'' என்கிறார்.

''இத்தனை குழப்பங்கள் இருந்தாலும் 150-க்கு 142 மார்க் எடுத்திருக்கிறார்களே..?'' என்ற நமது கேள்விக்கு, ''அதுக்கு சான்ஸே இல்லைங்க. ஏதோ முறைகேடு நடந்திருக்கிறது.அவர்களை மீண்டும் மறுதேர்வு எழுதச் சொன்னால், உண்மை தெரிந்துவிடும்'' என்கிறார்கள்.

ஆசிரியர் தேர்வாணையத்தின் முக்கிய அதிகாரியிடம் பேசினோம். ''தேர்வு முறை, எந்தப் பாடத்தில் இருந்து எவ்வளவு கேள்விகள் வரும் போன்ற விஷயங்கள்தான் மாடல் பேப்பரில் இருக்கும். அதையே எடுத்​துக் கொண்டு படித்தால் அது எப்படி சரியாகும்? எட்டாவது வரையிலான கல்விநிலைத் தொடர்பான தேர்வாக இது இருந்தாலும் ஆசிரியர்களின் அறிவுத்திறன் அதிகமாக இருக்க வேண்டும் என, 12 வகுப்பு தரத்தின் அடிப்படையில் கேள்விகள் அமைய வேண்டும் என சட்டம் சொல்கிறது. அந்த அடிப்படையில் கேள்விதாள்கள் வடிவமைக்கப்பட்டன. வெறுமனே விடையை எழுதிவிடக்கூடாது. புத்திக்கூர்மையையும் பயன்படுத்தி சரியான விடை எழுதும் வகையில்தான் கேள்வித்தாள் தயாரிக் கப்பட்டது. கணக்குப் பாடத்தில் 6 கேள்விகளுக்கு மட்டுமே பதில் எழுதுவதற்கு நேரம் போதவில்லை. நேரம் போதவில்லை என்ற பிரச்னையை தவிர வேறு எந்தப் புகாரும் சொல்ல முடியாது. நீதிமன்ற உத்தரவுகள் பார்வைக்கு வரவில்லை. வந்தால் பரிசீலிப்போம். தேர்வுத்தாள் தயாரிப்பு தொடங்கி திருத்தம் வரை எல்லாம் மிக ரகசியமாக செய்யப்படுகின்றன. இதனால் எந்தத் தவறும் நடக்க வாய்ப்பு கிடையாது'' என்றார்

இந்தத் தேர்வையாவது குழப்பம் இல்லாமல் நடத்தினால் சரிதான்!

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு