தஞ்சாவூரில், ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து வேன் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களைக் தஞ்சாவூரில் போலீஸார் பறிமுதல் செய்தனர். கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்கு கஞ்சா கடத்துப்படுவதையும், கஞ்சாவிற்கு பதில் இலங்கையிலிருந்து தங்கக் கட்டிகளாக திரும்ப பெற்று வருவதையும் கண்டுபிடித்தனர். மேலும் இது தொடர்பாக 14 பேர் கொண்ட கும்பலை கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர் சரகத்தில் கஞ்சா புழக்கம் அதிகளவில் இருப்பதை தடுக்கும் வகையில் அடிக்கடி சோதனை நடத்தி, கஞ்சா கடத்தல் கும்பலை போலீஸார் கைது செய்வதுடன் கோடி கணக்கில் மதிப்புடைய கஞ்சா மூட்டைகளையும் பறிமுதல் செய்கின்றனர். ஆனாலும் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்த முடியவில்லை. கஞ்சா கடத்துபவர்கள், வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் என அனைவரையும் கூண்டோடு பிடித்தால் முழுமையாக கட்டுப்படுத்தலாம் என தஞ்சாவூர் சரக டிஐஜி கயல்விழி அதிரடி நடவடிக்கையில் இறங்கினார். அத்துடன் கஞ்சா கடத்தல் கும்பலை பிடிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில், எஸ்.ஐ டேவிட் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
போலீஸ் டீம் தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில், நேற்று நள்ளிரவு தஞ்சாவூருக்கு வந்த மினி லாரியை தனிப்படையினர் நிறுத்தி சோதனையிட்டனர். பீகாரிலிருந்து வந்த லாரியில் அனல் மின்நிலையத்திற்கு பயன்படுத்தக்கூடிய பொருள்கள் ஏற்றிவந்த நிலையில் அவற்றுக்கு இடையே மறைத்து வைத்து 250 கிலோ கஞ்சா பொட்டலங்கள் கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர்.

வேனில் இருந்தவர்களிடம் விசாரணையை தொடர்ந்த நிலையில் கஞ்சா கடத்தல் தொடர்பாக 14 பேர் கொண்ட கும்பலையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் மதிப்பு ரூ 1.25 கோடி மதிப்பு கொண்டது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன், கார்கள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். கஞ்சா மற்றும் வாகனங்கள் என அதன் மொத்த மதிப்பு ரூ.2 கோடி இருக்கும் என தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடத்தல் கும்பலை உசிலம்பட்டியைச் சேர்ந்த சுகபெருமாள்(42), முத்துலிங்கம் (31), சேலம் மாவட்டம் மேட்டூரைச் வெள்ளையன் (29) சக்திவேல்(38), ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு (30), விசாகப்பட்டினத்தை சேர்ந்த கணபதி என்கிற கோவிந்தா (27) சோபா நாகராஜன்(31), திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சேர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ்(27), அரிய மங்கலத்தைச் சேர்ந்த முருகன்(28) திருவாரூர் மாவட்டம், சோழங்கநல்லூரைச் சேர்ந்த ராஜா(43) ஜாம்பவானோடையைச் சேர்ந்த வீரகணேசன்(28) செந்தில்(27), சென்னை தி. நகரைச் சேர்ந்த உமா மகேஸ்வரன் (51), கம்பத்தைச் சேர்ந்த ராமன்(36) ஆகிய 14 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தனிப்படை போலீஸ் டீமில் பேசினோம், ``கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக தனிப்படை டீம் தீவிர விசாரணை நடத்தினோம். ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் பாடகிரி மலையிலிருந்து கஞ்சா கடத்தி வரப்படுவதை கண்டு பிடித்தோம். தஞ்சை சரக பகுதியிலிருந்து ஒருவர் அடிக்கடி விசாகப்பட்டினத்துக்கு சென்று வருவதை கண்டுபிடித்துடன் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அந்த நபரை பின்தொடர்ந்தோம்.
உசிலம்பட்டியை சேர்ந்த சுகபெருமாள் என்பவர் பாடகிரி மலையில் தங்கியிருந்தபடி மலையிலிருந்து கஞ்சா இறக்கி வந்து தமிழகத்துக்கு காய்கறி உள்ளிட்ட பொருள்களில் ஏற்றி வரும் டிரைவர்களிடம் கமிஷன் தருவதாக ஆசை வார்த்தை கூறி பொருள்களுக்கு இடையே மறைத்து வைத்து கஞ்சா பொட்டலங்களை ஏற்றி அனுப்பி வைப்பான்.

விசாகப்பட்டினத்திலிருந்து கிருஷ்ணகிரி, திருப்பதி வழியாக தமிழ்நாட்டுக்குள் வந்து நாகை மாவட்டத்திலுள்ள வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவானோடை உள்ளிட்ட பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
ஜாம்பவானோடையிலிருந்து கடல் மார்க்கமாக படகு மூலம் இலங்கைக்குக் கடத்தி செல்லப்படுவதையும் கண்டு பிடித்தோம். விசாகப்பட்டினத்தில் ஒரு கிலோ ரூ.3,000 விற்கப்படும் கஞ்சா தமிழகத்தில் ரூ 5,000, இலங்கையில் ரூ.50,000 என விற்கப்படுகிறது. அத்துடன் இலங்கையிலிருந்து உலக நாடுகளுக்கும் கடத்தி செல்லப்படுகிறது.

இலங்கைக்கு கஞ்சாவை அனுப்பும் கும்பல் கஞ்சா வாங்குபவர்களிடம் பதிலுக்கு தங்க கட்டிகளாக வாங்கி கொள்கின்றனர். மேலும் பணமாகவும் பெற்று கொள்கின்றனர். அதிரடி நடவடிக்கையின் மூலம் இதுவரை இல்லாத அளவுக்கு கஞ்சா கடத்துபவர்கள் முதல் விற்பவர்கள் வரை அனைவரும் கைது செய்திருப்பதாக தெரிவித்தனர்.