ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

பகத்சிங் சிறைக் குறிப்புகள்

பகத்சிங் சிறைக் குறிப்புகள்

 தொகுப்பு: பூபேந்திர ஹூஜா

தமிழில்: சா.தேவதாஸ், அசோகன் முத்துசாமி

கால் நூற்றாண்டுகள் மட்டுமே உடலால் வாழ்ந்த பகத்சிங், ஒரு நூறாண்டு கடந்தும் உணர்வால் வாழ்ந்துகொண்டு இருக் கிறார்!

''உயிருள்ள பகத்சிங்கை விட, உயிரற்ற பகத்சிங் பிரிட்டிஷ் ஆதிக்கவாதி களுக்கு ஆபத்தானவன். நான் தூக்கிலிடப்பட்ட பின்னர் என்னுடைய புரட்சிகரக் கருத்துக்களின் நறுமணம் நம்முடைய இந்த அழகான தேச மெங்கும் பரவும். இளைஞர்களுக்கு வெறியூட்டி சுதந்திரம் மற்றும் புரட்சி ஆகியவற்றின் மீது அவர்களைப் பித்துகொள்ளச் செய்யும். அது, பிரிட்டிஷ் ஏகாதிபத்திவாதிகளின் அழிவை விரைவில் கொண்டுவரும். இது என்னுடைய உறுதியான நம்பிக்கை'' என்று, பகத்சிங்கின் தோழர் சிவவர்மா எழுதினார். பிரிட்டிஷ் அரசுக்கு மட்டும் அல்ல, அதற்குப்பின் விடுதலை இந்தியாவில் ஏற்பட்ட சீரழிவுகளுக்கு எதிராகப் போராடவும் பகத்சிங்கின் பிம்பம் பயன்பட்டுக்கொண்டு இருக்கிறது.

பகத்சிங் சிறைக் குறிப்புகள்

'கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்கு உரத்த குரல் தேவைப்படுகிறது’ என்ற பிரெஞ்சு தியாகி வால்லியன்ட்டின் வார்த்தைகள் பகத்சிங்குக்குப் பிடித்தவை. காது கேளாத பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வெடிகுண்டு மொழியில் பகத்சிங் பேசினார். இதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது படித்தார், படித்தார், படித்துக்கொண்டே இருந்தார். அந்தத் தனிஅறையில் அமர்ந்து உலகத்தைப் படித்தார். அனைத்துப் புத்தகங்களில் இருந்தும் குறிப்புகள் எடுத்தார். பொதுவுடைமைச் சமூகத்தில் இருந்து நவீன முதலாளித்துவச் சமூகம் வரையிலான வளர்ச்சி குறித்து ஒரு புத்தகத்தை பகத்சிங் சிறையில் இருந்து எழுதியதாகச் சொல்வார்கள். ஆனால், அந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. அந்தப் புத்தகத்தை எழுதுவதற்காக எழுதிய குறிப்பேடு மட்டும் கிடைத்தது. அதுவே இந்தப் புத்தகம்.

பொதுவாகவே, ஆயுதம் தாங்கிகள் அறிவுபூர்வ விவாதங்களில் ஆர்வம் செலுத்துவது இல்லை என்றும், தத்துவார்த்த கருத்துக்களில் அக்கறை செலுத்துவது இல்லை என்றும், ஆயுதங்கள், வெடிகுண்டுகள் மீது மட்டுமே தீராத காதல் கொண்டவர்கள் என்றும் குற்றம் சாட்டுவார்கள். ஆனால், 80 ஆண்டுகளுக்கு முன், உலகத்தின் கவனத்தை ஈர்த்த அனைத்துப் புத்தகங்களையும் சிறைக்குள் வரவழைத்து வாசித்து முடித்த பெரும் மேதமை பகத்சிங்குக்கு இருந்துள்ளது மலைப்பை ஏற்படுத்துகிறது. அரசு, ஆட்சி, அதிகாரம், தியாகம், தூக்கு, திருமணம், குடும்பம், காதல்... என பலதரப்பட்ட புத்தகங்களையும் தேடித்தேடிப் பகத்சிங் படித்திருக்கிறார்.

'உயிர் வாழும் பொருட்டு சாக்கடையில் மீன் பிடிப்பவனும், சில்லிடும் குளிர்கால இரவில் தெருவோரப் பீப்பாய்களுக்குப் பின்னே ஒதுங்குபவனும் ஆன ஒருவனுக்கு ஒழுக்கம், மதம் என்பன வெறும் வார்த்தைகளே’ என்ற ஹொரேஸ் க்ரீலியின் மேற்கோளில் இருந்து 'எதிராளி வலுவானவன் என்று யோசிப்பதே வெற்றிக்கான முக்கியத் தடை’ என்று, ட்ராஸ்கி சொன்னது வரை பொக்கிஷங்களாகவே இருக்கிறது பகத்சிங்கின் குறிப்பேடு.

ஒரு போராளியின் செயல் மட்டுமல்ல, டைரியும் ஆயுதமாகத்தான் இருக்கும் என்பதற்கு உதாரணம் இந்தப் புத்தகம்!

- புத்தகன்