Published:Updated:

‘சுவாசிக்க முடியவில்லை..!'- ஒருதலை காதலால் வலிகளுடன் முடிந்த மகாராஷ்டிர இளம் பெண்ணின் வாழ்க்கை

Representation Image
Representation Image

மகாராஷ்டிராவில் கடந்த ஒருவாரமாக தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் இன்று உயிரிழந்தார்.

திருமணமான நாக்ரலேவின் தவறான எண்ணத்தால் தீக்கிரையாகியுள்ளார் மகாராஷ்டிராவை சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர். கடுமையான தீக்காயங்களுடன் மருத்துமனையில் கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 6.55 மணிக்கு உயிரிழந்துள்ளார். மருத்துவ மொழியில் அவரது மரணத்துக்கு காரணம் செப்டிசிமிக் ஷாக் (septicemic shock) என்கின்றனர் மருத்துவர்கள். ரத்த அழுத்தம் குறைவு ஏற்பட்டு உடல் உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் செல்லாததால் உயிரிழந்துள்ளார்.

Representation Image
Representation Image

25 வயதுமதிக்கதக்க அந்தப்பெண் தன் கல்லூரி படிப்பை நிறைவு செய்துவிட்டு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்துள்ளார். கல்லூரிக்கு பேருந்தில் செல்வதுதான் அவரது வழக்கம். பிப்ரவரி 3-ம் தேதி கல்லூரிக்கு செல்வதற்காக பேருந்தில் பயணமாகியுள்ளார்.

பேருந்தைவிட்டு இறங்கி கல்லூரியை நோக்கி நடந்து சென்றபோது அந்தப்பெண்ணுக்கு முன்பே அறிமுகமாகியிருந்த நாக்ரலே என்பவர் இடைமறிந்து அந்தப்பெண்ணின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அங்கிருந்த பொதுமக்களும் மாணவிகளும் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 40 சதவிகித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

`சிறுவயது நட்பு; முறையற்ற நடவடிக்கை!’-விலகிச் சென்ற பெண் விரிவுரையாளரைக் கொல்ல முயன்ற எலெக்ட்ரீசியன்

இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் நாக்ரலே கைதானார். “இளம்பெண்ணும், நாக்ரலே என்பவரும் பள்ளியில் இருந்தே ஒன்றாக படித்துவந்துள்ளனர். இளம்பெண் நன்றாக படிக்கக்கூடியவர். அவர் பள்ளிப்படிப்பு முடித்து பட்டப்படிப்பு படிக்க சென்றுவிட்டார். நாக்ரலேவுக்கு படிப்பில் பெரிய அளவில் ஆர்வம் இல்லாததால் அவரால் பள்ளிப்படிப்பை முழுமையாக நிறைவு செய்ய முடியவில்லை. அதன்பின்னர் அவர் டிப்ளமோ படித்துவிட்டு எலெக்ட்ரிசீயனாக பணியாற்றி வந்துள்ளார். பள்ளிக்கால தோழன் என்ற முறையில் நட்பு ரீதியிலாக பேசிவந்துள்ளார். நாக்ரலேவுக்கு திருமணமாகி ஒரு குழந்தை பிறந்துள்ளது.

காயமடைந்த இளம்பெண்
காயமடைந்த இளம்பெண்

இந்நிலையில் நாக்ரலே அந்த இளம்பெண்ணை காதலிப்பதாக தொந்தரவு செய்துள்ளார். இதனையடுத்து அவருடனான நட்பை துண்டித்துள்ளார். இரண்டு ஆண்டுகளாக அவருடன் பேசுவதை தவிர்த்துள்ளார். கல்லூரியில் விரிவுரையாளராக கடந்த சில மாதங்களாக பணியாற்றி வருகிறார். இளம்பெண் கல்லூரி செல்வதை நன்கு அறிந்த நாக்ரலே வன்மத்தோடு அவரை பின்தொடர்ந்து பெட்ரோல் ஊற்றி தீவைத்துள்ளார்.” என காவல்துறையின் விசாரணையில் தெரியவந்தது.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை இன்று காலை மோசமானது. காலை 6.50 மணிக்கு அவர் இறந்த செய்தியை அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் உடனடியாக அம்மாநில முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது. இளம்பெண்ணின் உடல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் இளம்பெண்ணின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும்.

மருத்துவமனையின் அறிக்கையில், “இளம்பெண்ணின் முகம், கை மற்றும் உடல் பகுதிகளில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டிருந்தது. கழுத்தில் துளையிட்டு அதன் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. செப்டிசிமிக் ஷாக் ஏற்பட்டு உயிரிழந்தார்” என கூறப்பட்டுள்ளது.

இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்
இளம்பெண் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம்

இளம்பெண் உயிரிழந்த செய்தியை கேள்விப்பட்டதும் கல்லூரி மாணவர்களும், உள்ளூர் மக்களும் மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கினர். வர்தா நகரத்தில் குவிந்த 3000-க்கும் அதிகமான மக்கள் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தேஷ்முக் மருத்துவமனைக்கு விரைந்தார். இந்த வழக்கில் விசாரணை விரைந்து முடிக்கப்படும் என உறுதியளித்தார்.

பின் செல்ல