Published:Updated:

பாகிஸ்தானில் இந்துக் கோயில் சூறை; தீ வைக்கப்பட்ட சம்பவம்! - 26 பேர் கைது

பாகிஸ்தான் இந்துக் கோயில்
பாகிஸ்தான் இந்துக் கோயில் ( AP )

`கோயில் மீதான தாக்குதல் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கான சதி. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை’ - பாகிஸ்தான் அமைச்சர்.

பாகிஸ்தான், கைபர் பக்துன்வா (Khyber Pakhtunkhwa) மாகாணத்துக்கு உட்பட்ட கராக் என்ற பகுதியில், இந்துமதத் துறவி பரமஹன்ஸ் மகராஜின் சமாதி அடங்கிய கோயில் ஒன்று இருக்கிறது. கடந்த 1919-ம் ஆண்டு, பரமஹன்ஸ் மகராஜ் இறந்து, எரியூட்டப்பட்ட இடத்தில் கட்டப்பட்டிருக்கும் நினைவிடத்தில், அவரது பக்தர்கள் பல ஆண்டுகளாக வழிபட்டுவருகின்றனர். அந்தக் கோயில் அமைந்திருக்கும் பகுதி பாகிஸ்தான் அரசின் அறக்கட்டளைக்குச் சொந்தமானது. இந்தக் கோயில் அங்கு இருப்பதற்குத் தொடக்கம் முதலே உள்ளூர் மக்களில் ஒரு பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.

போராட்டம்
போராட்டம்

கடந்த 1997-ம் ஆண்டு பரமஹன்ஸ் மகராஜ் சமாதி முதன்முறையாகத் தாக்குதலுக்குள்ளானது. சமாதி சேதமடைந்ததால், அங்கு வரும் பக்தர்கள் நிறுத்தப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து, பக்தர்களே சமாதி இருந்த கோயிலை மறுசீரமைக்க முயன்றபோது, அந்த ஊரைச் சேர்ந்த இஸ்லாமிய மதகுரு ஒருவர் சமாதியை கைப்பற்றிக்கொண்டதாகவும் இந்துக்கள் குற்றம்சாட்டிவந்தனர். அதையடுத்து பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், கைபர் பக்துன்வா மாகாண அரசு, பரமஹன்ஸ் மகராஜின் சமாதியை மீண்டும் கட்டிக் கொடுத்தது.

அரசும், நீதிமன்றத் தீர்ப்பும் இந்துக்களுக்கு ஆதரவாக இருந்த நிலையில், சமாதி அமைத்திருக்கும் தெர்ரி கிராமத்தில் இந்து - முஸ்லிம்களுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவியது. அந்த கிராமத்தில் வாழும் அடிப்படைவாதிகளோடு, உள்ளூர் அரசு அதிகாரிகள் பல முறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகுதான் மகராஜ் சமாதியை மறுகட்டுமானம் செய்ய முடிந்தது.

இந்நிலையில், மகராஜ் சமாதி மற்றும் கோயிலை மீண்டும் புதுப்பிக்க தெர்ரி கிராமத்தைச் சேர்ந்த இந்துக்கள் கைபர் பக்துன்வா மாகாண அதிகாரிகளிடம் அனுமதி பெற்றனர். இதை அறிந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய மதத் தலைவர் ஒருவர் தலைமையில் ஜாமியாத் உலாமா - இ - இஸ்லாம் என்ற மத அடிப்படைவாதக் கட்சி ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் கோயிலை இடித்துத் தள்ளினர். அதோடு கோயிலுக்குத் தீ வைத்துக் கொளுத்தினர். இதனால் கோயில் முற்றிலும் சேதமடைந்தது. இச்சம்பவத்துக்கு மனித உரிமை அமைப்புகளும், பாகிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள இந்துக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் இந்துக் கோயில்
பாகிஸ்தான் இந்துக் கோயில்

கோயில் இடிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது தொடர்பாக 26-க்கும் மேற்பட்டவர்களைக் கைதுசெய்திருப்பதாகவும் மேலும் சிலரைத் தொடர்ந்து தேடிவருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத விவகாரங்களுக்கான பாகிஸ்தான் அமைச்சர் நூருல் ஹக் காத்ரி, ``கோயில் மீதான தாக்குதல் மத நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கான சதி. சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. சிறுபான்மையாக உள்ளவர்களின் மத சுதந்திரத்தை பாதுகாப்பது மத அடிப்படையிலும் தார்மிக, அரசியல் சாசன அடிப்படையிலும் நமது தேசியக் கடமை’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

முஸ்லிம் மதத் தலைவர்கள் கவுன்சிலின் பரிந்துரையின் பேரில் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்று பாகிஸ்தான் அரசு சமீபத்தில் அனுமதித்த நிலையில், இச்சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவத்தின் பின்னணியில் ஜாமியாத் உலாமா - இ - இஸ்லாம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரெஹ்மத் சலாம் கட்டாக் என்பவர் இருப்பதாக விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு