##~## |
தங்க இறக்குமதியில் நடந்த தில்லுமுல்லுகளைக் கண்டு கிறுகிறுத்துக்கிடக்கிறார்கள் மத்திய அரசு அதிகாரிகள்.
மத்திய அரசின் வர்த்தக அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் மினரல்ஸ் அண்டு மெட்டல் டிரேடிங் கார்ப்பரேஷன் (எம்.எம்.டி.சி) செயல்பட்டு வருகிறது. பொன்விழா கண்டஇந்த நிறுவனம் தங்கம், வெள்ளி, வைரம், எமரால்டு உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களைவெளிநாடுகளில் இருந்து வியாபாரிகளுக்கு இறக்குமதி செய்து கொடுக்கிறது. அவர்களின் ஏற்றுமதிக்கும் உதவுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இங்குதான் தில்லுமுல்லு நடந்ததாக நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த குருமூர்த்தி கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
''வியாபாரிகளின் ஆர்டரின் அடிப்படையில் இந்த நிறுவனம், டன் கணக்கில் தினமும் தங்கம் இறக்குமதி செய்கிறது. அதில், சென்னை சிவசகாய் நிறுவனம், 2007 முதல் 2011 வரை கொடிகட்டிப் பறந்தது. அந்த நேரத்தில் எம்.எம்.டி.சி. தென் மண்டல தலைமைப் பொதுமேலாளராக குருசாமியும் பொது மேலாளராக (நிதி மற்றும் கணக்கு) குருமூர்த்தியும் இருந்தனர்.
இவர்களில் குருசாமி, 2008-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். குருமூர்த்தி, 2011-ல் ஓய்வு பெற்றார். இவர்கள் பணியில் இருந்த காலகட்டத்தில் சென்னை மண்டலக் கணக்கு வழக்கில் நிறையவே குளறுபடிகள் இருப்பதை டெல்லியில் இருந்து வந்த உயர் அதிகாரிகள் ஓர் ஆய்வின்போது கண்டறிந்தனர்.

அப்போதே, இரண்டு அதிகாரிகள் மீதும் சந்தேகம் எழுந்தது. ஆனாலும், டெல்லியில் உள்ள செல்வாக்கின் அடிப்படையில் பிரச்னை வேகம் எடுக்காமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் ஓய்வு பெற்றதும், சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவுக்கு டெல்லி கார்ப்பரேட் அலுவலகத்தில் இருந்து புகார் போனது. முதல்கட்ட விசாரணையிலேயே இருவரும் முறைகேடு செய்தது உறுதியானது.
இதையடுத்து, இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. புகாரில் சிக்கிய சிவசகாய் அலுவலகங்கள், குடோன் உள்ளிட்ட இடங்களில் நடத்திய சோதனைகளில், கணக்கில் காட்டப்படாத 400 கிலோ தங்கம், நான்கு கோடி ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன'' என்றார்கள் எம்.எம்.டி.சி. வட்டாரத்தில்.
இந்தநிலையில், கடந்த 19-ம் தேதி குருமூர்த்தியை சி.பி.ஐ. போலீஸார் கைது செய்தனர். சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி யூசுப்அலி முன்பு ஆஜர்படுத்தி, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைத்தனர். இப்போது, குருமூர்த்தியை சி.பி.ஐ. கஸ்டடிக்கு எடுத்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து, சி.பி.ஐ. வட்டாரத்தில் விசாரித்தபோது, ''சிவசகாய் நிறுவனம் வாங்கிய தங்கம், வெள்ளிக்கு எம்.எம்.டி.சி-க்கு செலுத்த வேண்டிய சர்வீஸ் சார்ஜ், வரி, அந்நியச் செலாவணிக் கட்டணம் உள்ளிட்டவை செலுத்துவதில் இருந்து சுமார் 90 கோடி ரூபாய் அளவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அதுபோல, சுராணா நிறுவனத்துக்கு செய்த சகாயத்தில் 18 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், குருமூர்த்தி கோடிக்கணக்கில் லாபம் அடைந்துள்ளது உறுதியாகிறது. நிதி மற்றும் கணக்குப் பிரிவுக்கு

பொதுமேலாளராக இருந்த அவர், தனக்கு வேண்டப்பட்ட நிறுவனம் லாபம் அடையவேண்டும் என்பதற்காக கணக்குகளை இவராகவே திருத்தி இருக்கிறார்.
வங்கியில் 240 கோடி ரூபாய் நிரந்தர வைப்புத்தொகை இருப்பதாகக் கணக்குக் காட்டி, 160 டன் தங்கம் இறக்குமதி செய்துள்ளனர். உண்மையில், வைப்புத்தொகையே இல்லை. அரசு ஊழியரான குருமூர்த்தி, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களின் ஊழியர் போல செயல்பட்டுள்ளார். இந்த வழக் கில் இது ஆரம்பம்தான். இன்னும் பலர் சிக்குவார்கள்'' என்றனர்.
இந்த நூதன மோசடி குறித்து, மத்திய அரசின் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் வழக்கறிஞர் பழனிமுத்துவிடம் பேசினோம். ''தனியார் நிறுவனத்துக்கு சட்டப்படி சர்வீஸ் செய்ய வேண்டியது எம்.எம்.டி.சி. கடமை. இதற்காக பல்வேறு சேவைக் கட்டணங்களைப் பெறவேண்டும். ஆனால், குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் உயர் அதிகாரி, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதோடு, தனியாரிடம் ஆதாயமும் பெற்றுள்ளார். அதனால் அரசு கஜானாவுக்கு வரவேண்டிய கோடிக்கணக்கான பணம் வேறு இடத்துக்குச் சென்றுள்ளது'' என்றார்.
தங்கம் இறக்குமதிப் பிரச்னையில் எம்.எம்.டி.சி. கணக்குப்படி சுராணா நிறுவனம் 18 கோடி ரூபாய் தர வேண்டும் என்கிறார்கள். ஆனால், 8.99 லட்சங்கள்தான் எம்.எம்.டி.சி-க்குக் கொடுக்க வேண்டும் என்று சுராணா தரப்பில் கூறுகிறார்கள். இப்போது சுராணா நிறுவனத்தில் குருசாமியும், சிவசகாய் நிறுவனத்தில் குருமூர்த்தியும் அதிகாரிகளாகச் சேர்ந்துள்ளனராம்.
போலீஸ் காவலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட குருமூர்த்தியிடம் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டோம். அவர் பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார். அவர் விளக்கம் கொடுத்தால் வெளியிடுவதற்குத் தயாராகவே இருக்கிறோம்.
சி.பி.ஐ. கஸ்டடியில் இன்னும் பல கோடி மோசடிகள் வெளிவரும்!
- எஸ்.முத்துகிருஷ்ணன்
படங்கள்: சொ.பாலசுப்பிரமணியன்