Published:Updated:

சென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தமிழக தலைவர்கள் கண்டனம்!

சென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தமிழக தலைவர்கள் கண்டனம்!
சென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தமிழக தலைவர்கள் கண்டனம்!
சென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தமிழக தலைவர்கள் கண்டனம்!

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ

இது குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இன்று (மே 1 ஆம் நாள்) காலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூர்-கௌஹாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 இரண்டு பெட்டிகளில்  குண்டு வெடித்ததில் சுவாதி எனும் இளம் பெண் உயிரிழந்தார் என்றும், படுகாயமுற்ற இருவர் உட்பட 14 பேர் காயம் அடைந்த சம்பவம் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் கவலையும் அடைந்தேன்.

சுமை தூக்கும் தொழிலாளர்களும் பொதுமக்களும், பின்னர் காவல்துறையினரும் காயமுற்றோருக்கு சிகிச்சை தரும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டது ஆறுதல் தருகிறது.

பொதுமக்களின் உயிருக்கு உலை வைக்கும் இக்கொடுங் குற்றத்தில் ஈடுபட்டோர், அதன் பின்னணியில் இயக்கியோர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த அராஜகச் செயலில் ஈடுபட்டோருக்குப் பலத்த கண்டனத்தை தெரிவிப்பதுடன், உயிர் இழந்த இளம்பெண் சுவாதி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தோர் முழுநலம் பெற விழைகிறேன்" என்று கூறியுள்ளார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ''மத்திய உளவு பிரிவு போலீசார் தமிழக உளவு பிரிவிற்கு முன் கூட்டியே இது குறித்து தகவல் கொடுத்தும், தமிழக காவல்துறை என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை. ஒரு வேளை தேர்தல் நேரத்தில் தூங்கிய காவல்துறையினர் இன்னும் கண் விழிக்கவில்லை போலும்.

ஈவு, இரக்கமின்றி மனித உயிர்களை கொன்று குவிக்கும் இது போன்ற குண்டு வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தீவிரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஞானதேசிகன்

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறும்போது, ''சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி செல்லும் ரயிலில் குண்டு வெடித்த செய்தி மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. எந்த பாவமும் செய்யாத அப்பாவிகள் ஏதோ ஒரு தீவிரவாதத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் தீவிரவாதத்தின் மீதான கோபமும், ஆத்திரமும் அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற தீவிரவாத அமைப்புகள் உலா வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. குறிப்பாக இலங்கையை சேர்ந்தவர்கள், பல வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோல், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. தொடர்புடைய இலங்கையை சார்ந்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இதையெல்லாம் பார்க்கும்போது, பல்வேறு சதித்திட்டங்கள் இந்தியாவை சுற்றி அரங்கேறுவதற்கான அடையாளங்கள் தெரிகிறது. தீவிரவாதம் எந்த ரூபத்தில் யாருக்கு ஆதரவாக வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். திறமைமிக்க காவல்துறையினர் இதன் பின்னணியில் செயல்படும் ஆணி வேரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாகிஸ்தான் உளவு அமைப்பின் உளவாளியாக செயல்பட்ட இலங்கையை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டதாகவும், இதைத் தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பாதுகாப்பு வலுப்படுத்தப் பட்டிருப்பதாகவும் காவல்துறை அறிவித்த 24 மணி நேரத்திலேயே இப்படி ஒரு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும், இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட தீவிரவாதி வெடிகுண்டுடன் ரயில் நிலையத்திற்குள் நுழையும் அளவுக்கு பாதுகாப்பு மிக மோசமாக இருந்திருப்பதும் தமிழ்நாட்டு மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்" என்று அதில் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''குண்டு வெடிப்பு வன்முறைச் செயலுக்கு காரணமானவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது. மேலும் காயமுற்றவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.