Published:Updated:

கவுகாத்தி ரயிலில் குண்டு வைத்த சதிகாரர்கள் 4 பேரா?: போலீசார் தீவிர விசாரணை!

Vikatan Correspondent
கவுகாத்தி ரயிலில் குண்டு வைத்த சதிகாரர்கள் 4 பேரா?: போலீசார் தீவிர விசாரணை!
கவுகாத்தி ரயிலில் குண்டு வைத்த சதிகாரர்கள் 4 பேரா?: போலீசார் தீவிர விசாரணை!
கவுகாத்தி ரயிலில் குண்டு வைத்த சதிகாரர்கள் 4 பேரா?: போலீசார் தீவிர விசாரணை!

சென்னை: கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வைத்த சதிகாரர்கள் 4 பேராக இருக்கலாம் என்றும் அவர்கள் சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளியின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த சதிகாரர்கள் யார்? என்பது பற்றி போலீசாரின் அதிரடி விசாரணையில் துப்பு துலங்கி வருகிறது. இதுதொடர்பாக, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''ரயிலில் குண்டு வைத்த சதிகாரர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யும் முயற்சியில் போலீஸ் குழுவினர் பல்வேறு வியூகங்களை அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். குண்டு வெடிப்பு நடந்த எஸ்.4, எஸ்.5 ரெயில் பெட்டிகள் நின்றிருந்த 9வது பிளாட்பார பகுதியில் காலை 7 மணி முதல் காலை 7.15 மணி வரை கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தோம். அதில் யார் யார் அந்த பகுதியில் சுற்றினார்கள்? என்பதை ஆய்வு செய்தபோது, எங்களுக்கு ஒரு நல்ல தடயம் கிடைத்துள்ளது.

ரயில் பிளாட்பாரத்திற்கு வந்து நின்றவுடன், எஸ்.4 பெட்டியில் 2 மர்ம நபர்களும், எஸ்.5 பெட்டியில் 2 மர்ம நபர்கள் பையுடன் ஏறி உள்ள காட்சிகள் கேமிராவில் பதிவாகி உள்ளது. அவர்கள் தான் குண்டு வைத்த சதிகாரர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அதுதொடர்பாக விசாரித்து வருகிறோம்.

மர்ம நபர்கள் 4 பேரும் சென்னையில் பிடிபட்ட பாகிஸ்தான் உளவாளி ஜாகீர் உசேனின் கூட்டாளிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதுபற்றி ஒரு கோணத்தில் விசாரித்து வந்தாலும், இன்னொரு கோணத்தில் விசாரிக்கும் போது குண்டு வைத்த சதிகாரர்கள் வெடிகுண்டை ரயில் புறப்பட்ட பெங்களூரிலோ அல்லது வழியில் உள்ள ரயில் நிலையத்திலோ வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

குண்டு வைத்த பெட்டியில் பயணித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது காலித் மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் வினய் ஆகியோரை பிடித்து விசாரித்து வருகிறோம். குண்டு வெடிப்பு நடந்த ரயிலில் கழிவறையில் பதுங்கி இருந்த தவுலத்கான் என்பவரையும் பிடித்து விசாரித்தோம். அவர் தான் நிரபராதி என்று கூறினார். குண்டு வெடித்த உடன் பயத்தில் தப்பி ஓடியதாகவும் பின்னர் தான் விட்டுச்சென்ற பையை எடுக்க வந்தபோது, போலீசாரை பார்த்து பயந்து கழிவறைக்கு சென்றதாகவும் கூறினார். இதனால் அவரை விட்டுவிட்டோம். அவரது பையையும் கண்டுபிடித்து ஒப்படைத்து விட்டோம்" என்றார்.