Published:Updated:

பாட்னா குண்டுவெடிப்பு: அஷ்ரப் அலிக்கு 5 நாள் போலீஸ் காவல்!

Vikatan Correspondent
பாட்னா குண்டுவெடிப்பு: அஷ்ரப் அலிக்கு 5 நாள் போலீஸ் காவல்!
பாட்னா குண்டுவெடிப்பு: அஷ்ரப் அலிக்கு 5 நாள் போலீஸ் காவல்!

கடலூர்: பாட்னா குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என தேடப்பட்டு வந்த அஷ்ரப் அலி கடலூரில் கைது செய்யப்பட்ட நிலையில், 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  

கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி பீகார் தலைநகர் பாட்னாவில் 8 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் தொடர்புடைய சிலர் சிதம்பரம் அருகேயுள்ள பரங்கிப் பேட்டையில் தங்கியிருப்பதாக ராஜஸ்தான் போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

பாட்னா குண்டுவெடிப்பு: அஷ்ரப் அலிக்கு 5 நாள் போலீஸ் காவல்!

இதையடுத்து கடலூர் வந்த ராஜஸ்தான் போலீசார், தமிழக காவல்துறையினர் உதவியுடன் பரங்கிபேட்டையில் கண்காணித்து வந்தனர். இதில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதை உறுதி செய்த போலீசார் பின்னர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி, பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இந்திய முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த அஷ்ரப் அலியை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லி, மும்பை, புனே, ஜெய்ப்பூர் நகரங்களில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்புகளுக்கும் அஷ்ரப் அலிக்கும் தொடர்பு இருப்பதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அஷ்ரப் அலியுடன் தங்கி இருந்த 12 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும் அஷ்ரப் அலியை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதி, அஷ்ரப் அலியை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

இதையடுத்து, அஷ்ரப் அலி இன்று மாலை சென்னை அழைத்து வரப்பட்டு, நாளை விமானம் மூலம் ஜோத்பூர் கொண்டு செல்லப்படுகிறார். அங்கு வைத்து அஷ்ரப் அலியிடம் விசாரணை மேற்கொள்ளும் காவல் துறையினர், 5 நாட்கள் முடிந்த பின்னர் ஜோத்பூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்துகின்றனர்.

இன்ஸ்பெக்டர் பேட்டி

இதுகுறித்து ராஜஸ்தான் மாநிலம், தீவிரவாத தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் துஸ்வந்தர் சிங் ரத்தூர் கூறுகையில், ''ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில், தடை செய்யப்பட்ட இந்திய முஜாகிதீன் அமைப்புக்கு ஆதாரவாக அஷ்ரப் அலி செயல்பட்டு வந்துள்ளார். மேலும், இப்பகுதியில் உள்ள இளைஞர்களை ஒன்று திரட்டி ரகசிய கூட்டங்களை நடத்தி, அதன்பின் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்நிலையில், ஜோத்பூர் பகுதியில் கடந்த 23.3.2014 அன்று வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவத்தில் அஷ்ரப் அலி உள்பட 4 பேர் மீது ஜோத்பூர், பிரதாப் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கில் அஷ்ரப் அலி மற்ற 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அஷ்ரப் அலி மட்டும் தப்பி விட்டார்.

பிடிபட்ட 3 பேரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டையில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதிகா மற்றும் சிதம்பரம் டி.எஸ்.பி. ராஜாராம் உதவியுடன் பரங்கிப்பேட்டையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினோம். அதில் நேற்று இரவு மீரா பள்ளி வாசலில் பதுங்கியிருந்த அஷ்ரப் அலியை கைது செய்தோம்'' என்றார்.

க.பூபாலன்

படம்: எஸ்.தேவராஜன்