Published:Updated:

அரசாங்கம் பார்க்காமப் போனாலும், ஆண்டவன் பார்த்துக்குவான்!

நாகமுத்து உடலுடன் ஐந்து நாள் போராட்டம்Follow - up

அரசாங்கம் பார்க்காமப் போனாலும், ஆண்டவன் பார்த்துக்குவான்!

நாகமுத்து உடலுடன் ஐந்து நாள் போராட்டம்Follow - up

Published:Updated:
##~##

'என் மரணத்துக்கு அமைச்சர் ஓ.பன்னீர்​செல்வத்தின் தம்பி ஓ.ராஜாதான் காரணம்’ என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு கள்ளிப்பட்டியைச் சேர்ந்த நாகமுத்து தற்கொலை செய்து கொண்டது குறித்து கடந்த இதழ் ஜூ.வி-யில் 'மர்ம மரணத்தில் ஓ.பன்னீரின் தம்பி’ என்ற தலைப்பில் கவர் ஸ்டோரி வெளியிட்டு இருந்தோம். 'குற்றவாளிகளைக் கைது செய்யாமல் நாகமுத்துவின் பிணத்தை வாங்க மாட்டோம்’ என்று பெரியகுளத்தில், கள்ளிப்பட்டி பொதுமக்கள் ஐந்து நாட்களாகப் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அதை, நாள் வாரியாகப் பார்ப்போம்! 

கடிதம் எழுதியது நாகமுத்துதானா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'என் குடும்பத்தைக் காப்பாற்றவே என் மரணம் காணிக்கை’ என்ற நாகமுத்துவின் கடிதத்தைக் கைப்பற்றிய போலீஸார், கடிதத்தில் உள்ளது நாகமுத்துவின் கையெழுத்துதானா என்று ஆராய்ந்தனர். இதற்குமுன் நாகமுத்து எழுதிய கடிதங்களையும் காவல் நிலையங்களில் கொடுத்த புகார்களின் கையெழுத்துக்களையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். ஒரே மாதிரி​தான் இருக்கிறது என்று சொன்னவர்கள், தடய அறிவியல் துறைக்கு அவற்றை அனுப்பினர்.

அரசாங்கம் பார்க்காமப் போனாலும், ஆண்டவன் பார்த்துக்குவான்!

அடுத்த குழப்பம் உடலை எந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என்பது. பெரிய​குளமா... தேனியா என்று குழம்பிய போலீஸார், கடைசியில் பெரியகுளம் மருத்துவமனைக்கு நாகமுத்துவின் உடலைக் கொண்டு சென்றனர். டாக்டர் ஜூலி யானா  தலைமையிலான மருத்துவக் குழுவினர் போஸ்ட் மார்ட்டம் செய்தனர். அதை வீடியோவும் பதிவு செய்து இருக்கிறார்கள்.

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் உடல் இருந்த நேரத்தில், பெரியகுளம் டு மதுரை சாலையை முற்றுகையிட்டு கள்ளிப்பட்டி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யத் தொடங்கியது சனிக்கிழமை மதியம். ஒரு சிலர் மட்டும் மருத்துவமனையில் இருக்க, மற்றவர்கள் மறியல் நடத்தினர். அன்று இரவு, ஊர் பொதுமந்தையில் கூடிய மக்கள், நாகமுத்துவின் பெற்றோரிடமும் உறுதி யாக இருக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் அறிவுறுத்தினர். 'சம்பந்தப்பட்ட நபர் கைது ​செய்யப்படாமல், பிணத்தை வாங்குவது இல்லை. போராட்டங்கள், ஆர்ப் பாட்டங்கள் கலவரமாக மாறி நம் மீது வழக்கு திரும்பி விடாமல் கவனமாக இருக்க வேண்டும். நமக்குள் எல்லைக் கட்டுப்பாடு வைத்துக்கொண்டு போராட

அரசாங்கம் பார்க்காமப் போனாலும், ஆண்டவன் பார்த்துக்குவான்!

வேண்டும்’ என்று முடிவெடுத்தனர்.

திண்டுக்கல் முதல் கன்னியாகுமரி வரை...

முதல் நாள் ஆர்ப்பாட்டத்தின்போது, தேனி மாவட்ட போலீஸ் படை மட்டும் களத்தில் இருந்தது. விவகாரம் திசைமாறிப் போகவே, இரண்டாவது நாளான ஞாயிறன்று, திண்டுக்கல் முதல் குமரி வரை உள்ள போலீஸ் படையை இறக்கினர். இரண்டு மாவட்ட எஸ்.பி. உட்பட  500-க்கும் மேற்பட்ட போலீஸார், மாவட்டத்தின் பதற்றமான பகுதிகளில் குவிக்கப்பட்டனர். நேரம் ஆகஆக, நாகமுத்துவின் உறவினர்கள், ஊர்க்காரர்கள் மட்டும் இல்லாமல், பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆட்கள் குவியத் தொடங்கினர். அன்று, தேனியில் சில விழாக்களில் கலந்துகொள்ள அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருவதாக இருந்தது. ஆனால், வரவே இல்லை. சென்னையிலேயே தங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று பிரச்னை பெரிதாக, வேறு வழியே இல்லாமல், 'வழக்குப் பதிவுசெய்யுங்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டதாகச் சொல்லப்படுகிறது. அன்று மாலை 6 மணிக்குத்தான் இ.பி.கோ. 306 செக்ஷன்படி வழக்குப் பதியப்பட்டது.

ஊர் முழுவதும், 'ராஜாவைக் கைது செய்’ என சுவரொட்டி, தட்டிகளில் எழுதிப் போராடத் தொடங்கினர். அன்று பெரியகுளம் முழுவதும் பதற்றம் நிலவியது. அன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்ததால், பன்னீர்​ செல்வத்தின் குடும்பத்துக்கு எதிராக மாவட்டத்தைத் தாண்டியும் போராட்டம் எதிரொலித்தது. பெரியகுளம் மருத்துவமனை பிணவறையில் ஃப்ரீசர் வசதி இல்லை. போலீஸாரும்

பிணத்தைப் பாதுகாக்க மாற்று ஏற்பாடு செய்யவில்லை. அதனால், நாகமுத்து சடலம் கேட்​பாரற்றுக் கிடந்தது.

எட்டிப் பார்த்த புழுக்கள்...

அரசாங்கம் பார்க்காமப் போனாலும், ஆண்டவன் பார்த்துக்குவான்!

மூன்றாம் நாளான திங்கள்​கிழமை, தேனி - அல்லிநகரத்தில் தலித் அமைப்புகள் சாலை மறியல் நடத்த, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஐயப்ப சீசன் என்பதால் பக்தர்கள் வந்த பேருந்துகள் நீண்ட வரிசையில் நிற்க... போராடியவர்களை சமாதானப்படுத்தி அப்புறப்​படுத்துவதற்குள் போலீ ஸாருக்குப் போதும் போதும் என்றாகி​விட்டது.

ஒருபக்கம் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று இருக்க... மருத்துவமனையில் நாகமுத்துவின் உடலில் புழுக்கள் எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டதாம். உடல் கெட்டுப்போவதைத் தொடர்ந்து, பாதுகாப்புக்கு இருந்த போலீஸார் பதறிப் போனார்கள். தேனி மருத்துவ மனையில் இருந்து மருந்துப் பொருட்களை வாங்கி வந்து, குளிர் சாதனப் பெட்டி கொண்டுவந்து அதற்குள் உடலை வைத்து, 24 மணி நேரமும் மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கும்படி பார்த்துக்​ கொண்டனர்.

எங்கே இருக்கிறார் ராஜா?

செவ்வாய் மாலை, போராட்டம் கலவரமாக மாறி, இரண்டு பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்​பட்டது. இவ்வளவு பரபரப்பான பிரச்னைகளுக்கு மத்தியில், எங்கே இருக்கிறார் ராஜா என்று போலீஸார் தேடிக்கொண்டே(?) இருந்தனர். 'இன்னும் ராஜா சிக்கவில்லை’ என்று போலீஸார் டபாய்க்கவே கடுப்பான மக்கள், 'மற்ற குற்றவாளிகளையாவது கைது செய்யுங்கள்’ என்று கண்டிப்புக் காட்டினர். இதற்கிடையில், இரண்டாவது குற்றவாளியாகச் சொல்லப்படும் மணிமாறன், மதுரை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் மதுரை மத்தியச் சிறையில் அடைக்க உத்தர​விட்டது நீதிமன்றம். அன்று இரவே, ஞானம் என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரது பெயரையும் நாகமுத்து தனது கடிதத்தில் குறிப்​பிட்டு இருந்தார். 'மாவட்டத்தைத் தாண்டி ராஜா வெளியில் எங்கும் செல்லவில்லை. உள்ளுக்குள் இருந்து கொண்டே இல்லை என்கிறார்’ என்று நேர்மையான போலீஸார் சிலர் வருத்தப்பட்டனர். இதற்கிடையில், நாகமுத்து​வின் உடல்  மோசமான நிலைமைக்குச் செல்ல, 'இரவோடு இரவாக உடம்பை எப்படியும் கொடுத்து விடலாம்’ என்று பேச்சுவார்த்தை நடத்தினர் போலீஸார். அப்படியும் அவர்களின் முயற்சி பலிக்கவில்லை.

அரசாங்கம் பார்க்காமப் போனாலும், ஆண்டவன் பார்த்துக்குவான்!

அன்று மாலை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெரியகுளத்துக்கு வருவதாக இருந்ததாம். ஆனால், அவர் வரவில்லை. கட்சி நிர்வாகிகளிடம் பேசிய திருமா, 'அமைதியாகப் போராடுங்கள். ஏற்கெனவே, நமது கட்சியினர் மீது பல்வேறு அவதூறு குற்றச்​சாட்டுகள் வந்தபடி இருக்கின்றன. இந்தநிலையில், வீண் வதந்தி​களை நம்பும்படி யாரும் நடந்து​கொள்ள வேண்டாம்’ என்று கேட்டுக்​கொண்டாராம்.  

உச்சக்கட்ட புதன்...

ஐந்தாவது நாளான புதன்​கிழமை காலை, மாவட்டமே கொந்தளித்தது. 'இரண்டு பேரை கைது செய்துவிட்டோமே... உடலை வாங்கிக்​கொண்டு போராட்டத்தைக் கைவிடுங்கள்’ என்று, ஆர்.டி.ஓ. ராஜ​ரத்தினம் பேசினார். 'ஐந்து நாட்கள் ஆகியும்கூட சம்பந்தப்பட்ட இடத்துக்கு கலெக்டர்  வரவில்லை. நீங்கள் எதுவும் பேச வேண்டாம் அரசியல்வாதிகளுக்கும் பணக் காரர்களுக்கும் வேலை செய் வதற்காகவா இருக்கிறீர்கள்?’ என்று காரசாரமாக கேள்வி எழுப்பினர் மக்கள். காலை 11 மணிக்கு

அரசாங்கம் பார்க்காமப் போனாலும், ஆண்டவன் பார்த்துக்குவான்!

நாகமுத்துவின் உடல் மிகவும் மோசமானதைத் தொடர்ந்து, அதை வாங்க ஒப்புக்கொண்டனர் மக்கள். 'உடலை திறந்த வாகனத்தில் வைத்து, பெரியகுளம் அரசு மருத்துவமனையில் இருந்து தாமரைக்குளம் சுடுகாடு வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். தாமரைக்குளம் அருகில் உடல் வந்தபோது, பெரியகுளம் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.  லாசர் வந்து​சேர, 'இத்தனை நாட்கள் எங்கே போனீர்கள்? இப்போது எதற்காக வருகிறீர்கள்?’ என்று கடுமையான வார்த்தைகளால் திட்டித் திருப்பி அனுப்பி​னர். ராஜாவின் கொடும்பாவியை சுடுகாட்டில் வைத்து எரித்துவிட்டு, 'வீர வணக்கம், வீர வணக்​கம், நாகமுத்துவுக்கு வீர வணக்கம்’ என்று கோஷம் போட்டனர். நாகமுத்துவின் உடலை புதைக்கும்​போது மணி மதியம் 1.30.

நாகமுத்துவின் தந்தை சுப்புராஜுவிடம் பேசினோம். ''முக்கியக் குற்றவாளி ராஜாவை இன்னும் கைது செய்யலை. காசு, பணம், பதவி இருப்பவனுக்கு ஒரு சட்டம். ஏழைகளுக்கு ஒரு சட்டமா? இதுக்காகவா இவங்களுக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வச்சோம். அஞ்சு நாளா சோறு தண்ணி இல்லாம, வேலை வெட்டிக்குப் போகாம ஊர் சனங்க முழுக்க இம்புட்டுப் போராடியும், கடைசி வரை ஒருத்தரைத் தவிர, மத்தவங்கள கைது செய்யல. என்ன அரசாங்கம் இது?'' என்று அழுதவர், ''கடைசியில் என் மகனை புழுவைத்த உடம்பாத்தான் பார்க்க முடிஞ்சது. இந்த நிலைமை யாருக்கும் வரக்கூடாது.  இவங்களை எல்லாம் அரசாங்கம் பார்க்காமப் போனாலும், ஆண்டவன் பார்த்துக்குவான்'' என்று மேலே கையைக் காட்டி அழுதார். நாம், மறுபடியும் ராஜாவின் தரப்பில் பேச முயன்றும், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. அவர் சார்பில் விளக்கம் தரவும் யாரும் முன்வரவில்லை.

வழக்கை விசாரிக்கும் பெரியகுளம் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியனிடம் பேசினோம். ''இரண்டு தனிப்படை அமைத்து ராஜாவைத் தேடி வருகிறோம். கூடிய சீக்கிரம் பிடித்து விடுவோம்'' என்றார்.

சொல்வதைச் செய்வார்கள் என்றே நம்புவோம்!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism