##~## |
சிவந்தி ஆதித்தன் ஆளுமையில் இருந்த நாடார் சங்கத்தைக் கைப்பற்ற 'மணல் மனிதர்’ வி.வைகுண்டராஜன் நடத்திய சட்டப் போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. வைகுண்டராஜனின் பின்னணியில் ஆளும் கட்சி இருப்பதாகப் பேச்சு இருப்பதால், அரண்டு கிடக்கிறார்கள் எதிர்த் தரப்பினர்!
திருநெல்வேலியைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது தெஷ்ணமாற நாடார் சங்கம். பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், தொழில் பேட்டைகள், சமுதாயக் கூடங்கள் எனக் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துக்கள் இந்த அமைப்புக்கு உள்ளன. பத்திரிகை அதிபரான சிவந்தி ஆதித்தன் இதனுடைய முக்கியப் பிரமுகராக இருந்தார். அவரது ஆதரவாளர்கள்தான் இந்தச் சங்கத்தின் நிர்வாகிகளாக இருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சில வருடங்களுக்கு முன், வி.வி.மினரல்ஸ் நிறுவன அதிபர் வி.வைகுண்டராஜனுக்கும் சிவந்தி ஆதித்தனுக்கும் இடையே பனிப்போர் தொடங் கியது. 'சங்கத்துக்கு உடனடித் தேர்தல் வேண்டும்’ என்று வலியுறுத்திய வி.வி. ஆதரவாளர்கள் அதற்காக தனியாகக் கூட்டம் நடத்தினர். அதனால், வைகுண்டராஜனை சங்கத்தில் இருந்து நீக்கி விட்டதாகத் தகவல் பரவியது. உடனே பலரும் வைகுண்டராஜனுக்கு ஆதரவாகக் களம் இறங்கினர். 2008-ம் ஆண்டு சங்கத்துக்குத் தேர்தலை நடத்தி 51 பேர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர். ஆனால் இதை எதிர்க் கோஷ்டியினர் ஏற்க மறுத்ததோடு, சங்க அலுவலகத்துக்குள் வைகுண்டராஜன் ஆதர வாளர்களை நுழையவிடாமல் தடை செய்தனர். விஷயம் நீதிமன்றத்துக்குப் போனது.
இந்த நிலையில்தான், தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்துவிட்டதாகக் கூறி கடந்த 11-ம் தேதி நெல்லையில் உள்ள சங்க அலுவலகத்துக்குள் வைகுண்டராஜன் ஆதரவாளர்கள் நுழைய முயன்றனர். ஆனால் எதிர்த் தரப்பினர் அனுமதிக்காமல் அலுவலகத்தை மூடியதால், பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் சகிதமாக அலுவலகத்தின் வாயிலில் திரண்டதால், அசம்பாவிதத்தைத் தடுக்க போலீஸ் குவிக்கப்பட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து வைகுண்டராஜன் தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞரான ஞானசேகரன் நம்மிடம் பேசுகையில், ''2008-ம் ஆண்டு வைகுண் டராஜன் ஆதரவாளர்கள் 51 பேர் இயக்குனர்களாக வெற்றி பெற்றனர். ஆனால், இந்த வெற்றியை எதிர்த்து எதிர்த்தரப்பைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்துக்குப் போனார்கள். தேர்தல் செல்லாது என்றும் தேர்வான நிர்வாகிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது என்றும் வழக்குத் தொடர்ந்தனர். கீழ் நீதிமன்றத்தில் எங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது. அடுத்து நெல்லை சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதிலும் எங்களுக்குச் சாதகமாகவே நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த இரு தீர்ப்புகளுக்குப் பிறகும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில் கடந்த 4-ம் தேதி தீர்ப்பு வந்தது. அந்த உத்தரவில், 'உறுப்பினர்களைத் தேர்வுசெய்தது செல்லும். அவர்கள் உடனடியாகப் பொறுப்பு ஏற்கவேண்டும்’ என்று குறிப்பிட்டு இருக்கிறது. அதனால் புதிய நிர்வாகிகள் உடனே பொறுப்பு ஏற்பார்கள்' என்றார் திட்டவட்டமாக. ஆனால் இதை எதிர்த் தரப்பு ஏற்கவில்லை.
இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிலைமை சீரியஸ் ஆனதால், ஆர்.டி.ஓ. பெருமாள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்தது. அதிலும் சமரசத் தீர்வு ஏற்படவில்லை. இதனிடையே,

நீதிமன்ற உத்தரவுப்படி புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்க, காவல் துறை பாதுகாப்பு கொடுக்க முன்வந்தது. அ.தி.மு.க ஆதரவாளரான வைகுண்டராஜன் தரப்புக்கு ஆதரவாக மேலிடத்தில் இருந்து சிக்னல் வந்ததால்தான், போலீஸார் அவர் களுக்குச் சாதகமாக களம் இறங்குவதாகப் பேச்சு எழுந்தது.
கடந்த 12-ம் தேதி இரவு, புதிய நிர்வாகிகள் அனைவரும் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். புதிய தலைவராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்ட சபாபதி நம்மிடம் பேசுகையில், ''நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதால், முதல்வருக்கு நன்றி. இதுவரை இந்தச் சங்கத்தில் ஒரு நபர் ஆதிக்கம் மட்டுமே இருந்தது. அதை மாற்றி அனைவருக்கும் சமஉரிமை கிடைக்கச் செய்வோம். நலிந்த, வலுவிழந்த நிலையில் இருக்கும் சமுதாய மக்களுக்கு எந்தப் பாதிப்பு வந்தாலும்... அது யாரிடம் இருந்து வந்தாலும் அதைத் துணிவுடன் தடுத்து நிறுத்த எங்கள் சங்கம் பாடுபடும்.
வி.வி. அண்ணாச்சியைப் பொறுத்தவரை இந்தச் சங்கத்தின் ஆதிகாலத்தில் இருந்தே அவரது குடும்பத்தினரின் பங்கு கணிசமாக உண்டு. அதனால், அவரைப் போன்ற நல்லவர்களின் ஆசியுடனும் ஆலோசனையின் பேரிலும் இந்தச் சங்கத்தை வழிநடத்திச் செல்வோம். கடந்த காலத்தில் சங்கத்தில் சில தவறுகள் நடந்து இருப்பதாகத் தெரியவருகிறது. அதைக் கண்டுபிடித்து அதற்குக் காரண மானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்' என்றார் காட்டமாக.
இதுபற்றி சிவந்தி ஆதித்தனின் ஆதர வாளரும் சங்கத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.ஆர்.எஸ். ஆதித்தனிடம் பேசினோம். ''இந்தச் சங்கமானது, எங்கள் சமுதாய மக்களை மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்துச் செல்லும் இயக்கமாக இதுவரை செயல்பட்டது. அந்தப் பணிகள் அனைத்தும் தொய்வின்றி நல்ல முறையில் தொடர வேண்டுமே என்ற கவலைதான் எங்களுக்கு. இந்தச் சங்கம் வழக்குகளைச் சந்திப்பது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே, பல தடவை வழக்குகளைச் சந்தித்து, அதில் இருந்து வெற்றிகரமாக மீண்டும் உள்ளது. ஆனால் இப்போது சட்டரீதியாக எங்களுக்குச் சிறிய பின்னடைவு ஏற்பட்டு இருப்பது உண்மைதான். ஆனாலும், விரைவில் சிக்கலில் இருந்து மீண்டு, நாங்களே நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வழக்கம்போல் சமுதாயப் பணிகளைத் தொடர்வோம்'' என்றார் நம்பிக்கையுடன்.
சங்கம் என்றாலே சண்டைதானா?
- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்