Published:Updated:

''ராமதாஸுக்கும் வன்னியர்களுக்கும் சம்பந்தம் இல்லை!''

வறுத்தெடுக்கும் வன்னியப் பிரமுகர்கள்

''ராமதாஸுக்கும் வன்னியர்களுக்கும் சம்பந்தம் இல்லை!''

வறுத்தெடுக்கும் வன்னியப் பிரமுகர்கள்

Published:Updated:
##~##

'விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் கட்சி அல்ல. அது ஒரு வன்முறைக் கும்பல்; ரவுடி இயக்கம்’ - தமிழகத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்துவது பற்றியும், காதல் நாடகத் திருமணங்களால் பெற்றோருக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பா.ம.க. சார்பில் நடந்த கருத்தரங்கில்தான் இப்படி திரியைக் கொளுத்திப் போட்டு இருக்கிறார் டாக்டர் ராமதாஸ். அதோடு, 'என்னைப்போல் தலித்துகளுக்காகப் பாடுபட்ட தலைவர்கள் இந்தியாவில் யாரும் இல்லை’ என்றும் பேசி இருக்கிறார். இதுபற்றி வன்னியர் சமூகப் பிரபலங்கள் சிலரிடம் கருத்துக் கேட்டோம். 

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர்): ''கடந்த கால் நூற்றாண்டு அரசியலில் ராம தாஸ் பேசியவற்றை எல்லாம் எடுத்துப் பார்த்தால், அந்தப் பேச்சில் அவர் ஒழுங்காக நின்றதும் இல்லை; நடந்துகொண்டதும் கிடையாது. 'தி.மு.க-வை அழித்தொழிப்பதே என் முதல் வேலை’ என்று சொன்னவர், அடுத்த சில ஆண்டுகளிலேயே அந்தக் கட்சியோடு கூட்டணி வைத்தார். 'அ.தி.மு.க-வோடு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ராமதாஸுக்கும் வன்னியர்களுக்கும் சம்பந்தம் இல்லை!''

இனி எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்​டேன். வைத்​தால், தாயோடு உறவு வைத்த​தற்குச் சமம்’ என்றார். ஆனால், அந்தக் கட்சி​யோடும் கூட்டணி சேர்ந்​தார். 'சோனியா வெளிநாட்டுக்காரி’, 'பாபர் மசூதியை இடித்த​வர்கள் பி.ஜே.பி-யினர்’ எனச் சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு அந்தக்கட்சி​​​களோடு கூட்டுச் சேர்ந்தார். 'கரு ணா​நிதி​தான் வன்னியர்களின் முதல் எதிரி’ எனச் சொல்லிவிட்டு, அவரை வைத்தே மக்கள் டி.வி-யையும் 'தமிழ் ஓசை’ பத்திரிகையையும் தொடங்கினார். தன் வீட்டுத் திருமணங்களை எல்லாம் கருணாநிதி தலைமையில்தான் நடத்தினார்.

திருமாவளவனோடு நெருக்கமாக இருந்தார். 'அன்புச் சகோதரன் திருமாவளவனை என்னிடம் இருந்து யாரும் பிரிக்க முடியாது’ என்றார். ஓட்டு அரசியலுக்காக அவர் அடிக்கடி தன்னை உருமாற்றிக் கொள்வது ஊரறிந்தது. இப்போது விடுதலைச் சிறுத்தைகள் வன்முறை இயக்கம் எனச் சொல்லும் ராமதாஸுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவிக்குமார் இல்லத் திருமணத்தை நடத்தி வைத்த​போது அது தெரியவில்லையா? இப்போது அவர் சொன்ன கருத்தின் மூலம் இரண்டு தரப்புக்கும் மோதலை ஏற்படுத்தி, வன்னியர்களைத் தூண்டி வன்முறை அரசியல் நடத்த நினைக்கிறார். இதனால் மக்கள் அடித்துக்கொண்டு சாக வேண்டும் என நினைக்கிறார். தானும் தன் குடும்பமும் சொகு​சாக இருக்க வேண்​டும் என்ப​தைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. அவருக்கு வன்னியப் பாட்டாளிகள் மீது துளி அளவு அக்கறையும் இருந்தது இல்லை. இப்போது பேசுவது எல்லாம் தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற மட்டுமே. இது பாட்டாளி மக்கள் அனைவருக்கும் தெரியும்.''

ஏ.கே.நடராஜன் (வன்னியர் சங்​கத் தலைவர்):  ''வன்னியர் சமூகத்​தின் தலைவராக ராமதாஸை ஏற்றுக்​கொள்ள முடியாது. அவருக்கும் வன்னி​யருக்கும் எந்த உறவும் இல்லை. அவர் அரசியல்வாதி; வன்னியர் தலைவர் இல்லை. தேர்தலில் அவரை மக்கள் புறக்கணித்து விட்டனர். அதனால், தன் சுயநலத்துக்காக சந்தர்ப்பவாத அரசியல் நடத்துகிறார். சமூகத்தின் முன்னேற்றத்துக்காக நாங்கள் போராடுகிறோம். அவர் ஓட்டு அரசியல் நடத்துகிறார். அவருடைய பேச்சை எந்த வன்னியச் சொந்தமும் கேட்க மாட்டார்கள்''

''ராமதாஸுக்கும் வன்னியர்களுக்கும் சம்பந்தம் இல்லை!''

சி.என்.ராம​மூர்த்தி (வன்னியர் கூட்டமைப்புத் தலைவர்): ''ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக இப்போது ராமதாஸ் ஒப்பாரி வைக்கிறார். பாதிக்கப்பட்டவனுக்கு உதவுவதுதான் முதல் கடமை. தர்மபுரி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்னும் கேவலப்படுத்தும் வேலையைத்தான் ராமதாஸ் செய்துகொண்டு இருக்கிறார். 'வீடு கொளுத்தி’ என ராமதாஸுக்கு ஒரு பெயர் உண்டு. இப்போது 'ஊர்க்கொளுத்தி’ என பெயர் வாங்கப் புறப்பட்டு இருக்கிறார். இவரை நம்பி போராட்டத்தில் குதித்து உயிர் நீத்த 21 பேரின் குடும்பத்துக்கு சல்லிக்காசுகூடக் கொடுக்காதவர். உயிர்த்தியாகம் செய்தவர்கள் குடும்பத்தை நடுரோட்டில் விட்டுவிட்டுப் போனார். சமுதாயத் தலைவர் என சொல்லிக்கொள்கிறார். ஆனால், வன்னியர் சமூகத்துக்காகப் பாடுபட்ட ஏ.கே.நடராஜன், வாழப்பாடி ராமமூர்த்தி, வன்னிய அடிகளார் என பலர் இவரால் தாக்குதலுக்கு உள்ளானார்கள். வன்னியர்களுக்கே பாடுபடாதவர் எப்படி தலித்துகளுக்காகப் பாடுபட்டவர் என பட்டம் சூட்டிக்கொள்ள முடியும்? தலித்தை வைத்து கலப்புத் திருமணத்தை நடத்தி இருக்கிறாரா? தலித் ஏழை மாணவர்களை படிக்க வைத்தாரா?

இரண்டு ஊர்களில் இரண்டு பேர் சண்டை போட்டுக்கொண்டால் இவர் ஏன் தலையிடுகிறார். மற்ற சமூகத்தினரை அழைத்துக் கூட்டம் போட்டு தலித் சமூகத்துக்கு எதிராகத் திருப்பப் பார்க்கிறார். தர்மபுரியில் நடந்த சம்பவத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு போகும் வேலையை ராமதாஸ் ஏன் பார்க்கிறார். அந்தச் சம்பவத்தில் பா.ம.க-வினர் வன்முறையில் ஈடுபடவில்லையா? கருணாநிதி டெசோவைக் கையில் எடுத்ததுபோல, சமூக நீதிப் பேரவையைத் தூசி தட்டி இருக்கிறார். தேர்தலில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்காக இப்போது சாதி அரசியலைக் கையில் எடுத்திருக்கிறார். ராமதாஸின் நடவடிக்கைகளுக்காக, எந்தச் சட்டத்தில் வேண்டுமானாலும் கைது செய்யலாம்!''

- எம்.பரக்கத் அலி