Published:Updated:

தொண்டு நிறுவனங்களை முடக்குகிறதா மத்திய அரசு

அதிரடிச் சட்டம்... அலறும் அமைப்புகள்

தொண்டு நிறுவனங்களை முடக்குகிறதா மத்திய அரசு

அதிரடிச் சட்டம்... அலறும் அமைப்புகள்

Published:Updated:
##~##

ந்தியாவில் உள்ள சுமார் 4,000 தொண்டு நிறுவனங்களும் வெளிநாடுகளில்இருந்து நிதியுதவி பெறுவதற்குத் தடை விதித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். தடை விதிக்கப்​பட்ட தொண்டு நிறுவனங்கள் பட்டியலில் தமிழகத்​துக்குத்தான் முதல் இடம். இங்கிருக்கும் 794 தொண்டு நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருப்பது குறித்து ஆவேசப்படுகிறார், எவிடென்ஸ் தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குனர் கதிர். 

''ஊழலுக்கு எதிரான அண்ணா ஹஜாரேவின் போராட்டமும், கூடங்குளம் போராட்டமும் தேசிய அளவில் மக்கள் கவனத்தை ஈர்த்தன. இந்தப் போராட் டங்களின் பின்னணியில் சில தொண்டு நிறுவனங்கள் இருப்பதாக அரசுக்குச் சந்தேகம். அதனால்தான் என்.ஜி.ஓ-க்கள் குறித்து ஆய்வு நடத்தி, நாடு முழுக்க 4,000 என்.ஜி.ஓ-க்களுக்குத் தடை விதித்துள்ளனர். எந்த விசாரணையும் செய்யாமல், எந்த விளக்கமும் கேட்காமல், 'விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன’ என்று, நிதி பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. விதிமுறை மீறல், மோசடி, ஊழல் எல்லாமே எல்லாத் தளங்களிலுமே

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொண்டு நிறுவனங்களை முடக்குகிறதா மத்திய அரசு

இருக்கத்தான் செய்கின்றன. என்.ஜி.ஓ-க்களும் விதிவிலக்கல்ல. நிதியைத் தவறாகப் பயன்படுத்திய என்.ஜி.ஓ-க்களைக் கண்டறிந்து, அவற்றின் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதை​விடுத்து, அனைத்து என்.ஜி.ஓ-க்களுக்கும் செக் வைத்​துள்ளது மத்திய அரசு.  

எல்லா என்.ஜி.ஓ-க்களும் வெளிநாட்டுப் பணத் தில் மஞ்சள் குளிக்கிறார்கள் என்ற கருத்து மிக வும் தவறானது. வெளிநாட்டில் இருந்து நிதி பெறு தல், அதைச் செலவு செய்தல் போன்ற​வற்றைத் தான்தோன்றித்தனமாகச் செய்துவிட முடியாது. எஃப்.சி.ஆர்.ஏ. 1976 சட்டத்தின் அடிப்படையில் உரிமம் பெற்ற தொண்டு நிறுவனங்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து நிதி பெற முடியும். எந்தெந்த நாடுகளில் இருந்து எவ்வளவு நிதி, எதற்காகப் பெறப்பட்டது என்பது உள்ளிட்ட ஆடிட் அறிக்கையையும் உரிய நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். கடந்த 2010-ம் ஆண்டில் இந்த எஃப்.சி.ஆர்.ஏ. சட்டத்தில் பல திருத்தங்களைக் செய்தது மத்திய அரசு. நிதி உதவி பெறுவதை முறைப்படுத்துவது என்பதைத் தாண்டி, தொண்டு நிறுவனங்களின் அடிப்படைச் செயல்பாடுகளுக்கே வேட்டு வைக்கிற அளவுக்குச் சில திருத்தங்களும் செய்யப்பட்டு உள்ளன. தலித்கள், ஆதிவாசிகள், பெண்கள், மாணவர்கள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் இயக்கம் சார்ந்த செயல்பாடுகளில் தொண்டு நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது என்று மறைமுகமாக எச்சரிக்கிறது புதிய சட்டம்.

இன்று, எய்ட்ஸ் விழிப்பு உணர்வு மக்களிடையே இந்த அளவுக்குப் பெருகியதற்குக் காரணம் என்.ஜி.ஓ-க்கள்தான். ஆடு மாடுகளைவிட மோசமாக நடத்தப்பட்ட தலித் மக்களின் அவலங்களை வெளியே கொண்டுவந்து, அவர்களுக்கு உரிமை பெற்றுத்தரப் போராடுவதில் என்.ஜி.ஓ-க்களின் பங்கு அசாதாரணமானது. என்கவுன்டர், லாக்-அப் டெத், சித்ரவதை, விசாரணை என்று காவல் துறையின் அத்துமீறல்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பதற்கும் என்.ஜி.ஓ-வைத் தவிர வேற யாரும் கிடையாது.

தொண்டு நிறுவனங்களை முடக்குகிறதா மத்திய அரசு

ஆனால், சுகாதாரம், வீடு கட்டிக்கொடுப்பது மாதிரியான நலன் சார்ந்த பணிகள் மட்டுமே செய்யுங்கள். மனித உரிமைகள் பற்றியோ, தொழிலாளர் உரிமை பற்றியோ, தலித் வன்கொடுமைகள் பற்றியோ பேசக் கூடாது என்று சொல்வது அதிகார அத்துமீறலின் உச்சம். வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதற்குத் தடை விதித்தால், நலன் சார்ந்த பணிகளை நாங்கள் எப்படிச் செய்ய முடியும்?

காங்கிரஸ், பி.ஜே.பி. போன்ற கட்சிகள் பல தொண்டு நிறுவனங்களை நடத்துகின்றன. வெளி நாடுகளில் இருந்து கோடிக்கோடியாய் பணம் வாங்கி கட்சியை வளர்க்கின்றன. பல பெரிய பண முதலைகள் தங்களுடைய கறுப்புப் பணத்தை, தாங்களே தொண்டு நிறுவனங்கள் நடத்தி வெள்ளை ஆக்கு​கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் எந்தத் தடையும் இல்லை. ஆனால், சமூகப் பணியில் மட்டும் ஈடுபடும் என்.ஜி.ஓ-க்களைக் குறி​வைத்துத் தாக்குகிறார்கள். தவறு செய்த சில தொண்டு நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து, மக்களுக்காக உண்மையாகச் செயல்படும் பல தொண்டு நிறுவனங்களும் முடக்கப்படுவது தேச அழிவுக்கான அபாயம்'' என்று சீறினார்.

ஆனால் மத்திய உள் துறை அமைச்சக வட்டாரமோ, ''தொண்டு நிறுவனங்களின் தேவையையும், சேவையையும் நாங்கள் நன் றாகவே அறிந்துள்ளோம். அந்த அமைப்பு​களை மேலோட்டமாகப் பார்த்தால் சேவை நோக்கம் உள்ளவை போலத்தெரியும். ஆனால், அனைத்து அமைப்புகளுக்கும் உள்நோக்கம் உண்டு. சில குறிப்பிட்ட விஷயங்களைக் கையில் எடுக்கும் அமைப்புகளுக்குத்தான் வெளி நாட்டுப் பணம் ஏராளமாகக் கிடைக்கிறது. அதைக் குறி வைத்தே இவை செயல்படுகின்றன. வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தில் ஐந்தில் ஒரு பங்கைக்கூட இத்தகைய சில நிறுவனங்கள் செலவு செய்வது இல்லை. ஆய்வு நடத்தினோம், விசாரணைக் கமிஷன் வைக்கிறோம் என்று கணக்குக் காட்டுவதற்காக சில செயல்களைச் செய்கிறார்கள். அன்னிய நாடுகளில் இருந்து பணம் வருவதை கண்காணிப்பது நாட்டு நலன் கருதித்தான். இதைக் கண்காணிப்பதற்கான அதிகாரம் உள்துறைக்கு இருக்கிறது. நேர்மையான நிறுவனங்களாக இருந்தால், அவர்கள் யாரும் பயப்படத் தேவை இல்லை'' என்கிறார்கள்.

இனி, சிக்கல்தான்!

- எஸ்.ஷக்தி