Published:Updated:

நடுராத்திரியில் 'வழிப்பறி' போலீஸ்?

அதிரும் புதுக்கோட்டை

நடுராத்திரியில் 'வழிப்பறி' போலீஸ்?

அதிரும் புதுக்கோட்டை

Published:Updated:
##~##

'..........பயலுக்கு டிசம்பர் 5-ம் தேதி ராத்திரி வெளியில் என்னடா வேலை?’ என்று கேட்டு என்னைப் புரட்டி எடுத்து விட்டனர்’ என்று போலீஸ்காரர்கள் மீதே போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார், புதுக்கோட்டையைச் சேர்ந்த முகமது இக்பால். அவரது புகாரைக் கையில் எடுத்த உயர் நீதிமன்றம், அந்தப் போலீஸ்காரர்களை புரட்டி எடுக்க ஆரம்பித்துள்ளது! 

முகமது இக்பாலைச் சந்தித்துப் பேசினோம். ''நான் புதுக்கோட்டையில் கட்டுமானத் தொழில் செய்கிறேன். என் மனைவி பர்வீன் சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றுகிறார். டிசம்பர் 5-ம் தேதி இரவு 11 மணிக்கு எங்கள் நிறுவனத்துக்கு வெல்டிங் செய்து தருபவருக்குப் பணம் கொடுக்கச் சென்றேன். அப்போது, பட்டறை உரிமையாளர் இல்லை. அதனால், அவர் வரும் வரை என்னுடைய காரில் காத்திருந்தேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடுராத்திரியில் 'வழிப்பறி' போலீஸ்?

அப்போது, போலீஸ் ரோந்து வாகனம் வந்தது. அதில், ஐந்து பேர் இருந்தனர். மூன்று பேர் யூனிஃபார்மிலும் இரண்டு பேர் சாதாரண உடையிலும் இருந்தனர். யூனிஃபார்மில் இருந்தவர்கள் அணிந்திருந்த பேட்ஜ் மூலம் அவர்களுடைய பெயர் குமார், முத்துக்குமார், ரவி என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் என்னிடம், 'யாருடா நீ... உன் பேரென்ன?’ என்று கேட்டனர். நான் என்னுடைய பெயரைச் சொன்னதும், 'உங்களாலதான்டா இன்னைக்கு எங்களுக்கு இந்தத் தலைவலி புடிச்ச வேலை. இங்க என்னடா புடுங்குற?’ என்று கேட்டு கன்னத்தில் அறைந்தனர். என்னை  வண்டியிலும் முட்ட வைத்தனர்.

'நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை சார். கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நடத்துகிறேன். என் மனைவி ஹைகோர்ட் வக்கீல்’ என்றேன். அதைக் கேட்டதும், 'உன் மனைவி வக்கீல்னா..?’ என்று அசிங்கமான வார்த்தைகளால் என்னையும் என் குடும்பத்தையும் திட்டினர். என்னிடம் இருந்த 75 ஆயிரம் ரூபாயையும், வெள்ளி மோதிரம் மற்றும் கழுத்தில் இருந்த தங்கச் செயினையும் பறித்துக்கொண்டனர். அதன்பிறகு, என்னை கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்றனர். அப்போது, மற்றொரு ரோந்து வாகனம் வந்தது. என்னை அடித்து உதைத்து அந்த வண்டியில் ஏற்றினர். புதுக்குளம் கரையில் உள்ள மாரியம்மன் கோயிலுக்கு அருகே என்னை இறங்கச் சொன்னார்கள். 'நடந்த விஷயத்தை வெளியில் சொல்லக் கூடாது. மீறிச் சொன்னால், வழக்குப் போடுவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது’ என்று மிரட்டினர். பிறகு, கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய் வெள்ளைத் தாளில் கையெழுத்து வாங்கினர்...'' என்று கலங்கினார்.

அடுத்து நடந்ததை முகமது இக்பாலின் மனைவியும் வழக்கறிஞருமான பர்வீன் பேசினார். ''நள்ளிரவு

நடுராத்திரியில் 'வழிப்பறி' போலீஸ்?

2.30 மணிக்குத்தான் எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே நான் கணேஷ் நகர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் பேசினேன். அப்போது பணியில் இருந்த ராஜி என்ற எஸ்.ஐ. போனை எடுத்தார். நான் விவரத்தைச் சொன்னதும், 'உன் புருஷனை இப்போது வெளியில்விட முடியாது. உன்னால் முடிஞ்சதை செஞ்சுக்கோ’ என்றார். உடனே நான் என் கணவரின் நண்பர்களுக்குத் தகவல் சொன்னேன். அவர்கள் ஸ்டேஷனுக்குப் போனபோது, 'ஒரு பெட்டி கேஸ் போடவேண்டி இருக்கு. காலையில் வாங்க’ என்று அவர்களை ராஜி திருப்பி அனுப்பிவிட்டார். இவர்கள் நினைத்தால் யார் மீது வேண்டுமானாலும் கேஸ் போடலாமா? என் கணவரை அடித்து முதுகுத் தண்டுவடத்தை உடைத்துள்ளனர். அதன்பிறகு, சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்ந்தவரை, கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர்.  இதை அடுத்துத்தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தேன். உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள், எட்டு போலீஸ்காரர்களையும் வரும் 19-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு போட்டுள்ளனர். மூன்று போலீஸ்காரர்கள் மீது இப்போது எஃப்.ஐ.ஆர். போடப்பட்டு உள்ளது. முஸ்லிமாக இருப்பது போலீ ஸின் பார்வையில் இத்தனை பெரிய குற்றமா?'' என்று கொந்தளித்தார்.  

போலீஸ் தரப்பு விளக்கம் அறிய சம்பவத்தன்று ரோந்துப் பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ. ரவியைத் தொடர்புகொண்டோம். ''நான் 20 வருடங்களாக பணியில் உள்ளேன். பொதுமக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும். அன்று சந்தேகப்படும்படியாக ஒரு கார் ரோட்டில் நீண்ட நேரமாக நிற்கிறது என்று தகவல் வந்தது. உடனே, நாங்கள் சென்று பார்த்தோம். காரில் இருந்த முகமது இக்பால், 'நான் லோக்கல் ஆள்தான். சும்மா காரில் ரெஸ்ட் எடுக்கிறேன்’ என்றார். 'வீட்டில் போய் ரெஸ்ட் எடுங்கள். இங்கு தேவை இல்லாமல் நிக்காதீங்க’ என்றோம்.

ஆனால், அவர் அதைப் புரிந்துகொள்ளாமல், வாக்குவாதம் செய்தார். அதனால், ஸ்டேஷனுக்கு அழைத்தோம். 'என் மனைவி ஹை கோர்ட் அட்வகேட். என்னை நீங்க ஒண்ணும் செய்ய முடியாது’ என்றார். அதன்பிறகு, அவர் காரிலேயே ஸ்டேஷனுக்கு வருகிறேன் என்றார். ஆனால், ஸ்டேஷனுக்குப் போகாமல் வேறு எங்கோ காரை ஓட்டினார். அதனால்தான் அவரை எங்களுடைய வண்டியில் ஏற்றினோம். எங்களை அவர் அசிங்கமாகத் திட்டியதால், அவர் மீது நாங்கள் ஒரு புகார் கொடுத்து உள்ளோம். அன்று எத்தனை சென்சிட்டிவான தினம். அன்று, இஸ்லாமியரை நாங்கள் அப்படி நடத்துவோமா?'' என்றார்.

இந்த வழக்கில் வரும் வியாழக்கிழமை உயர் நீதிமன்றத்தில் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் ஆகிறது. அப்போது உண்மை தெரிந்துவிடும். 'காவல் துறை உங்கள் நண்பன்’ என்கிறார்கள். ஆனால், அப்படி நடந்து கொள்கிறார்களா?

- ஜோ.ஸ்டாலின்