Published:Updated:

தொடரப்போகிறதா சாதி கலவரம்?

கோவையில் கொந்தளித்த சாதி அமைப்புகள்

தொடரப்போகிறதா சாதி கலவரம்?

கோவையில் கொந்தளித்த சாதி அமைப்புகள்

Published:Updated:
##~##

டுத்த ஆட்டத்துக்குத் தயாராகிவிட்டார் ராமதாஸ்! 

பிரதான அரசியல் கட்சிகளால் தனி மைப்படுத்தப்படுவதால், சாதி அமைப்புகளின் கைகளைப் பிடித்துள்ளார். 51 சாதிய அமைப்புகளை ஒருங்கிணைத்து, 'அனைத்து சமுதாயப் பாதுகாப்புப் பேரவை’ என்று பெயர் சூட்டியுள்ளார். இந்தப் பேரவையின் கூட்டம் கடந்த 21-ம் தேதி கோவையில் கூடியது. உள் அரங்கக் கூட்டமான இதனைக் கண்டித்து தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடு தலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கூட்டத்தில் பேசப்பட்டவை இங்கே...

ஜெயக்குமார், (அனைத்து நாயுடு நாயக்கர் மகாஜன சங்கம்): ''தமிழகத்தில் 20 சதவிகிதம் உள்ளவர்களுக்கு எதிராக 80 சதவிகிதத்துக்கும் மேல் இருப்பவர்கள் போராட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நம்மிடம் பண பலம், ஆள் பலம் எல்லாம் உள்ளது. அவர்களிடம் உள்ளது பி.சி.ஆர். சட்டம் மட்டுமே. அதை வைத்துத்தான் நம்மை மிரட்டுகிறார்கள். அதை நாம் பறிக்க வேண்டும். நீங்கள்தான் (ராமதாஸ்) திருமாவளவனை அழைத்து மாநாடு நடத்தினீர்கள். அவரை வளர்த்துவிட்டது நீங்கள்தான். இனி நீங்கள் திருமாவளனுடனோ, தாழ்த்தப்பட்ட வேறு அமைப்பைச் சேர்ந்த யாரு டனோ கைகோக்கக் கூடாது. அப்படிச் சேர்வதாக இருந்தால், நாங்கள் உங்களுடன் வர மாட்டோம்.''

தொடரப்போகிறதா சாதி கலவரம்?

குமார.ரவிக்குமார், (கொங்கு இளைஞர் பேரவை): ''சாதி மறுப்புத் திருமணம், கலப்புத் திருமணம் என அரசியல் கட்சிகள் பேசுகின்றன. யாராவது இதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்களா? கொளத்தூர் மணி தனது இரண்டு பெண்களுக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்துள்ளார். ஒரு பெண்ணை வன்னியருக்கும், மற்றொரு பெண்ணை நாடார் இனத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் செய்து கொடுத்தார். ஏன் தாழ்த்தப்பட்டவர்களுக்குச் செய்து கொடுக்கவில்லை?''

பொங்கலூர் மணிகண்டன், (கொங்கு வேளாளர் பேரவை): ''ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் தமிழக அமைச்சர் ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண், தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவரால் கடத்திச் செல்லப்பட்டு 50 லட்ச ரூபாய் கொடுத்து மீட்கப்​பட்டார். இதேபோல், ஏழு போலீஸ் உயர் அதிகாரிகளின் குடும்பத்தாரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் 963 பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 716 பேர் வாழாவெட்டியாக உள்ளனர். 36 பெற்றோரும் 12 இளம்பெண்களும் தற்கொலை செய்துள்ளனர். ஏழு ஆண்டு​களில் 300 கோடி ரூபாய் பணத்தை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நமது சமூகத்தி​னரிடம் இருந்து கறந்துள்ளனர். ராமதாஸ் இனி திராவிடக் கட்சிகளுடன் செல்லக் கூடாது. அதில் உறுதியாக இருந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.''

ஜோதி முத்து, (பசும்பொன் தேவர் தேசியக் கழகம்): ''எல்லா சமூகத்தினரும் ஒன்று சேர்ந்துள்ளதால்,

தொடரப்போகிறதா சாதி கலவரம்?

திருமாவளவன் பயந்துவிட்டார். அரசியல் வழியில் சென்றதால் ராமதாஸ், திருமாவளவனுடன் சேர்ந்​தார். அரசியலா, சாதியா என வரும்போது, சாதிதான், சமுதாயம்தான் முக்கியம் என்று இங்கு வந்துள்ளார். அடங்க மறுத்தால் நிலைமை என்ன ஆகும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.''

காமராஜ், (தமிழ்நாடு ரெட்டியார் சங்கம்): ''இனி வரும் தேர்தல்களில் சாதித் தலைவர்கள் சொல் வதுதான் நடக்க வேண்டும். நம்பியூரில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்துவதாக அறிவித்து, போலீஸ் பாதுகாப்புடன் அணிவகுத்து வந்தனர். ஒரு லோடு செங்கல் எடுத்துத் தாக்கினோம். அதோடு வாலை சுருட்டிக் கொண்டனர். இனி, யாரும் வாலாட்ட அனுமதிக்கக் கூடாது.''

ஞானசம்பந்தன், (இந்து மக்கள் கட்சி): ''ராமதாஸ் மீது வருத்தத்தில் இருந்தோம். திருமாவளவனுக்கு அரசியல் அங்கீகாரம் தந்தார். தலித் அமைப்பினரோடு சேர்ந்து செயல்பட்டார். இனி அவர் அதுபோன்று செயல்படக் கூடாது. வடக்கே வன்னியர், தெற்கே தேவர், நாடார், நாயக்கர், மேற்கே கொங்கு வேளா​ளக் கவுண்டர்கள் என அனைவரும் இணையுங்கள். சமுதாய மாற்றம் மட்டும் அல்லாமல் அரசியல் மாற்ற​மும் நிகழும். பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த யாரும் ஆட்சிக்கு வரவே இல்லை. ஓ.பன்னீர்​செல்வம் மட்டும் பொம்மை மாதிரி அமர்ந்து விட்டுச் சென்றிருக்கலாம். அவரை நாங்கள் தேவ ராகவே பார்க்கவில்லை.''

இவர்களைப் போன்றே பல்வேறு சாதிய அமைப்புகளைச் சேர்ந்த 24 தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பேசினர். இறுதியாகப் பேசினார் பா.ம.க. தலைவர் ராமதாஸ். ''நீங்கள் எல்லோரும் சொன்ன கருத்தை இந்த அமைப்பு ஏற்கிறது. நான் உறுதியாகக் கூறுகிறேன். இனி, நீங்களே தீர்மானம் போட்டு என்னை அவர்களுடன் இணையச் சொன்னாலும் இணைய மாட்டேன். ஏனென்றால் எனக்குப் பொய் பேசத் தெரியாது. தமிழகத்தில் உள்ள தலைவர்களிலேயே பொய் பேசத் தெரியாத ஒரே தலைவன் ராமதாஸ்தான்.

நம் முன் இரு பிரச்னைகள் உள்ளன. ஒன்று பி.சி.ஆர். சட்டம். மற்றொன்று நாடகக் காதல் திருமணங்கள். பி.சி.ஆர். சட்டத்தில் புகார் அளிக்கவும், வழக்குத் தொடரவும் இனி ஒருவனுக்கும் தைரியம் வரக்கூடாது. மற்ற சமூகப் பெண்களை கிண்டல் செய்வதற்கோ, தொந்தரவு செய்வதற்கோ ஒருவரும் முன்வரக் கூடாது. குழந்தைகளிடம் சாதியைப்பற்றி சொல்லுங்கள். குறிப்பாக பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் பெண் குழந்தைகளிடம் சாதியைப்பற்றித் தெளிவாகச் சொல்லுங்கள்.

பி.சி.ஆர். சட்டத்தைத் திருத்தவும், நாடகக் காதல் திருமணங்களைத் தடுக்கவும் வலியுறுத்தி, ஜனவரி 24-ம் தேதி நாம் நடத்தும் போராட்டத்தை வெற்றி​கரமாக நடத்த வேண்டும். அந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் திரள வேண்டும். அதைத் தொடர்ந்து சென்னை, மதுரை, கோவையில் மாநாடு நடத்தப்​படும்'' என்றார்.

நாடு ரொம்பப் பின்னோக்கிப் போகிறதோ?

- ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்