Published:Updated:

அந்தக் கொடூரனை எங்களிடம் விடுங்கள்..!

பலியான மாணவி... ஆவேச மக்கள்

அந்தக் கொடூரனை எங்களிடம் விடுங்கள்..!

பலியான மாணவி... ஆவேச மக்கள்

Published:Updated:
##~##

டெல்லியில் மருத்துவக் கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரத்துக்கு எதிராக மாணவர்கள் ஆவேசத்துடன் போராடி​வரும் நிலையில், அத்தகைய ஒரு கொடூரம் தூத்துக்​குடியிலும் அரங்கேறிவிட்டது! 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவரது கணவர் சவுந்திரராஜன் கடந்த ஆண்டு இறந்துவிட்டார். நடுநிலைப் பள் ளி​யில் சமையல் உதவியாளராகப் பணிபுரியும் பேச்சியம்மாளுக்கு புனிதா, ரோகிணி என்ற இரு பெண் குழந்தைகள். 12 வயதான புனிதா, நாசரேத்தில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்தார். பள்ளி விடுதியில் தங்கிப் படித்த புனிதா, விடுதியில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால், கடந்த 10 நாட்களாக வீட்டில் இருந்து ரயில் மூலம் பள்ளிக்குச் சென்று வந்திருக்கிறார். பள்ளி செல்வதற்கு தாதன்குளம் ரயில் நிலையத்துக்கு வந்தபோதுதான் அந்தக் கொடூரம் நடந்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தக் கொடூரனை எங்களிடம் விடுங்கள்..!

புனிதாவின் தாய் பேசவும் முடியாத சோகத்​தில் இருந்ததால் புனிதாவின் பெரியப்பா லாரன்ஸிடம் பேசினோம். ''வீட்டில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கு, தினமும் அவங்க அம் மாதான் கூட்டிட்டுப் போவாங்க. அன்னிக்கு ரேஷனில் அரிசி போட்டதால், புனிதாவைத் தனியா அனுப்பிட்டாங்க. தினமும் நாலைஞ்சு பிள்ளைகள் நடந்தேதான் போவாங்க. சம்பவம் நடந்த 20-ம் தேதி, மற்ற குழந்தைகள் அவங்கவங்க சொந்தக்காரங்களோட பைக்கில் போயிட்டாங்க. அவங்களும் புனிதா நடந்து வருவதைப் பார்த்து இருக்காங்க. அந்தச் சிறுமிகள் ஸ்டேஷனில் போய் இவளுக்காக டிக்கெட் எடுத்துக் காத்திருந்தும், புனிதா போய்ச்சேரலை. சாயங்காலம் அந்தப் பிள்ளைகள், 'புனிதா இன்னைக்கு ஸ்கூலுக்கு வரலை’னு சொன்னதும்தான் பயந்துபோய்த் தேடினோம். ராத்திரி முழுசும் கண்டுபிடிக்க முடியலை. காலையில எங்க தலையில இடி விழுந்துருச்சு. எங்க பிள்ளை அலங்கோலமா ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்​தில் இருந்த புதருக்குள் கிடப்பதைப் பார்த்ததும், எங்க இத யமே வெடிச்சிருச்சு'' என்று கலங்கினார்.

அந்தக் கொடூரனை எங்களிடம் விடுங்கள்..!

இந்தச் சம்பவத்துக்குக் காரணமான நபரை கைது​ செய்தால் மட்டுமே புனிதாவின் உடலை வாங்குவோம் எனக் கொதித்து எழுந்த கிராம மக்கள், சாலையில் மறியலில் நடத்தினர். உடனே, நான்கு தனிப் படைகள் அமைத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், சுப்பையா என்ப​வரைக் கைது செய்தனர். 'அந்த ரவுடியை எங்களிடம் ஒப்படையுங்கள் அல்லது என்கவுன்டரில் போட்டுத்தள்ளுங்கள்’ என்று மக்கள் மீண்டும் மறியல் நடத்தினர்.

இதுபற்றி, நம்மிடம் பேசிய வக்கீல் ஜோயல், ''குற்றவாளிக்கு அதிகபட்சத் தண்டனை கிடைக்க வேண்டும். குழந்தையைப் பறிகொடுத்த குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அரசு உடனே வழங்க வேண்டும். சாலை வசதி இல்லாததுதான் இந்தச் சம்பவத்துக்கு முக்கியக் காரணம். அதனால், கிராமங்களுக்கு முழுமையான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்'' என்று படபடத்தார்.

தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான ராஜேந்திரன், ''மணியாச்சி அருகே உள்ள பாறைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பையா. ஏற்கெனவே பல வழக்கு​களில் தொடர்பு உடையவர். திருமணமாகி இரண்டு பையன்களும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. பல முறை பெண்களிடம் தவறாக நடந்திருக்கிறார். சமீபத்​தில் அவருடைய சித்தி மகளிடம் தவறாக நடக்க முயற்சித்தது பற்றிய புகாரில் கைது செய்யப்பட்டு சிறை​யில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் ஜாமீனில் வந்தவர் சித்தி வீட்டுக்குப் போய், 'என் மீது ஏன் புகார் கொடுத்தாய்?’ என்று தகராறு செய்ததுடன் அரிவாளால் வெட்டியும் இருக்கிறார். மறுபடியும் அவர்கள் போலீஸில் புகார் கொடுக்கவே, தலைமறைவாகிவிட்டார். தாதன்​குளத்தில் உள்ள அவரது அண்ணன் வீட்டுக்குக் கிளம்​பியவர் நிறையக் குடித்திருந்ததால், ரயில் நிலையத்திலேயே படுத்துவிட்டார்.

மறுநாள் காலை வீட்டுக்குச் செல்லும் வழியில் புனிதாவைப் பார்த்தவர், அவளை தனது மகள் வயதுடைய சிறுமி என்றும் பார்க்காமல் புதருக்குள் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார். அந்தச் சிறுமி அலறியதால் துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டார். முந்தைய நாள் அவர் ரயில் நிலையத்தில் போதையில் படுத்திருந்தது தெரிந்ததால், அவரைப் பிடித்து விசாரித்து உண்மையைக் கண்டறிந்தோம். அவருக்கு அதிக பட்சத் தண்டனையை வாங்கிக் கொடுப்போம்'' என்றார் திட்டவட்டமாக.

இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து நேரில் ஆய்வு செய்துள்ள எவிடென்ஸ் கதிர், ''தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 2011-ல் மட்டும் 677 பாலியல் குற்றங்கள் நடந்துள்ளன. இதில் 70 சதவிகிதம் குழந்தைகள்தான் பாதிக்கப்பட்டனர். குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சீரழியுமே என, பெரும்பாலான பெற்றோர் புகார் செய்வது இல்லை. இதுபோன்ற குற்றங்களுக்கான தண் டனையைக் கடுமையாக்க வேண்டும். பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குச் சட்டம் இருப் பதுபோல, குழந்தைகளுக்கும் தனிச்சட்டம் இயற்றி குற்றவாளிகளுக்குக் கடுமையான தண் டனை வழங்க வேண்டும்' என்று ஆவேசப் பட்டார்.

டெல்லியிலும் இங்கேயும் குடித்துவிட்டுத்தான் இந்தத் தகாத காரியத்தைச் செய்துள்ளார்கள். அரசின் மது குறித்த பார்வையில் மாற்றம் வரவேண்டியது அவசியம்.

- ஆண்டனிராஜ்,

எஸ்.சரவணப் பெருமாள்

படங்கள்: எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்