Published:Updated:

தமிழ் மக்கள் வரலாறு

சோழப் பேரரசின் காலம் க.ப.அறவாணன் ஜூ.வி. நூலகம்

தமிழ் மக்கள் வரலாறு

சோழப் பேரரசின் காலம் க.ப.அறவாணன் ஜூ.வி. நூலகம்

Published:Updated:
##~##

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி, தி.வை.சதாசிவ பண்டாரத்தா, கே.கே.பிள்ளை - ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் சோழர் பேரரசு பற்றிய முதன்மை வரலாற்றை எழுதியதில் முக்கியமானவர்கள். இதில், பெரும்பாலும் சோழ அரசர்களின் வரலாறு முழுமையாகவும், சோழர்காலச் சமூக வரலாறு சற்றே குறைவாகவும் இருக்கும். மன்னர்களின் வரலாற்றைவிட, மக்களின் வரலாற்றைச் சொல் வதே உண்மையான வரலாறாக இருக்க முடியும். க.ப.அறவாணன் அதனையே இந்தப் புத்தகத்தில் செய்துள்ளார். 'ஒரு சிறப்பான சமுதாய வர லாற்று நூல் என்பது, அது களமாக எடுத்துக்கொண்ட மக்களின் சமூகப் போக்குகளையும் சமூக உளப்போக்குகளையும் கண்டறிந்து சொல்ல வேண்டும். அவ்வாறு கண்டறிந்து சொல்லப்பட்டவற்றில் இருந்துதான் நிகழ்கால வாசகரும் வருங்கால வாசகரும் படிப்பினைகளையும் பாடங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்’ என்ற நோக்கத்தோடு சோழர் கால மக்கள் குறித்து அறவாணன் எழுதி இருக்கிறார்.

தமிழ் மக்கள் வரலாறு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எல்லா மன்னர்களும் போர் செய்தனர். போர் இல்லாத சமயங்களில், சமயம் வளர்த்தனர். இதற்குச் சோழர்களும் விதிவிலக்கல்ல. அந்தக் காலத்தில் ஆண்கள் போரிலும் பெண்கள் கோயில்களிலும் ஈர்க்கப்​பட்டுள்ளனர். பாண்டிய மன்னன் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றியதுபோல, சோழர் காலத்தில் பெரிய நிகழ்வுகள் இல்லை என்றாலும் பிற்காலச் சோழ மன்னரால் இராமானுஜர் பட்ட துன்பங்கள் குறைத்து மதிப்பிடக்கூடியன அல்ல. சமஸ்கிருதம் கற்றுக்கொள்ள மானிய உதவிகள் அளித்தவர்கள் சோழர்கள். ஆனால், ஒரு தமிழ்ப் பள்ளிக்கூடம் கூட 400 ஆண்டு சோழ அரசர்களால் எங்குமே நடத்தப்படவில்லை என்பது வருந்தத்தக்கது.

சைவ சமய வழிபாடானது பதி, பசு, பாசம் என்ற கருத்துருவாக்கமாக உருவாக்கப்பட்டு, ஒரு சித்தாந்தமாக மாறியது சோழர் காலத்தில்தான். மெய்கண்​டாரின் சிவஞான போதம் சோழர் காலத்துக் கொடையே. கோயில்​களுக்குச் சொத்துக்கள் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு, 'போர்க் காலங்களில் மன்னர்​களைக் காப்பாற்றியது இவைதான். ஏராளமான கோயில்களை உருவாக்கி​யதால்தான் அரசுக்கு எதிரான கலவரமே ஏற்படவில்லை’ என்கிறார் அறவாணன். 'எல்லாம் ஊழ்வினைப் பயன்’ என்று நொந்துபோய்த் தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்ள மக்கள் அப்போதுதான் தொடங்கி இருக்கிறார்கள்.

பிராமணர்கள், சாதிகள், குழுக்கள் பற்றிய விரிவான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. வடங்கை - இடங்கை பிரிவு காரணமாக ராஜ​மகேந்திர சதுர்வேதி மங்கலம் தீயிடப்பட்டது அன்றைய தொடக்கம்.

'சோழர்கள் ஆற்றிய பெருமிதமான அரசியல், அவற்றின் வல்லடிப் போர்கள்’ ஆரவாரமான உலாக்கள் போன்றவற்றை நாம் மறக்கலாம். ஆனால், காலத்தை வென்று நிற்கிற சோழரின் சாதனைகளான கலைமண்டிய கல்லோவியக் கோயில்கள், கூத்தரும் கம்பரும் தந்த தமிழமுத இலக்கியங்கள், நிலச் செழுமைக்குத் துணை வந்த நீர்ப்பாசன வாய்க்கால்கள், ஏரிகள் ஆகிய மூன்றும்தான் சோழப் பேரரசின் சிரஞ்சீவிப் பெருமைகளைப் பறைசாற்றுகின்றன’ என்கிறார் அறவாணன். கடந்தகால மனித சமூகத்தை அறிய, அறவாணன் தனது ஆற்றலைச் செலவிட்டு இருப்பது, தொடர வேண்டிய பணி!

- புத்தகன்