##~## |
உலகமே, 'ஹேப்பி நியூ இயர்’ என்று குதித்துக்கொண்டிருந்த நேரத்தில், இரண்டு பேரால் கொடூரமாகச் சீரழிக்கப்பட்டிருக்கிறாள் ஒரு மாணவி!
புதுச்சேரி, கொத்தபுரிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சித்ரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 12-ம் வகுப்பு படிக்கிறார். புத்தாண்டு தினத்தில் டியூஷனுக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. சித்ராவின் பெற்றோர் பதறியடித்துத் தேடினர். அதிகாலை 4 மணிக்கு, சித்ராவின் அம்மாவின் செல்போன் அலறி இருக்கிறது. 'அம்மா, நான் விழுப்புரம் பஸ் ஸ்டாண்ட்ல இருக்கேன். யாராவது வாங்களேன்...’ என்று அழுதபடியே இணைப்பைத் துண்டித்து இருக்கிறார் சித்ரா. உடனே சென்று அவளை அழைத்துவந்து, புதுச்சேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

என்ன நடந்தது என்று சித்ராவின் சித்தப்பா முருகனிடம் பேசினோம். ''டியூஷன் போயிட்டு வீட்டுக்கு வர பஸ் ஏறி இருக்கா. அப்போ ரெகுலராப் போய் வரும் பஸ் என்பதால், எல்லோரும் பழக்கமானவங்களா இருந்திருக்காங்க. பஸ்ல கூட்டம் இல்லையாம். பஸ் கண்டக்டர் முத்துக்குமரன், 'உங்கம்மாவுக்கு திடீர்னு உடம்புக்குச் சரியில்லையாம். விழுப்புரம் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்க. உன்னை அங்கே வரச் சொன்னாங்க’னு சொல்லியிருக்கார். சித்ரா பதறிப்போய் அழுதிருக்கு. உடனே, கர்ச்சீப்பைக் கொடுத்திருக்கார். அதை வாங்கித் துடைச்சிருக்கு. பாவி, அதில் மயக்க மருந்தை வச்சிருக்கார். சித்ரா மயக்கமானதும் அவளைக் கைத்தாங்கலாப் பிடிச்சு, வேற பஸ்ல விழுப்புரம் கூட்டிட்டுப் போயிருக்கார். விழுப்புரத்தில் வெங்கடாசலம் என்ற பையன் இவர்களுடன் சேர்ந்திருக்கிறார். அவர் இன்ஜினீயரிங் காலேஜ் மாணவராம். இருவரும் சேர்ந் துதான் சித்ராவை ஒரு வீட்டுக்குக் கொண்டுபோயிருக்காங்க. அரை மயக்கத்துல இருந்த சித்ரா வை விடிய விடிய ரெண்டு பேருமாச் சேர்ந்து சின்னாபின்னம் ஆக்கி இருக்காங்க. மயக்கம் தெளிஞ்சு சித்ரா கத்த ஆரம்பிச்சதும், திரும்பவும் மயக்க மருந்து கொடுத்துட்டாங்க. சித்ரா மயக்கம் தெளிஞ்சு பார்த்தப்ப விழுப்புரம் பஸ் நிலையத்தில் இருந்திருக்கு...'' என்றார் வேதனையாக.

சித்ராவின் அம்மா ராஜி கதறுகிறார்... ''சித்ராவைக் காணோம்னு ராத்திரியே புகார் கொடுக்க

ஸ்டேஷனுக்குப் போனோம். அப்ப போலீஸ் எங்களை விரட்டியடிச்சாங்க. இப்போ, எங்க பெண்ணுக்கு எதிராவே கேஸ் போடப் பார்க்குறாங்க. 'எப்படிக் கடத்துனாங்க.. எப்படிக் கெடுத்தாங்க?’னு நாலு பேரு சுத்தி நின்னுட்டு அசிங்கமாக் கேட்குறாங்க. 'உங்க புள்ளைக்குத்தான் காயம் எதுவும் இல்லையே... அப்புறம் ஏம்மா பிரச்னையைப் பெருசாக்குறீங்க. பேசாம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க’னு போலீஸ்காரங்க மிரட்டுறாங்கய்யா'' என்று அழுதார்.
கண்டக்டர் முத்துக்குமாரன், வெங்கடாசலம் ஆகிய இருவரையும் விழுப்புரம் போலீஸ் கைதுசெய்து, புதுச்சேரி போலீஸாரிடம் ஒப்படைத்திருக்கிறது. இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது போலீஸ்.
வழக்கை விசாரிக்கும் வில்லியனூர்இன்ஸ்பெக்டர் பாஸ்கரனிடம் பேசினோம். ''அந்தப் பெண்ணும் முத்துக்குமரனும் காதலித்து இருக்கிறார்கள். அதில் ஏதோ பிரச்னை. அதுபற்றி விசாரிக்கிறோம்'' என் றவரிடம், ''காதலித்த பெண்ணை எதற்காக நண் பருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ய வேண் டும்?'' என்று கேட்டோம். ''அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் இது காதல் விவகாரம்தான்'' என்றார். போலீஸாரின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, தீக்குளிக்க முயன்ற சித்ராவின் அப் பாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டனர்.
சித்ராவும், கைது செய்யப்பட்டு இருப்பவர்களும் வெவ்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், விவகாரம் சாதி மோதலாக மாறும் அபாயமும் இருக்கிறது!
- நா.இள அறவாழி
படங்கள்: ஜெ.முருகன்