Published:Updated:

கோவைக்குள் நுழையப்போகும் யானைகள்!

அலறும் கொங்கு மண்டலம்

கோவைக்குள் நுழையப்போகும் யானைகள்!

அலறும் கொங்கு மண்டலம்

Published:Updated:
##~##

ங்கிலப் புத்தாண்டின் முதல் நாளிலேயே இரண்டு மனித உயிர்களைக் காவு வாங்கிவிட்டன காட்டு யானைகள். அதிர்ச்சியில் மிரள்கிறது கோவை! 

தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக வனப் பகுதியில் வசிக்கும் யானைகள், ஆண்டுதோறும் வட கிழக்குப் பருவமழைக் காலங்களில் கேரளா மற்றும் தமிழகத்தின் மேற்குப் பகுதிகளில் இடம்பெயர்வது வழக்கம். இந்தத் தருணங்களில்தான் யானைகளால் மனிதர்களுக்கும் மனிதர்களால் யானைகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்துப் பேசும் இயற்கை ஆர்வலர்கள், ''யானைகளுக்கும் மனிதர்களுக்கும் மோதல் ஏற்படுவதற்கு அரசின் அலட்சியம்தான் காரணம். மக்களையும் யானைகளையும் பாதுகாக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதே இல்லை. பல ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் பிரச்னையை வனத் துறையினரால் சுலபமாகத் தீர்க்க முடியும். ஆனால் ஏனோ, அவர்கள் யானைகளைத் தடுக்க முயற்சி செய்வது இல்லை'' என்றனர்.

கோவைக்குள் நுழையப்போகும் யானைகள்!

இந்தப் பிரச்னைக்காகத் தொடர்ந்து போராட்​டங்களை நடத்திவரும் ம.தி.மு.க. மாநில இளைஞர்

கோவைக்குள் நுழையப்போகும் யானைகள்!

அணிச் செயலாளர் ஈஸ்வரன், ''கடந்த 10 ஆண்டுகளாகவே மனித உயிர்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகிகின்றன. யானைகள் காலங்காலமாகப் பயன்படுத்தும் பாதைகளை மறித்துக் கட்டப்படும் கல்லூரிகள், ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பண்ணை வீடுகள், ஆசிரமங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.  ஆனால், அரசு கண்டுகொள்ளவில்லை. மாறாக, பல கல்வி நிறுவனங்கள், தொழிற்​சாலைகளைப் புதிதாகத் தொடங்க அரசு அனுமதி அளித்து வருகிறது. அதனால், காட்டுப் பகுதிகளில் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. இதைத் தொடர்ந்து புதிதாக ஏற்படும் ஆக்கிரமிப்புகளையும் அரசு தடுப்பது இல்லை. இதேநிலை நீடித்தால் விரைவில் கோவை மாநகரப் பகுதிகளிலும் யானைகள் நுழையத்தான் செய்யும். இப்போதே கோவை புறநகரினுள் சர்வசாதாரணமாக யானைகள் நுழைய ஆரம்பித்து விட்டன. இனியும் நடவடிக்கை எடுக்காமல் தாமதிப்பது, மக்களின் உயிரோடு விளையாடுவதற்குச் சமம்.

யானைகள் காட்டைவிட்டு வெளியே வருவதற்கு முக்கியமான காரணங்கள் தண்ணீர் மற்றும் உணவுத் தட்டுப்பாடுதான். தண்ணீர் தேவையை நிறைவேற்றுவதற்கு வனத்துக்குள் தடுப்பு அணைகள், தண்ணீர்த் தொட்டிகளை அமைக்க வேண்டும். இந்தத் தண்ணீர் தொட்டிகளில் கோடைக் காலங்களிலும் தண்ணீர் இருப்பதை வனத்துறை உறுதி செய்ய வேண்டும். 695 கி.மீ. சதுர பரப்பளவு கொண்ட, கோவை வனப்பகுதியை நிர்வகிக்க, போதுமான பணியாளர்கள் நியமிக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க அகழிகளை முழுமையாக வெட்ட வேண்டும். கடந்த சில ஆண்டுகளாகவே அகழி வெட்டும் பணி அந்தரத்தில் நிற்கிறது. உடனே, இதில் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார்.

தமிழகப் பசுமை இயக்க மாநில இணைச் செயலாளர் ஜெயச்சந்திரன், ''நீலகிரி மாவட்டம், சீகூர் வனப் பகுதியில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக, வழக்குத் தொடர்ந்தோம். உயர் நீதிமன்றத்தில் எங்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பு கிடைத்தது. இதன் அப்பீல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்த பிறகு, கோவையிலும் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம். யானைகள் இயற்கையின் சொத்து என்பதால், அவற்றைக் பாதுகாக்க வேண்டியது அவசியம்'' என்று வேதனைப்பட்டார்.  

கோவைக்குள் நுழையப்போகும் யானைகள்!

கோவை மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசுவிடம் பேசினோம். ''கடந்த 16 ஆண்டுகளில் கோவை, வால்பாறைப் பகுதியில் மட்டும் 120 பேர் இறந்துள்ளனர். வழித்தட ஆக்கிரமிப்புதான் முக்கியமான பிரச்னை. ஆனால், யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு குறித்து நாங்கள் முடிவு எடுக்க முடியாது. உள்ளூர் திட்டக் குழுமம்​தான் கட்டடங்களுக்கு அனுமதி வழங்குகிறது. சில பகுதிகளில் 'ஹில்ஸ் ஏரியா கன்ஸ்ட்ரக்ஷன் அத்தாரிட்டி’ அனுமதி வழங்குகிறது. வனத்தில் யானைகளின் தாகம் தணிக்கத் தண்ணீர் வசதி போதுமான அளவுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவைப் பகுதியில் மொத்தம் 315 கி.மீ சுற்றுப்பாதை உள்ளது. அதில் 105 கி.மீ. தூரத்துக்குக் கடந்த மூன்று ஆண்டுகளில் அகழி வெட்டப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் விரைவில் அகழி வெட்டப்படும்'' என்றார்.

யானைகளிடம் இருந்து மனிதர்களையும், மனிதர்களிடம் இருந்து யானைகளையும் அரசுதான் காப்பாற்ற வேண்டும்!

- ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்

கோவைக்குள் நுழையப்போகும் யானைகள்!

 புத்தாண்டில் யானைகளுக்குப் பலியான மாயப்பனும் சங்கனும் வீரபாண்டி புதூரைச் சேர்ந்த மலைவாழ் மக்கள். தோட்ட வேலையில் ஈடுபட்டு இருந்தபோது, அவர்களைக் காட்டு யானைகள் கூட்டமாக வந்து தாக்கியதாகப் பகுதி மக்கள் சொல்கிறார்கள். இப்போதும் அந்தப் பகுதிக்கு அடிக்கடி ஆறேழு யானைகள் வந்து தோட்டங்களை துவம்சம் செய்வதாகவும் பாதுகாப்பு தேவை என்றும் அந்தப் பகுதி மக்கள் பதறுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism