Published:Updated:

பெரியார்

ஆயிரம் வினா - விடை ஜூ.வி. நூலகம்

பெரியார்

ஆயிரம் வினா - விடை ஜூ.வி. நூலகம்

Published:Updated:
##~##

 எல்லாவற்றையும் கேள்வி கேட்டவர் பெரியார். அவரைப் பற்றிய கேள்விகள் இவை. அவரது 95 வயது வாழ்க்கையைப் பற்றிய வினாக்கள் தொகுக்கப்பட்டு, அதற்கான பதில்கள் நிரம்பிய புத்தகம் இது.

'அவர் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’  என்று பாரதிதாசன் எழுதினார். 'குழந்தைப் பிறப்பை கடவுளின் பாக்கியம்’ என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருந்த காலத்தில், 'பிள்ளைப்பேறுக்கு ஆண், பெண் சேர்க்கை என்பதுகூட நீக்கப்படலாம். நல்ல திரேகத்துடனும் புதிய நுட்பமும் அழகும் திடகாத்திரமும் உள்ள பிரஜைகள் ஏற்படும்படியாக (பொலிகாளைகள் போல் தேர்ந்தெடுத்து) மணி போன்ற பொலி மக்கள் வளர்க்கப்பட்டு அவர்களது வீரியத்தை இன்ஜெக்ஷன் மூலம் பெண்கள் கருப்பைகளுக்குள் செலுத்தி குழந்தைகளை பிறக்கச் செய்யலாம்’ என்று அவர் சொல்லி 40 ஆண்டுகளுக்குப் பிறகுதான் டெஸ்ட் டியூப் பேபி பிறந்தது. 'கம்பி இல்லாத் தந்தி சாதனம் அனைவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ ஒவ்வொருவர் தொப்பியிலும் இருக்கும். உருவத்தை தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து ஆளுக்காள் உருவம் காட்டி பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும்’ என்று அவர் எப்போதோ சொன்னார். இன்று கம்ப்யூட்டர், செல்போன், டோங்கோ வசதியை அனைவரும் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். அத்தகைய தீர்க்கதரிசியை முழுமையாக அறிந்துகொள்ள வழிகாட்டியாய் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பெரியார்

மிக மிக நீண்டது பெரியாரின் வரலாறு. அவரே சொல்லி​ இருப்பதுபோல, தான் வாழ்ந்த காலத்தில் அனைத்தையுமே அவர் எதிர்த்து இருக்கிறார். 'நான் எதையாவது எதிர்க்காமல் இருந்திருக்​கிறேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். எதுவுமே எனக்குப் புலப் படவில்லை’ என்கிறார். அப்படிப்பட்டவரின் குடும்ப வாழ்க்கை, காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து நடத்திய வைக்கம், சேரன்மாதேவி, காஞ்சிபுரம் போராட்டங்கள், சுயமரியாதை இயக்கத்தின் தோற்றம், அதன் தத்துவங்களாக முன்மொழியப்பட்ட கடவுள் மறுப்பு, சாதி எதிர்ப்பு, மத நிராகரிப்பு போன்ற கனமான விஷயங்களை எளிமையான கேள்வி, பதில் வடிவில் திரட்டிக் கொடுத்துள்ளனர். பெரியாரின் சிந்தனைகளை திராவிடர் கழகம் ஏராளமான தொகுதிகளாக வெளியிட்டு உள்ளது. அவரது வரலாற்றை கவிஞர் கருணானந்தம் நாள் வரிசைப்படி பெரும் தொகுதியாக வெளியிட்டார். இரண்டு பகுதிகளாக எழுதி வெளியிட்டுள்ளார் கி.வீரமணி. இவை அனைத்தையும் ஒருசேரப் படித்தால் உணரமுடிகிற அனைத்துத் தகவல்களும் இந்தச் சிறு புத்தகத்தில் கேப்சூல் வடிவில் தரப்பட்டுள்ளது.

மார்க்ஸும் ஏங்கெல்ஸும் எழுதி வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை இந்திய மொழிகளில் முதலில் எந்த மொழியில் (தமிழில்) வெளியிடப்பட்டது என்பது முதல் பெரியாருக்குப் பிடித்தமான நொறுக்குத் தீனி எது (எள்ளுருண்டை!) என்பது வரை இருக்கும் 1,000 கேள்விகளும் கடந்த 100 ஆண்டு தமிழக அரசியலைப் படிக்கத் தூண்டும் நல்ல கேள்விகளாகவே அமைந்துள்ளன. பெரியாரின் கண்ணாடியில் கடந்த காலத்தைக் காட்டுகின்றன!

- புத்தகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism