Published:Updated:

உயிர் எப்போது போகும் என்றே தெரியாது: ஈராக்கில் சிக்கி தவிக்கும் தமிழக செவிலியர் அதிர்ச்சி தகவல்!

Vikatan Correspondent
உயிர் எப்போது போகும் என்றே தெரியாது: ஈராக்கில் சிக்கி தவிக்கும் தமிழக செவிலியர் அதிர்ச்சி தகவல்!
உயிர் எப்போது போகும் என்றே தெரியாது: ஈராக்கில் சிக்கி தவிக்கும் தமிழக செவிலியர் அதிர்ச்சி தகவல்!
உயிர் எப்போது போகும் என்றே தெரியாது: ஈராக்கில் சிக்கி தவிக்கும் தமிழக செவிலியர் அதிர்ச்சி தகவல்!

சென்னை: ஈராக்கில் இந்திய செவிலியர்கள் உள்ள மருத்துவமனை மீது குண்டுகள் வீசப்படும் அபாயம் உள்ளதாகவும், எப்போது எங்கள் உயிர் போகும் என்றே தெரியாது எனவும் ஈராக்கில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடியை சேர்ந்த செவிலியர் ரெஜிமா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

ஈராக்கில் உள்நாட்டுப் போர் உச்சக்கட்டம் அடைந்து வரும் நிலையில், நாட்டின் 2வது பெரிய நகரமான மொசூல் நகரத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் கடந்த 9ஆம் தேதி பிடித்தனர். அதைத் தொடர்ந்து முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த நகரமான திக்ரித்தை கைப்பற்றினர். இந்த திக்ரித் நகரில் இந்திய செவிலியர்கள் 46 பேர் உள்ளனர். இவர்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.

இதனிடையே, ஈராக்கில் அதிரடி தாக்குதல் நடத்தி திக்ரித் நகரை ராணுவம் மீட்டு விட்டது என்று தகவல்கள் வெளியானது. ஆனால் இந்திய செவிலியர்கள் அங்குள்ள மருத்துவமனையிலே சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் அங்கியிருந்து உடனடியாக வெளியேறுவதை விரும்புகின்றனர்.

இந்நிலையில், திக்ரித் நகரில் சிக்கியுள்ள தூத்துக்குடியை சேர்ந்த செவிலியர் ரெஜிமா, தமிழகத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தொலைபேசியில் தெரிவிக்கையில், "இந்திய செவிலியர்கள் உள்ள திக்ரித் நகரம் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. மருத்துவமனையில் இந்திய செவிலியர்கள் மட்டுமே இருக்கிறோம். டாக்டர்கள், நோயாளிகள் யாரும் கிடையாது. மருத்துவமனை வளாகத்தில் கட்டடங்கள் மீது குண்டுகள் வீச்சப்பட்டு எரிந்து வருகிறது. விரைவில் மீட்போம் என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. திக்ரித் மருத்துவமனை வளாகத்தில் நேற்று இரண்டு குண்டுகள் வெடித்தன. இந்திய செவிலியர்கள் உள்ள மருத்துவமனை மீது எந்த நேரத்திலும் குண்டுகள் வீசப்படும் அபாயம் உள்ளது. எப்போது எங்கள் உயிர் போகும் என்றே தெரியாது" என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு பேசியுள்ள மற்றொரு இந்திய செவிலியர் மரினா ஜோஸ், "எங்களால் இன்னும் ஒரு நாள் கூட இங்கு இருக்க முடியாது. இரவு முழுவதும் மருத்துவமனையை சுற்றியிலும் வெடிகுண்டுகள் வெடிக்கும் சத்தமே கேட்கிறது. ஹெலிகாப்டர்கள் மூலம் குண்டுகள் வீசப்படுகிறது. இப்பகுதியில் நின்ற கார்களும் எரிகின்றன. மருத்துவமனை கட்டடம் அருகில் குண்டு வெடிக்கும் போது எல்லாம் குலுங்கி வருகிறது. செஞ்சிலுவை சங்கத்தினர் மூன்று நாட்களுக்கு முன்னர் இங்கு வந்தனர். பாக்தாத்திற்கு செல்லும் சாலைகள் சரியானதும் உங்களை இங்கியிருந்து அழைத்து சென்றுவிடுவோம் என்று அவர்கள் உறுதி அளித்தனர். ஆனால் எங்களால் இன்னும் ஒருநாள் கூட இங்கு வாழ முடியாது. எங்களை இங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லுங்கள்" என்று கூறியுள்ளார். மேலும் உணவு குறித்து திருப்திகரமான பதிலையே தெரிவித்துள்ளார்.

திக்ரித்தில் செவிலியர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்

இதனிடையே, திக்ரித் நகரில் உள்ள செவிலியர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார்.

மேலும், ஈராக்கில் இருந்து இந்தியா திரும்ப ஆயிரம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றும், இதுவரை 233 பேர் ஈராக்கில் இருந்து இந்தியாவிற்கு புறப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.