Published:Updated:

எங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது!

காத்திருக்கும் அபலைப் பெண்ணின் பெற்றோர்சூரியநெல்லியில் நமது நிருபர்

எங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது!

காத்திருக்கும் அபலைப் பெண்ணின் பெற்றோர்சூரியநெல்லியில் நமது நிருபர்

Published:Updated:
##~##

இந்தியா முழுக்க பிரபலமாகி விட்டது சூரியநெல்லி கிராமம்.

 17 ஆண்டுகளுக்கு முன் நடந்த பாலியல் பலாத்கார விவகாரம் காரணமாக பரபரப்​பாகி இருக்கும் சூரியநெல்லி கிராமத்துக்குச் சென்றோம். இடுக்கி மாவட்டம், மூணாறுக்குச் செல்லும் வழியில் இருக்கிறது சூரியநெல்லி. அந்தக் கிராமத்துக்கு நாம் சென்றபோது, பி.ஜே.குரியனின் உருவப் பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டு இருந்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தாஸ், ''இங்கேதான் போஸ்ட் மாஸ்டராக அந்தப் பெண்ணின் தந்தை வேலை பார்த்தார். டீ எஸ்டேட்டில் அவங்க அம்மா நர்ஸ் வேலை பார்த்தாங்க. ஒருநாள் அதி​காலை ஆறு மணிக்கு பள்ளிக்கூடம் போறப்ப, தனியார் பஸ்ல வேலை பார்த்த ராசி என்ற கண்டக்டர்,

எங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது!

அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று நாசம் பண்ணிட்​டான். அதோட, தர்மராஜ் என்பவரி​டம் வித்துட்டான். மறுநாள் காலை​யில் இருந்து அந்தப் பெண்ணை பல இடங்களில் தேடியும் கிடைக்கல. 40 நாட்கள் கழிச்சுதான், நடந்த கொடூரங்கள் வெளியில தெரிய வந்தது. போராட்டம் நடத்தினோம். ஆனாலும் 17 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னமும் குற்றவாளிகள் தண்டிக்கப்படலை. மிரட்டல்கள் வந்ததால, சூரியநெல்லியில் இருந்த வீட்டை வித்துட்டு கோட்டயம் பக்கம் அவங்க குடும்பத்தோட போயிட்டாங்க'' என்றார்.

அந்தப் பெண்ணின் வீட்டைத் தேடி கோட்ட​யம் அருகில் உள்ள சங்கரனார் சேரிக்குச் சென்றோம். அந்தப் பெண்ணின் தாயாரிடம் பேசியபோது, ''மிரட்டல்கள், சிக்கல்களால் இன்னமும் பய மாகத்தான் இருக்கிறது'' என்று முதலில் பேச மறுத்தார். நீண்ட வற்புறுத்தலுக்குப் பிறகு தயங்கியபடியே பேசினார். ''சூரியநெல்லி கிராமத்​தில் என் மகள் காணாமல் போன அன்று மாலையே போலீஸில் புகார் செய்தோம். அன்றே அவர்கள் வயர்லெஸ் போனில் உஷார்படுத்தி இருந்தால், பெண்ணை மீட்டு இருக்கலாம். போலீஸ் அஜாக்​கிரதையாக நடந்து கொண்டது. என் மகள் உடலாலும் மனதாலும் பாதிக்கப்பட்டாள். சிலர் முன்னாடி போகவிட்டு, பின்னாடி பேசுவார்கள். சுற்றுலா பயணிகளிடம் எங்கள் வீட்டைக் காட்டி 'இதுதான் சூரியநெல்லி கேஸ் வீடு’ என்று காட்டு வார்கள். எங்கள் வீடு சுற்றுலாத்தலம் போல ஆகிவிட்டது. அதனால், ரொம்பவே நொந்து போய் விட்டோம். வேறு வழியில்​லாமல் இங்கு வந்து விட்டோம்.

எங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது!

எனக்கும் என் கணவருக்கும் 'இதய அறுவைச் சிகிச்சை’ நடந்து நோயுடன் போராடுகிறோம். சம்பவத்தில் ஈடுபட்ட 42 குற்றவாளிகளும் ஆட்களை விட்டு பேசிப் பார்த்தனர். மிரட்டல் கடிதம் அனுப்பினர். பணத்தால் வாங்கப் பார்த்தனர். குரியன் பெயரைச் சொல்லி பலர் வந்து பேரம் பேசினர். ஆனால், எல்லோரையும் விரட்டிவிட்டோம். கடவுள் இருப்பதால்தான் நாங்கள் இன்னமும் உயிரு​டன் நட மாடுகிறோம். இல்லை என்றால் எப்போதோ மண்ணுக்குள் போயிருப்போம். எங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. குற்றவாளிகள் நிச்சயம் தண்டனை அனுபவிப்பார்கள்'' என்று கலங்கினார்.

இது இப்படி இருக்க, கேரள மீடியாக்களில் சூரிய​நெல்லி விவகாரம் தொடர்பாக தினந்தோறும் அறிக்கைப் போர் நடக்கிறது. குரியனின் மனைவி சூசன், ''1996-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி இரவு என் கணவர் என்னுடன்தான் இருந்தார். அவர் மீது வீண் குற்றச்சாட்டு கூறுகின்றனர். எங் களுக்கும் பெண் பிள்ளைகள், குடும்பம் இருக்கிறது'' என்கிறார்.

எங்களுக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது!

மூன்றாவது குற்றவாளியான அட்வகேட் தர்மராஜ், ''குரியன் இனி தப்பிக்க முடியாது. அவர் தண்டனையை அனுபவிக்கும் காலம் வந்து விட்டது. உண்மையை நீண்ட நாட்கள் மறைக்க முடியாது'' என்று மைசூரில் இருந்தபடி சேம்சைடு கோல் அடித்து இருக்கிறார். இதனால் கடுப்பாகிப்போன கேரள காங்கிரஸ், தர்மராஜைப் பிடிக்க மூன்று தனிப்படை போலீஸாரை கர்நாடகாவுக்கு அனுப்பி இருக்கிறது.

கேரள அட்வகேட் ஜெனரல் அசாப் அலி, ''குரியனுக்கும் சூரியநெல்லி சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முகாந்திரம் இல்லாமல் வழக்குப் பதிவு செய்ய முடியாது'' என்று சொல்லி இருக்கிறார். எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன், ''குரியனை விசாரிக்கும் வரை போராட்டம் தொடரும்'' என்று அறிக்கை விட்டு இருக்கிறார்.

சூரியநெல்லி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தில்... கோட்டயம் லாட்ஜ், வண்டிப்பெரியார், குமுளி, தேனி, கம்பம் என பல ஊர்களுக்குத் தன்னை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்யப்பட்டதையும், குமுளி பஞ்சாயத்து சுற்றுலா மாளிகையில் வைத்து குரியன் தன்னை பலாத்காரம் செய்ததையும்  சொல்லி இருக்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் வழக்கறிஞர்கள், சினிமா நடிகர், அரசியல்வாதிகள், போலீஸ் எஸ்.ஐ., ரயில்வே ஒப்பந்தக்காரர்கள் என்று அனைவருமே முக்கியப் புள்ளிகள். எதிரில் இருப்பது ஓர் ஏழைக் குடும்பம். நீதியின் வலிமைக்குப் பெரிய சவாலான தருணம் இது!

- சண்.சரவணக்குமார்

படங்கள்: வீ.சிவக்குமார்