Published:Updated:

நல்லா பார்த்துப்பாங்கன்னு அனுப்பிவெச்சேன்... இப்படி பண்ணிட்டாங்களே?

ஐந்து பேரால் சிதைக்கப்பட்ட அப்பாவிச் சிறுமி

##~##

சூரியநெல்லி விவகாரத்தைப் போலவே, கோவை பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரத்​தை அறிந்து, தமிழகம் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது. 

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமிதான் பாதிக்கப்பட்டவர். கடந்த 16-ம் தேதி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்​துக்கு வந்தார் அந்தச் சிறுமி. 'எனது மாமா கோபாலகிருஷ்ணன் உட்பட ஐந்து பேர் எனக்கு மயக்க ஊசி போட்டு, கடந்த ஒரு வருடமாக மாறி மாறி பலாத்காரம் செய்தனர்’ என்று பதற்றத்துடன் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக வழக்குப் பதியப்​பட்டு, விசாரணை நடந்து வருகிறது.

என்ன சொல்கிறார் மாணவி?

தன்னைச் சீரழித்தவர்கள் யார், எப்​போது இந்தச் சம்பவம் நடந்தது என தேதி வாரியாக போலீ​ஸாரிடம் தெரி​வித்து இருக்கிறார் மாணவி. அவர் கை காட்டி​யவர்களில் சிலர் அரசியல் மற்றும் பண பலம் மிக்கவர்கள்.

நல்லா பார்த்துப்பாங்கன்னு அனுப்பிவெச்சேன்... இப்படி பண்ணிட்டாங்களே?

''எனது தாயும் தந்தையும் கடந்த 11 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்கின்றனர். நான் தந்தையின் பராமரிப்பிலும் எனது சகோதரி, தாயின் பராமரிப்பிலும் இருந்​தோம். எனது தந்தை உடல் நலக்​குறைவால் பாதிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக என் அத்தை ஈஸ்வரி வீட்டில் தங்கி பள்ளிக்குச் சென்று வருகிறேன்.  

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ம் தேதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்​பட்டேன். மாமா கோபாலகிருஷ்ணன், என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ராமநாதபுரம் பகுதியில் வசிக்கும் பாலசுந்தரம் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அவர் அரசு மருத்துவமனையில் மருத்துவ உதவி​யாளராகப் பணியாற்றி ஓய்வு​பெற்றவர். எனக்கு மயக்க ஊசி போட்டு மாமா கோபால​கிருஷ்ணனும் பாலசுந்தரமும் என்னை பலாத்காரம் செய் தனர். 'வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்று விடுவோம்’ என மிரட்டினர்.

அடுத்து சில நாட்களில் பாலசுந்தரம் உதவியுடன் கண்ணம்பாளையத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கருப்ப​சாமி, எனக்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்தார். கடந்த ஆண்டு, அக்டோபரில் மாமா கோபாலகிருஷ்ணன் என்னை சினிமா​வுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, சுந்தராபுரத்தில் உள்ள சவுண்ட் சர்வீஸ் நடத்தும் ராகம் கருப்பசாமி என்பவரிடம் அழைத்துச் சென்றார். அவரும் என்னைப் பலாத்காரம் செய்தார். அடுத்​தடுத்து நான்கு பேரும் என்னைப் பலமுறை பலாத்காரம் செய்தனர். இந்த நிலையில், எனது வீட்டின் அருகில் உள்ள பெயின்டர் ஒருவர் என்னைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து​கொள் வதாகவும் கூறி என்னைப் பலாத்​காரம் செய்தார்'' - இவ்வாறு செல்கிறது மாணவியின் வாக்குமூலம்.  

நல்லா பார்த்துப்பாங்கன்னு அனுப்பிவெச்சேன்... இப்படி பண்ணிட்டாங்களே?

உதவிக்கு வந்த மாமா மகன்!

மாணவியால் குற்றம் சாட்டப்பட்ட கோபாலகிருஷ்ணன், பாலசுந்தரம், ரியல் எஸ்டேட் அதிபர் கருப்பசாமி, 'ராகம்’ கருப்பசாமி ஆகியோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். பெயின்டருக்கு 17 வயது. இவர்கள் ஐவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது கோவை போலீஸ்.

''மாணவி தனது மாமாவிடம் கெஞ்சிக் கேட்டும்கூட, சிறிதும் இரக்கம் இல்லாமல் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். தன்னைப் பாலியல் ரீதியில் மாமா துன்புறுத்துவது தொடர்பாக அந்த மாணவி மாமா மகனிடம் கூறி அழ, அவர்தான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து வந்து புகார் கொடுக்க வைத்தார்'' என்கின்றனர் போலீஸார்.

''நான் கும்பிடுற சாமி சும்மா விடாது!''

கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து, காப்பகம் ஒன்றில் போலீஸ் பாது​காப்புடன் சிறுமி தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியைச் சந்திக்க அவரது தாய்கூட அனுமதிக்​கப்படவில்லை. இதுகுறித்து, போலீ​ஸாரிடம் கேட்டபோது, ''மாஜிஸ்திரேட் ரகசிய வாக்குமூலம் பெறுவதற்கு முன், சிறுமியின் மனநிலையில் யாராவது குழப்பம் செய்து விடுவார்கள் என்பதால், யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை''  என்றனர்.

நல்லா பார்த்துப்பாங்கன்னு அனுப்பிவெச்சேன்... இப்படி பண்ணிட்டாங்களே?

நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் மாணவியின் தந்தை தண்டபாணியிடம் பேசினோம். ''சின்ன வயசுல இருந்தே அங்கேதான் இருக்கா. நல்லா பாத்துக்குவாங்கனுதானே அனுப்பி​வச்சேன். ஆனா, என் மகளை இப்படி ஆக்கிட்டாங்களே? பாழாப்போன பயலுக எம் மகளை நாசமாக் கிட்டாங்க. நான் கும்புடுற சாமி அவங்களைச் சும்மா விடாது'' எனக் கதறி அழுதார்.

சிறுமியின் தாய் லட்சுமியிடம் பேசினோம். ''இந்தப் பிரச்னையைப் பேசித் தீர்க்கும் வேலை​களில் சிலர் ஈடுபட்டு இருக்காங்க. அதை அனுமதிக்கக் கூடாது. இதன் பின்னணியில் வேறு சிலரும் இருக்கலாம். அதனால், முழுமையா விசாரிச்சு, தவறு செஞ்ச அனைவரையும் தண்டிக்கணும். வழக்கு விசாரணைக்குப் பின்னர் மகளை என்னிடம் ஒப்படைக்கணும்'' என்றார்.

''நாங்களே தண்டனை தருவோம்!''

இந்தச் சம்பவத்தால் கொதித்தெழுந்த கோவை மக்கள், தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்​களை நடத்தி வருகின்றனர். பலாத்கார வழக்கில் சிக்கி கைதான ரியல் எஸ்டேட் கருப்பசாமி, சவுண்ட் சர்வீஸ் ராகம் கருப்பசாமி ஆகியோரது வீடுகள் மீது கற்களை வீசி, தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, குற்றம் சாட்டப் பட்டவர்களின் வீட்டுக்குப் போலீஸ் பாது​காப்பு போடப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் சிலரிடம் பேசினோம். ''இவனுங்களுக்கு எல்லாம் மக்கள் முன்னி​லையில் தண்டனை தரணும். தன் மகள் வயசுல, பேத்தி வயசுல இருக்கற பொண்ணை இப்படிச் செய்ய எப்படித்தான் மனசு வந்துச்சோ? இவங்களுக்குத் தர்ற தண்டனை, இனி யாருக்கும் இதுமாதிரி தப்பு செய்யத் தோணக் கூடாது. பண பலத்தால் இவங்க வழக்கில் இருந்து வெளியே வந்தா, நாங்களே தண்டனை தருவோம்'' என்றனர் ஆவேசமாக.

பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, கைதான​வர்களின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியேறினர். சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்க முயன்றும் முடியவில்லை.

நல்லா பார்த்துப்பாங்கன்னு அனுப்பிவெச்சேன்... இப்படி பண்ணிட்டாங்களே?

பேரம் நடத்தும் அரசியல் 'தலை’கள்!

இந்த வழக்கில் கைதானவர்களில் மூவர் அரசியல் பின்புலம் உள்ளவர்கள். மாணவியின் மாமா கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க. ஆதரவாளர். ரியல் எஸ்டேட் கருப்பசாமி அ.தி.மு.க. பிரமுகர். ராகம் சவுண்ட் சர்வீஸ் கருப்பசாமி, தி.மு.க-வைச் சேர்ந்தவர். பணம் மற்றும் அரசியல் பலம்மிக்க இவர்கள், வழக்கில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எவ்வளவு பணத்தையும் செல​வழிக்கத் தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதை அறிந்துகொண்ட சில அரசியல் தலைகள் களத்தில் குதித்துள்ளன.

''டாக்டர்கள், போலீஸார் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பணம் கொடுத்து செட்டில் செய்யப் பேரம் நடக்கிறது. இதற்காக வாக்குமூலங்களை மாற்றும் வேலைகளும் நடந்துவருவதாகக் கூறப்படுகிறது. சிறுமிக்கு நேர்ந்த கொடுமையை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் செல்வாக்கில் தப்பிக்கவிடக் கூடாது. அவ்வாறு நடந்தால் எங்களின் போராட்டம் வேறு வடிவில் இருக்கும்'' என்று கொதிக்​கிறார்கள் மக்கள்.

விரைவில் கிடைக்குமா நீதி?

இந்த வழக்கில் கைதான ஐந்து பேருக்கு ஆதரவாக, கோர்ட்டில் ஆஜராகப்போவது இல்லை என கோவை பெண் வக்கீல்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. கைதான ஐவரில் ஒருவர் சிறார் பருவத்தில் உள்ளவர் என்பதால், அவர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால், மற்ற நால்வருடன் அவரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்த முடியாது. அதேபோல், வழக்கில் அரசியல் மற்றும் பணபலம் உள்ளவர்கள் குற்றம்சாட்டப்பட்டு இருப்பதால், வழக்கு விரைந்து முடியுமா என்பதும் கேள்விக்குறி. இதை எல்லாம் முறியடித்து இந்த வழக்கை வேகமாக விசாரித்து விரைவில் நீதி வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்!

- ச.ஜெ.ரவி

படங்கள்: தி.விஜய்