புலித்தடம் தேடி...
##~##

துரோகத்தால் பறிக்கப்பட்ட உயிர்தான் பாலச்சந்திரனதும். பாலகனைப் பாதகர்கள் கொன்று தீர்த்த படங்களைப் பார்த்து உலகம் இன்று வெம்பித் துடிக்கிறது. எல்லாப் பிள்ளைகளையும் போலவே தன் பிள்ளையையும் தேசத்துக்காகக் கொடுத்துவிட்டார் பிரபாகரன். நான் ஈழத்தில் இருந்தபோது பாலச்சந்திரன் பற்றிக் கேள்விப்பட்டதை இன்று படங்களாகப் பார்க்கும்போது இதயம் ரணமாகிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வவுனியாவை விடுத்து திரிகோண​மலையை அடையும்போது, மாலை 6.30. அடுத்த நாள் பிரபாகரன் பிறந்த நாள். திரிகோணமலையின் உட்புற வீதிகள் ராணுவப் பரபரப்போடு இருந்தது. இரவு ஓய்வு நண்பரின் வீட்டில் என்பதால், ஒரு வாடகை உந்தியில் கிளம்பினோம். வீட்டை அடை​வதற்கு சிறிது தூரத்துக்கு முன், ராணுவ சோதனைச் சாவடியில் சோதனை நடந்தது. நவம்பரின் இறுதி வாரம் என்பதால், தமிழரின் வீரம் எங்காவது பதுங்கி​யுள்ளதா என்று நோட்டமிட சைக்கிளில் வந்த ராணு​வத்தினர் வீட்டுக்குள் டார்ச் அடித்துப் பார்த்தபடியே சென்றனர். நாங்கள் வீட்டை அடைந்தோம்.

புலித்தடம் தேடி...

கருணாவுக்கு இணக்கமான ஓர் ஆளை நான் சந்தித்த வேளையில் அவர், ''பிரபாகரன் உடலைக் கண்டறிய கருணாவைத்தான் அரசு அழைத்து வந்தது. அப்போது அவரது மகன் பாலச்சந்திரனைக் கண்டதாக கருணா எங்கள் சிலரிடம் கூறினார். 'யாரோடு வந்தாய்?’ என்று பாலச்சந்திரனிடம் கருணா அப்போது கேட்டிருக்கிறார். 'அப்பாவோடுதான் வந்தேன்’ என்றானாம் அந்தச் சிறுவன். 'அப்பா எங்கே?’ என்று கருணா கேட்டிருக்கிறார். 'அப்பா எங்கேனு தெரியல’ என்று பாலச்சந்திரன் கூறியதாகக் கருணா சொன்னார். தன்னுடைய தந்தைக்கு என்ன ஆனது என்று தெரியாத, அறியாத, புரியாதவனாகத்தான் பாலச்சந்திரன் இருந்துள்ளான்’ என்று அவர் சொன்​னார்.

சேனல் 4 இப்போது வெளியிட்ட புகைப்படத்தைப் பார்க்கும்போது, பாலச்சந்திரன் உட்கார வைக்கப்பட்டு இருக்கும் இடத்துக்கு வந்து கருணா பார்த்திருக்கலாம். அதன்பிறகுதான், அந்தப் பாலகனை சிங்கள கயவர்கள் சுட்டுக் கொன்றிருக்கலாம் என்றே முடிவுக்கு வர​வேண்டி உள்ளது. தமிழன்... அதுவும் பிர பாகரனின் ரத்தம் என்றால், பத்து வயதுச் சிறுவன்கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று இனவாதம் முடிவெடுத்ததை இப்போதுதான் உலகம் உணர ஆரம்பித்துள்ளது. ஆனால், கருணாக்களுக்கு என்ன தண்டனை?

புலித்தடம் தேடி...

புலிகள் இயக்கத்தில் இருந்த வேளையில் கருணா பேசியது... ''போர் என்பதும் பேச்சுவார்த்தை என்பதும் அவர்களுக்குப் பழக்கப்பட்ட விடயம். பல தடவை நாங்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம். ஒவ்வொரு தடவையும் சிங்கள அரசு எங்களை ஏமாற்ற முற்படும்போது, நாங்கள் ஒவ்வொரு படி வளர்ந்து இருக்கிறோம். 'இலங்கை என்ற தீவுக்குள் தமிழர்களின் சுயநிர்ணயம், தேசியம், எங்களது தாயக பூமி என்ற அடிப்படையில் தீர்வினைக் கேட்டுள்ளோம். அந்தத் தீர்வு தர வேண்டும். அல்லாவிட்டால், நாங்கள் பிரிந்து செல்வோம்’ என்ற விடயத்தை தலைவர் கூறியுள்ளார். ஆகவே அதைத் தருவதா, இல்லையா என்பது சிங்கள அரசாங்கத்தைப் பொறுத்தது. அவர்கள் தரா​விட்டால், நாங்கள் எடுப்போம். அதில் மாற்றம் இல்லை.''

அதே கருணா 2009 போருக்குப் பின்னர் பேசிய வார்த்தைகள் இவை... ''அமெரிக்கப் படைகளும் பிரிட்டிஷ் படைகளும் ஈராக்குள் நுழைந்தபோது மனிதாபிமான நடவடிக்கை என்றனர். அந்த மக்களை மீட்கப் போகிறோம் என்றனர். இதேபோல்தான் ஆப்கானிஸ்தானுக்குள் போகும்​போதும் கூறினர். ஆனால், அதைவிட பெரிய மனிதாபிமான நடவடிக்கைதான் எமது பிரதேசத்​தில் நடக்கிறது. வன்னியிலே பிரபாகரனின் கொடிய பிடிக்குள் சிக்கி இருந்த தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமானப் பணியைத்தான் ராணுவம் (சிங்கள ராணுவம்) செய்து வருகிறது. இன்று வட கிழக்கில் வாழ்கிற மக்கள், எமது ஜனாதிபதி (மகிந்த ராஜபக்ஷே) கரங்களைப் பலப்படுத்தத் தயாராக இருக்கிறார்கள்.''

கருணா போன்றவர்களின் துரோகச் சுவடுகள்​தான் லட்சக்கணக்கான தமிழர்களைக் காவு வாங்கியது என்பதை நான் சந்தித்த பலரும் சொன்னார்கள். 'இந்தத் துரோகங்கள் இன்று வேண் டு​மானால் மறைக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், காலமும் வரலாறும் மறைக்காது; மன்னிக்​காது’ என்று, ஈழத் தமிழர்கள் பலர் கூறிய 'துரோகம்’ என்ற வார்த்தைதான் என் செவி ஓட்டங்களில் சத்தமாய் ஒலித்துக்கொண்டுள்ளது.

புலித்தடம் தேடி...

மறுநாள்... பிரபாகரன் பிறந்த நாளின் பகல் பொழுது. பகல் வேளை என்பதால் ராணு​வத்​தின் நடமாட்டம் சற்று தாழ்ந்திருந்தது. கன்னியா வெந்நீர் ஊற்றை நோக்கிச் சென்றோம். இது, இந்துக்களின் பிரசித்திபெற்ற ஸ்தலமாக ராவணன் வரலாறு கொண்டதாக இருந்தது. இங்கு இயற்கையாகவே ஏழு வெப்ப நிலைகளில் ஏழு வெந்நீர் ஊற்றுகள் உள்ளன. ஆனால், அதுவும் இப்போது புத்த வரலாறுகள் கொண்டதாகி விட்டது. அங்கு செல்லும் வழியில், பெயர்ப் பலகையில் தமிழில் இருந்த தெருப் பெயர்களை அழித்திருப்பதைக் கண்டேன்.

கன்னியா வெந்நீர் ஊற்றை அடைந்தேன். அது, பௌத்த ஸ்தலமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. வரலாற்றுபடி, 'பத்துத் தலை படைத்த ராவணன் தன் தாயாருக்கு இறுதிக் காரியங்கள் செய்வதற்காக தன் உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்திய​தாகவும், அந்த இடங்களில் இருந்து வெந்நீர் ஊற்று உருவாகியதாகவும்’ கூறப்படுகிறது. அந்த வெந்நீர் ஊற்றுகள் தமிழர்களின் மனங்களைப்போல ஒவ்வொரு கொதிநிலையில் கொதித்துக்கொண்டு இருந்தன. இறந்தோரின் 31-ம் நாள் காரியங்களை இந்துக்கள் இங்கு செய்யும் வழக்கம் உள்ளது என்று அருகில் இருந்த நண்பர் கூறினார்.

சிவன் கோயில் அருகே கழிவறை இருந்தது. சதுரமாக இருந்த விநாயகர் கோயிலின் அடித்​தளம் இடிக்கப்பட்டு, இடிக்கப்பட்ட இடம் வட்ட வடிவில் புத்தவிகார் வடிவம்போல மாற்றப்பட்டு இருந்தது. புத்த ஆக்கிரமிப்புக்கு மேலாக, தமிழர்கள் சார்ந்ததை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே தூக்கலாக உள்ளது.

கன்னியா வெந்நீர் ஊற்றுத் தலத்தை எப்படி எல்லாம் சிங்களர்கள் ஆக்கிர​மித்தனர் என்பதை, அதைத் தமிழர் வசம் மீட்பதற்காக நீதிமன்றத்தில் வாதாடியவர் கூறினார். 'சமாதானக் காலத்தில்தான் சிங்களர்கள் கன்னியா ஊற்றுக்கு வரத் தொடங்கினர். அவ்விடத்தை புத்த வரலாறு கொண்டதாக அவர்கள் எண்ணு​கின்றனர். அப்படி வந்த ஒரு புத்த பிக்கு, அங்கு கோயில் கட்டுமான வேலைகள் நடந்ததைக் கண்டுவிட்டு, 'புத்த புனித ஸ்தலத்தில் ஆக்கிரமிப்பு வேலைகளும், அதை இடிக்கும் வேலைகளும் நடக்கின்றன’ என்று அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் செய்தார். அங்கிருந்த பூசாரி அம்மாதான் இந்த வேலைகளுக்கு எல்லாம் காரணம் என்று போலீஸ் எண்ணியது. அந்த அம்மாவின் முன்னோர்கள் இதே கோயிலுக்கு சொந்தமானவர்கள்தான் என்பது இங்கு சொல்ல வேண்டிய ஒன்று. ஆனால், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கு நீதிமன்றத்துக்கு வந்துபோது சரியான வாதத்தை சிங்களத் தரப்பால் வைக்க முடியாத காரணத்தால், வழக்கு  தள்ளுபடியானது. ஆனால், இவ்வளவு காலம் கடந்து சிங்கள அரசின் பிடியில் அதிகாரம் சென்றதால், எப்படியோ அதுவும் இன்று புத்த ஸ்தலமாக மாறிவிட்டது’ என்றார்.

புலித்தடம் தேடி...

அதேபோல் கன்னியா ஊற்று அருகே 'வில்கம் விகார்’ என்ற புத்த ஸ்தலம். இது சோழர் காலத்தில் தமிழ் பௌத்தர்களுக்காகக் கட்டப்பட்டது என்றும், இங்கு சிவன் கோயில் இருந்தது என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதுவும் சிங்களர்களுக்கு உரியதாகி விட்டது.

அடுத்து சம்பூர் அனல் மின் நிலையத்துக்காக நிலம் அபகரிக்கப்பட்டு துரத்தப்பட்ட தமிழ் மக்களின் முகாம்களுக்குச் சென்றோம். வெளி யாட்கள் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடை​யாது. இடம்பெயர்ந்தோர் முகாம்களே இலங் கையில் கிடையாது என்று கூறிவரும் இலங்கை அரசு, இந்த முகாம்களுக்கு என்ன பெயர் சொல்லப்போகிறது? தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களையும் சிங்கள முகாம்​களைப்போலே வைத்துள்ள இந்திய அரசு, இலங்கையில் நேரில் ஆய்வுசெய்துவிட்டு முகாம்களே இல்லை என்று சொல்லிய பொய்க்கு என்ன பதில் சொல்லப் போகிறது? எவ்வளவு அப்பட்டமாக இன்னொரு நாட்டின் மக்களை தங்களின் தேவைக்கு காந்திய தேசம் அடிமைப்​படுத்தி வைத்திருக்கிறது!

இலங்கையின் திரிகோணமலை மாவட்​டத்தைச் சேர்ந்த கடற்கரைச் சேனை, சம்பூர்கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித் தீவு ஆகிய கிராமங்களில் இருந்து உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக 'மூதூர் இடம்பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கம்’ சில கோரிக்கைகளை இந்திய பிரதமருக்கு 12.06.2008-ல் அனுப்பியது. அதில்,

'1. அனல் மின் நிலையத்துக்கான இலங்கை - இந்தியக் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில், எமது கிராமங்களை உள்ளடக்கியதாக உள்ள ஒதுக்கீட்டை, மீள் பரி சீலனைசெய்து ரத்து செய்யுங்கள்.

2. அதற்குப் பதிலாக கிராமங்கள், குடி யிருப்புகளைப் பாதிக்காத வகையில் நில ஒதுக்கீட்டை மேற்கொள்ள உதவுங்கள்.

3. மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற பிரதேசங்களில் எம்மைக் குடியேற்றும் முயற்சியைத் தடுத்து, சொந்தக் கிரா மங்களிலேயே மீள் குடியேற்றம் செய் யுங்கள்.

காந்தி தேசத்தின் கருணையை தங்கள் மூலமாக எதிர்பார்க்கிறோம், என்று அந்தக் கோரிக்கைக் கடிதம் முடிவுறு​கிறது.

அதேசங்கம் அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில், 'இப்படியான நில ஆக்கிரமிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமார் 8,000 மக்களின் வாழ்விடங்கள் பறி போகும். தனித்தமிழ்ப் பிரதேசமான மூதூர் கிழக்கு படிப்படியாக அபகரிக்கப்பட்டு, இங்கு வாழும் 18 ஆயிரம் மக்களும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்படுவர். எம் தமிழ் மன்னன் ராவணனின் நினைவுகளோடு நிலைத்திருக்கும் திரிகோணமலையின் இதய பூமி, சோழ மன்னர்களின் காலடிபட்ட சொர்க்க பூமி, அவர் ஆட்சிக் காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்ற வரலாற்றுப் புகழ் மிக்க இந்தப் பிரதேசம் பேரினவாதப் பிடியில் சிக்கி காணாமல் போய்விடும். இதைத் தடுத்து நிறுத்தி இந்தப் பேராபத்தில் இருந்து இந்தப் பிரதேசத்தைக் காப்பதற்கும், நாம் மீண்டும் குடியேறி இயல்பு வாழ்வை மீட்டுக்கொள்வதற்கும் தங்களின் தயவை எதிர்பார்க்கின்றோம். இந்திய அரசுடன் தாங்கள் கொண்டுள்ள உறவையும், காங்கிரஸ் கட்சிக்குள் தங்களுக்குள்ள தனித்துவமான செல்வாக்கையும் பயன்படுத்தி, இந்த இக்கட்டான நிலையில் இருந்து எம்மை மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். நம்பிக்கை​யுடன் காத்திருக்கின்றோம்’ என்று அந்தக் கடிதம் நிறைவடைகிறது.

அந்தச் சங்கம் திரிகோணமலையில் இப்படியான சிங்கள ஆக்கிரமிப்புகள் நடந்து விடும் என்று எச்சரித்த ஆக்கிரமிப்புகள் இன்று நடந்தே விட்டன. தமிழர்களின் இதய பூமி நாசகதி ஆக்கப்பட்டுள்ளது.அனல் மின்நிலைய நில ஆக்கிரமிப்புக்காகத்தான் 2006-ல் புலிகள் மீதான தாக்குதல் என்ற பெயரில் சம்பூர் மக்கள் மீது செல்குண்டு தாக்குதல் நடத்தப்​பட்டு உயர் பாதுகாப்பு வளையமாக தமிழர் கிராமங்கள் மாற்றப்பட்டது. அந்த இடத்தில் நிற்கிறேன்!

ஊடறுத்துப் பாயும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism