Published:Updated:

''காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள்..!''

''காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள்..!''

##~##

காந்திய மக்கள் இயக்கம் நடத்திவரும் தமிழருவி மணியன், இப்போது சாதி மத நல்லிணக்க மாநாடுகளை அதிகமாக நடத்தி வருகிறார். சாதியை மைய​மாகக்​​கொண்டு நிறைய அமைப்புகளை ஒருங்கிணைத்து வரும் டாக்டர் ராமதாஸ், காதல் திருமணங்களுக்கு எதிராகவும் கொடி உயர்த்தி வருகிறார். இதைக் கண்டிக்கும் தமிழருவி மணி யனின் பேச்சில், காதலுக்கு ஆதரவான குரல் அதிகம் ஒலிக்கிறது! 

பிப்ரவரி 17-ம் தேதி, திருச்சியில் சாதி மத நல்லிணக்க மாநாடும், 'ரௌத்ரம் பழகு’ நூல் வெளியீட்டு விழாவும் நடந்தன. ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நூலை வெளியிட, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி அதைப் பெற்றுக்கொண்டார்.

'சாதிகள் இல்லையடா தமிழா!’ எனும் தலைப்பில் பேசினார் தமிழருவி மணியன். ''பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் தமிழ்ச் சாதி என்பதை மறந்து வன்னிய சாதியைப்பற்றி மட்டும் யோசித்து செயல்படுவது அவரது வீழ்ச்சி​யின் அடையாளம். சாதியை வைத்து அரசியல் நடத்தி வெற்றி பெறலாம் என நினைத்​தால், அது தவறு. 'வன்முறையாலும் பலாத்​காரத்தாலும் எதையும் சாதிக்க முடியும் என் றால், அது தோல்வியில்தான் முடியும்’ என பெரியார் சொல்லி இருக்கிறார். ராமதாஸ் நடத்தும் அரசியல், தமிழகத்தை சுடுகாடாக ஆக்கி விடும். இதுவரை தமிழகத்தில் நிலவி வந்த சமூக நல்லிணக்கத்தை அழித்துவிடும். சாதி உணர்வை வளர்க்கும் எந்தத் தலைவர்களின் பின்னாலும் செல்லாதீர்கள்.

''காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள்..!''

சாதிகள் சாகாத வரை தமிழ்ச்சாதி மேன்மையுறாது. அதனால், முதலில் சாதியை சாகடிக்க வேண்டும். அதற்காக ஆயுதம் தூக்க வேண்டாம். காதல் கலப்புத் திருமணத்தை ஆதரியுங்கள். காதல், ஆன்மாவின் ராகம். காதலை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியுங்கள். உடற்கூறு மருத்துவரான ராமதாஸ் எப்போது காதலை ஆய்வுசெய்யும் மருத் துவராக மாறினார் எனத் தெரியவில்லை. நாடகக் காதல், அந்தக் காதல், இந்தக் காதல் என்று ஆய்வறிக்கை வாசிக்கிறார். நான் ஊருக்கு மட்டும் உபதேசிப்பவன் அல்ல. என் வீட்டில் எனது மகன் சாதி கலப்புத் திருமணம் செய்தவர். என் மகள் அதற்கும் மேல் ஒரு படி மேலே போய் மதக் கலப்புத் திருமணம் செய்தவர். இருவரும் காதலித்து திருமணம்செய்ய அங்கீகாரம் வழங்கியவன் நான். உங்கள் பிள்ளைகளையும் காதலிக்க அனுமதித்து, அவர்கள் சாதி கலப்புத் திருமணம் செய்ய அனுமதியுங்கள்'' என்று, சாதி ஒழிப்புக்கு வழி சொன்னவர், பிறகு அரசியல் சப்ஜெக்ட்டுக்கு வந்தார்.

''நமக்கு இரண்டு கடமைகள் இருக்கின்றன. வரப்போகும் எம்.பி. தேர்தலில் வைகோ எங்கே போட்டியிட்டாலும் அவரது வெற்றிக்காக நாம் உழைக்க வேண்டும். முதலில் அவரை மீண்டும் எம்.பி-யாக்கி நாடாளு​மன்றத்துக்கு அனுப்புவோம். ராஜ்யசபா எம்.பி- யாக இருந்த அண்ணாவைப் பிறகு, தமிழக முதல் வராக்கியதுபோல், 2016-ம் ஆண்டு தமிழக சட்ட மன்றத்தில் வைகோவை முதல்வராக்கி அழகு பார்ப்போம். வைகோ, அனைத்துத் தமிழக மக்களின் நலனை மனதில்வைத்து ஆட்சி செய்யும் முதல்வராகத்தான் இருப்பாரேயழிய, தனது கட்சியினர் நலனுக்காக அதிகாரத்தைப் பயன்படுத்துபவராக இருக்க மாட்டார்'' என்று முழங்கினார்.

கடைசியாகப் பேசிய வைகோ, 'ரௌத்ரம் பழகு’ எனும் தலைப்பில் கர்ஜித்தார். ''நிழல் கிடைக்கும் என்று நம்பி என் பயணத்தைத் தொடங்கவில்லை. என் தகுதிக்கு மீறிய பதவியில் என்னை அமரவைக்க வேண்டும் என நீங்கள் பேசுவது எனக்கு உழைப்பதற்கு உற்சாகம் அளிப்பதாகத்தான் எடுத்துக் கொள்வேன். நான் சாகும் வரை தமிழ் மக்களின் நலனுக்காக பாடுபடும் நபராக இருப்பேன் என்ற உறுதியை வழங்குகிறேன். தமிழக மக்கள் என்னை எங்கே வைத்தாலும், நான் அவர்களுக்காக உழைத்துக்கொண்டே இருப்பேன். இலங்கைத் தமிழர்களின் இன்னல்களைக் கலைவதற்காகவும், பல துயரங்களுக்கு மூல காரணமான மதுவை ஒழிப்பதற்காகவும் ரௌத்ரம் பழகுவோம்'' என்று முடித்தார் வைகோ.

சாதிக்கு எதிராகவும் மதுவுக்கு எதிராகவும் கருத்துப் பிரசாரத்தை அனைத்து ஊர்களிலும் நடத்தத் தொடங்கி இருக்கிறது காந்திய மக்கள் இயக்கம்!

- அ.சாதிக் பாட்ஷா, பி.விவேக் ஆனந்த்

படங்கள்: ப்ரீத்தி கார்த்திக்