Published:Updated:

நேற்று வினோதினி... இன்று வித்யா

''இப்பவே என்னோட வரலைன்னா, முகத்துல ஆசிட் அடிச்சிருவேன்..''

##~##

சிட் வீசப்பட்டதால் இறந்த வினோதினிக்​காக மக்கள் சிந்திய கண்ணீரின் ஈரம்கூட காயவில்லை. அதற்குள், ஆசிட் வீச்சுக்கு ஆளான வித்யாயைப் பற்றிய செய்திகள், நம் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. 

சென்னையைச் சேர்ந்த வித்யா, சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். தாயார் சரஸ்வதி, சகோதரர் விஜய்யுடன் ஆதம்பாக்கத்தில் வசித்து வந்தார். 12-ம் வகுப்பு படித்த வித்யா, குடும்பநிலை காரணமாக பிரவுசிங் சென்டரில் வேலை செய்தார். ஐ.டி. நிறு வனத்தில் வேலை பார்க்கும் விஜயபாஸ்கர், அங்கு அடிக்கடி வருவார். வித்யாவைக் காதலித்த அவர், உடனே திருமணம் செய்ய வற்புறுத்தி இருக்கிறார். ''எங்கள் வீட்டுக்கு வந்து முறைப்படி பெண் கேளுங்கள்'' என்று கூறி இருக்கிறார் வித்யா. இந்த நிலையில்தான் ஆசிட் வீச்சு.

இடையில் என்ன நடந்தது?

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வித்யா சேர்க்கப்பட்டு இருக்க... நடந்ததை விவரித்தார் அவரது தாய் சரஸ்வதி. ''திடீர்னு ஒருநாள் தொலைபேசியில் பேசிய ஒருத்தர், 'என் பையனும் உங்கப் பொண்ணும் காதலிக்கிறாங்க. அவங்களை நாம சேர்த்து வெச்சுடலாம். என் பையனுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுங்க’னு கேட்டார். அதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சி. வித்யாவிடம் விசாரிச்சப்ப அவ, நடந்த விஷயங்களைச் சொன்னா.  

நேற்று வினோதினி... இன்று வித்யா

அந்தப் பையனோட வீட்டில் இருந்து தொடர்ந்து இதுபத்தி பேசிக்கிட்டே இருந்​தாங்க. அதனால், 'ஒரு

நேற்று வினோதினி... இன்று வித்யா

வருஷம் கழிச்சுத் கல்யாணத்தை வச்சுக்கலாம்’னு சொன்னேன். பையன் அவசரப்படுவதாகச் சொன்ன​ அவங்க, 'கல்யாணத்தை வர்ற ஆகஸ்ட் மாசமே வச்சுக்கலாம்’னு சொன்னாங்க. அதுக்​கும் நாங்க சம்மதிச்சோம். ஆனா, இதை அந்தப் பையன் நம்பலை. என் மகளைச் சந்திச்சு, 'நாம இப்பவே ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்​கலாம். அதுக்குப் பிறகு வீட்டில் நிச்சயம் செய்த தேதியில், திரும்பவும் கல்யாணம் பண்ணிக்​கலாம். இல்லைன்னா, உன் வீட்டில் வேறு யாருக்​காவது கல்யாணம் செஞ்சு கொடுத்துடுவாங்க’னு சொல்லிருக்கான். வித்யா எவ்வளவோ எடுத்துச்சொல்லியும் அவன் அதை நம்பலை.

'நீ என்னை ஏமாத்தப் பார்க்கிற. இப்பவே என்னோட வரலைன்னா, உன் முகத்துல ஆசிட் அடிச்​சிருவேன். இல்லை, ஆட்டோ ஓட்டுற என் ஃப்ரண்ட்ஸ்கிட்ட சொல்லி, ஆட்டோவ ஏத்தி உன்னைக் கொன்னுடுவேன்’னு மிரட்டி இருக்கான். இதைக் கேட்ட என் பொண்ணு, பிரவுசிங் சென்டரிலேயே உட்கார்ந்து அழுது இருக்கா. உடனே, வேகமாக வெளியே போன வன், மதியம் திரும்பி வந்திருக்கான். பிரவுசிங் சென்டர் ஷட்டரை இழுத்து மூடிட்டு, கையில் வெச்சிருந்த ஆசிட்டை என் பொண்ணு மேல வீசி இருக்கான். கதவு மூடி இருந்ததால், என் மகளால் தப்பிக்க முடியலை. கையால் முகத்தை மூடிக்கிட்டு சட்டுன்னு திரும்பி இருக்கா. இதனால், அவன் வீசிய ஆசிட் முழுக்க, அவ முதுகில் பட்டிருக்கு. வேதனை தாங்க முடியாம அவ அலறியதைக் கேட்டு, அக்கம் பக்கம் உள்ளவங்க ஓடி வந்திருக்காங்க. நடந்த கொடுமையைப் பார்த்துட்டு அந்தப் பையனைப் பிடிச்சு போலீஸில் ஒப்படைச்சு இருக்காங்க. இப்ப என் பொண்ணு உயிருக்குப் போராடுறா...'' என்று கண்ணீர் வடித்தார்.  

நேற்று வினோதினி... இன்று வித்யா

வித்யாவின் சகோதரர் விஜய், ''அவன் என் தங்கையை​விட வயசுல ரொம்பப் பெரியவன். அதனால், ஆரம்பத்துல அவனை என் தங்கை காதலிக்கலை. வற்புறுத்தல் காரணமாகவே காதலிச்சு இருக்கா. வித்யா மீது வீசியது, நகை உருக்கப் பயன் படுத்தும் ஆசிட். ரொம்பவும் வீரியம் உள்ளது. அதனால், வித்யாவின் முதுகுத் தோல் வெந்துபோய் கழன்டுடுச்சு. எலும்புகள் வெளியில் தெரியுது. நுரை யீரலில் கிருமித் தொற்றும் ஏற்பட்டுடுச்சு. எங்களால் எந்த உத்தரவாதமும் கொடுக்க முடியாதுனு டாக்டருங்க கைவிரிக்கிறாங்க. என் தங்கை உயிரோட வருவாளாங்கிற நம்பிக்கை எங்களுக்குப் போயிடுச்சு. எந்தத் தவறுமே செய்யாத என் தங்கை யாரோ ஒருவனின் அவசரத்துக்கும் ஆத்திரத்துக்கும் இப்படி சித்ரவதை அனுபவிக்கணுமா? எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது. அந்தப் பையனுக்குக் கொடுக்கப்போகும் தண்டனை, இதுபோன்ற எண்ணம் உள்ள எல்லோருக்கும் பாடமாக அமையணும்'' என்றார்.  

விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவரது பெற்றோர் வீட்டைப் பூட்டிவிட்டு எங்கோ சென்று விட்டனர். ''வித்யா என்கிட்ட சில நாட்களா சரியாகப் பேசுறது இல்லை. அதனால்தான் அவ மேல ஆசிட் வீசிட்டு நானும் தற்கொலை செஞ்சுக்கத் திட்டம் போட்டேன். அதுக்குள்ள பொது​மக்கள் சூழ்ந்து என்னைப் பிடிச்சுட்​டாங்க'' என்று போலீஸ் விசாரணையில் சொல்லி இருக்கிறார் விஜயபாஸ்கர்.

காவல் துறையில் விசாரித்தபோது, ''விஜயபாஸ்கர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவுசெய்யப்பட்டு இருக்கிறது. ஜாமினில் வர முடியாத பிரிவுகளில் கைது செய்து இருக்கிறோம்'' என்றனர்.

பொன்னை உருக்கும் அமிலங்கள் பெண்ணை உருக்கும் நிலை என்று மாறுமோ?

- ஜோ.ஸ்டாலின், படம்: ஆ.முத்துக்குமார்