Published:Updated:

மைக்கில் வந்த தகவல், சிக்னல் கொடுத்த மாணவர்! - நகைக் கொள்ளையர்களை வளைத்த மதுரை போலீஸ்

மைக்கில் வந்த தகவலைத் தொடர்ந்து திருடர்களைக் காவல்துறையினர் விரட்டிச்சென்று பிடித்துள்ளனர். அவர்களிடமிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

திருடர்களைப் பிடித்த போலீஸ்
திருடர்களைப் பிடித்த போலீஸ்

திருமங்கலம், வாடிப்பட்டி, சோழவந்தான் ஆகிய மூன்று இடங்களில் அடுத்தடுத்த நகைப் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இதற்கக் காரணமானவர்களைக் கண்டறிந்து காவல் உதவி ஆய்வாளர் அண்ணாதுரை தலைமையில் ரோந்துக்காவலர்கள் மூவேந்திரன், காளிராஜன் என ஆகியோர் மடக்கிப்பிடித்தனர். இதில் காவலர் காளிராஜனுக்குக் கையில் பலத்த காயம் ஏற்பட்டது.

காயம்பட்ட போலீஸ்காரர்
காயம்பட்ட போலீஸ்காரர்

சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் அண்ணாதுரையிடம் பேசினோம். ``நேற்று மாலை 4.45 மணியளவில் மைக்கில் தகவல் வந்தது. சோதனைச் சாவடியில் இருந்த ரோந்துக்காவலர்கள் இருவரையும் குமாரம் விலக்குக்கு வரச்சொன்னேன். ரோந்துக்குப் பயன்படுத்தும் டூவீலர்களில் நாங்கள் தயாராக இருந்தோம். அந்தப் பக்கம் டூவீலரில் வந்த கல்லூரி மாணவனை நிறுத்தி, அவனிடம் எங்கள் செல்போன் நம்பரைக் கொடுத்தோம். `வெள்ளை அப்பாச்சி வண்டியில இரண்டுபேர் வந்தா தகவல்சொல்லு'ன்னு விவரத்தைச் சொன்னோம். சற்று நேரத்தில், 'பிள்ளையார்நத்தம் தாண்டி அவங்க வர்றாங்க சார்' எனத் தகவல் கொடுத்தார். நான் மெயின்ரோட்டில நின்று கொண்டேன். பொதும்பு ரோட்டில் காவலர்கள் ரெண்டுபேரையும் நிறுத்தினேன். மூணுபேரும் தனித்தனியாக நின்று கொண்டோம்.

`திருட்டுக்கு நடுவே ஊஞ்சலாடிய  திருடன்!’ - சிசிடிவி காட்சியைப் பார்த்து `ஷாக்' ஆன ஆசிரியர்

எதிரில் சாவகாசமாக திருடர்கள் வந்து கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்ததும் வாகனத்தின் வேகத்தை உயர்த்தினார்கள். எங்கள் காவலர் ஒருவர், அந்த வண்டியை ரவுண்டு கட்ட, இன்னொருத்தர் அந்த வண்டியின் மீது மோதினார். கீழேவிழுந்த திருடர்கள், தப்பித்து ஓடப் பார்த்தார்கள். அவர்களை விரட்டிப் பிடித்தோம்" என்றார்.

போலீஸாருக்குக் பாராட்டு
போலீஸாருக்குக் பாராட்டு

முதற்கட்ட விசாரணையில், நகைப்பறிப்பில் ஈடுபட்டவர்கள் கல்லுப்பட்டி தமிழ்ச்செல்வன், சிவகங்கை வெள்ளைச்சாமி என்பது தெரியவந்துள்ளது. அதிரடிவேட்டை நடத்தி திருடர்களைப்பிடித்து பறிபோன நகைகளை மீட்கப்போராடிய காவலர்கள் மூவரையும், துப்புக்கொடுத்து உதவிய கல்லூரி மாணவரையும் மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.