Published:Updated:

`வெல்டிங் கேபிள்கள்தான் டார்கெட்!' -புதுக்கோட்டையைப் பதறவைத்த 3 முகமூடிக் கொள்ளையர்கள்

கைதான திருட்டுக் கும்பல்
கைதான திருட்டுக் கும்பல்

தொழிற்சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது 3 பேர் முகத்தை மூடிக்கொண்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர்ப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வந்துள்ளன. இதையடுத்து, தொழிற்சாலை உரிமையாளர்கள் காவலாளிகளைப் பணியில் அமர்த்திக் கண்காணித்தனர். இதில், காவலாளிகளையும் தாக்கிவிட்டு, மர்ம நபர்கள் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால், பீதியடைந்த தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் கீரனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதேபோல், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருக்கும் தொழிற்சாலைகளில் உள்ள வெல்டிங் கேபிள்கள் அதிகளவில் திருடு போய் உள்ளன. இதுபற்றி அந்தந்தப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

திருட்டு
திருட்டு
மாதிரிப் படம்

இதையடுத்து,தொழிற்சாலைகளைக் குறிவைத்து நடக்கும் திருட்டுச் சம்பவத்தைத் தடுக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில், கீரனூர் டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

தொழிற்சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது 3 பேர் முகத்தை மூடிக்கொண்டு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்தது. திருட்டு நடைபெற்ற பகுதிகளில் விசாரணையை முடுக்கிவிட்ட போலீஸார், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

 `2 வருடமாகத் திருடப்பட்ட ஒன்றரை கிலோ தங்கம்!' -சென்னை சகோதரிகளின் `திருட்டு டெக்னிக்'

இந்த நிலையில்தான், மாத்தூர் அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, ஒரே டூவீலரில் 3 பேர் வந்துள்ளனர். அவர்களை மடக்கிப்பிடித்து விசாரித்ததில், 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியுள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்துக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். தொடர் விசாரணையில் மூன்று பேரும் தொழிற்சாலைகளைக் குறிவைத்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து திருட்டில் ஈடுபட்ட புதுக்கோட்டை, குளத்தூர் அருகே நெடுத்தாம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், கர்ணன் மற்றும் மரிங்கிப்பட்டியைச் சேர்ந்த அறிவழகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட திருடர்கள்
கைது செய்யப்பட்ட திருடர்கள்

அவர்களிடமிருந்து வெல்டிங் கேபிள்கள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திருடப்பட்ட வெல்டிங் கேபிள்களின் மதிப்பு 5 லட்ச ரூபாயைத் தாண்டும் என்கின்றனர் போலீஸார்.

இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, ``புதுக்கோட்டை மட்டுமன்றி, தஞ்சாவூர் செங்கிப்பட்டியிலும், திருச்சி திருவெறும்பூர் பகுதியிலும் உள்ள தொழிற்சாலைகளில் தொடர்ந்து திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதைத் தடுக்க வந்த காவலாளிகளையும் அடித்து உதைத்துள்ளனர். திருட்டில் ஈடுபடும்போது 3 பேரும் முகத்தில் முகமூடி அணிந்துள்ளனர். இவர்களின் டார்கெட் வெல்டிங் கேபிள்கள்தான். அதைத்தான் அதிகளவில் திருடியுள்ளனர். இதுபற்றித் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு