Published:Updated:

`நண்பனின் கொலைக்குப் பழிதீர்த்தோம்!' - மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் அதிர்ச்சி வாக்குமூலம்

செ.சல்மான் பாரிஸ்
வி.சதிஷ்குமார்

"எங்கள் நண்பனைக் கொன்ற ரியல் எஸ்டேட் அதிபரைத் திட்டம்போட்டு கொலை செய்தோம்" என்று கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கொல்லப்பட்ட ராஜா
கொல்லப்பட்ட ராஜா

மதுரை புதூரில், ரியல் எஸ்டேட் அதிபர் ராஜாவை கடந்த 21-ம் தேதி 8 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவத்தின் சிசிடிவி பதிவுகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

கொடூரக் கொலையை விசாரித்த புதூர் காவல்துறையினர், சிசிடிவி ஃபுட்டேஜ்களை வைத்து விசாரணையைத் தொடங்கினர். முடிவில், அதே பகுதியைச் சேர்ந்த குட்டை கார்த்திக், நிஜாம் மைதீன், தவ்பிக், ஹரிகிருஷ்ணன் ஆகியோரை மறுநாளே கைதுசெய்து விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில் கொலை சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், " ரியல் எஸ்டேட் ராஜா சேவல் சண்டைக்கு வருவார். வரும் இடங்களில் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்வார். அப்படித்தான் வாடிப்பட்டியில், 2016- ல் நடந்த சேவல் சண்டையில் இதே பகுதியைச் சேர்ந்த யானைப்பாகனான ஸ்ரீதரும் சேவல் சண்டையில் கலந்துகொண்டார்.

கொலை வழக்கில் கைதானவர்
கொலை வழக்கில் கைதானவர்

அப்போது, ராஜா தரப்பினர் தகராறு செய்தனர். இந்த விவகாரத்தில் சில நாள்களிலேயே எங்கள் நண்பர் ஸ்ரீதரைக் கொலை செய்துவிட்டனர். இதில், ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு நடந்துவருகிறது. இதற்குப் பழிவாங்க வேண்டுமென்று நீண்ட நாள்களாகத் திட்டமிட்டிருந்தோம். கடந்த ஒரு வாரமாக, ராஜாவை வீட்டிலும் அவர் கடையிலும், செல்கிற இடமெல்லாம் ஃபாலோ செய்து, கடந்த 21-ம் தேதி இரவு கொலை செய்தோம்" எனத் தெரிவித்துள்ளதாகக் கூறுகின்றனர் போலீஸார்.

இந்தக் கொலையில், முன்விரோதம் மட்டும்தான் காரணமா அல்லது கொடுக்கல் வாங்கலில் சம்பந்தப்பட்ட வேறு யாரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்களா, நண்பருக்காகத்தான் கொலை செய்தார்களா...

கைது செய்யப்பட்டவர்
கைது செய்யப்பட்டவர்

அல்லது கூலிக்குக் கொலை செய்தார்களா என்ற கோணத்தில் இன்னும் சிலரைப் பிடித்து விசாரித்து, காவல்துறையினர் வருகின்றனர். இந்த கொலைச் சம்பவத்தால், மதுரை நகர மக்கள் இன்னமும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் உள்ளனர்.