Published:Updated:

சென்னை: ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஷர்ட்; திருட்டு பைக்கில் கொள்ளை - தோழியுடன் சிக்கிய கொள்ளையர்கள்

உலகநாதன் - குட்டி - நித்யா

சென்னையில் குடியிருக்கும் CISF முன்னாள் அதிகாரி வீட்டில் நகைகள் கொள்ளைபோன வழக்கில் பெண் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

சென்னை: ஒரு மணி நேரத்துக்கு ஒரு ஷர்ட்; திருட்டு பைக்கில் கொள்ளை - தோழியுடன் சிக்கிய கொள்ளையர்கள்

சென்னையில் குடியிருக்கும் CISF முன்னாள் அதிகாரி வீட்டில் நகைகள் கொள்ளைபோன வழக்கில் பெண் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

Published:Updated:
உலகநாதன் - குட்டி - நித்யா

சென்னை விருகம்பாக்கம், வெங்கடேஷ்வராநகர் மெயின் ரோடு 10-வது தெருவைச் சேர்ந்தவர் குமார் சுப்பிரமணியன் (62). இவர் சி.ஐ.எஸ்.எஃப்-பில் உதவி ஆணையாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டைப் பூட்டிவிட்டு மனைவியுடன் வெளிமாநிலத்துக்குச் சுற்றுலாவுக்குச் சென்றார். பின்னர் 25.8.2022-ம் தேதி வீட்டுக்கு வந்த குமார் சுப்பிரமணியன், பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 59 சவரன் தங்க நகைகள், 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் கொள்ளைபோயிருந்தன. இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் குமார் சுப்பிரமணியன் கடந்த 26.8.2022 புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார்.

குட்டி
குட்டி

விசாரணையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது வில்லிவாக்கம், அகஸ்தியர் நகரைச் சேர்ந்த குட்டி என்கிற சிவவிநாயகம், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நித்யா (32), கொடுங்கையூரைச் சேர்ந்த உலகநாதன் (44) ஆகியோர் எனத் தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரையும் போலீஸார் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து 53.5 சவரன் தங்க நகைகளையும் நான்கு கிலோ வெள்ளிப் பொருள்களையும் இரண்டு லட்சம் ரூபாயையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். கைதான குட்டி என்கிற சிவவிநாயகத்தின் மீது ஏழு திருட்டு வழக்குகளும், உலகநாதன் மீது ஆறு திருட்டு வழக்குகளும் உள்ளன. விசாரணைக்குப் பிறகு மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீஸார் சிறையில் அடைத்தனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து விருகம்பாக்கம் போலீஸாரிடம் பேசினோம். ``கொள்ளை நடந்த இடத்துக்குச் சென்று பார்த்தபோது முன்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்றிருந்த இரண்டு கொள்ளையர்கள், தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு பின்பக்கமாக தப்பிச் சென்றிருந்தனர். அவர்கள் யாரென்று அந்தப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். இந்த வழக்கில் கொள்ளையர்களைப் பிடிக்க உதவி கமிஷனர் கௌதம் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் தலைமைக் காவலர்கள் ராஜ்மோகன், விஜயன், பாலகிருஷ்ணன், அரிக்குமார், சிவானந்தம், முருகன் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார், சிசிடிவி-க்களை ஆய்வு செய்தபோது தங்கம், வைர நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு இரண்டு பேர் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

உலகநாதன்
உலகநாதன்

சிறிது தூரம் நடந்து சென்ற கொள்ளையர்கள், அதன் பிறகு அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த பைக்கில் தப்பிச் சென்றனர். அந்த பைக்கின் பதிவு நம்பரை ஆய்வு செய்தபோது அது திருட்டு பைக் எனத் தெரியவந்தது. இதையடுத்து பைக் சென்ற வழியை சிசிடிவி மூலம் பார்த்தபோது ஓர் இடத்தில் பைக்கைவிட்டு ஒருவன் இறங்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. பைக்கிலிருந்து இறங்கிய நபர், அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இன்னொரு பைக்கில் சென்றான். அதனால் இரண்டு பைக்குகளையும் கண்காணித்தோம். விருகம்பாக்கத்தில் தொடங்கி ராயபுரம் வரை அவர்கள் பைக்கில் சென்றனர்.

சுமார் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் இருவரும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை டிரஸ்ஸை மாற்றிக்கொண்டே சென்றனர். அதனால் பைக்கின் பதிவு நம்பர் அடிப்படையில் தொடர்ந்து அவர்களைக் கண்காணித்தபோது சில மணி நேரத்துக்குப் பிறகு இருவரும் வீட்டுக்குச் சென்றதைக் கண்டறிந்தோம். அங்கு சென்று அவர்களைப் பிடித்து விசாரித்தோம். அப்போது இருவரும் கொள்ளையடித்த நகைகளைத் தங்களுக்குத் தெரிந்த நித்யா என்ற பெண்ணிடம் கொடுத்துவைத்தது தெரியவந்தது. நித்யா, உலகநாதன், குட்டி ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மசாஜ் சென்டர் நடத்திவந்துள்ளனர். பின்னர் திருட்டுத் தொழிலுக்கு உலகநாதனும் குட்டியும் மாறியுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் கொள்ளைச் சம்பவத்தில் கைதான இருவரும் அதன் பிறகு எங்கும் சிக்கவில்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் சில இடங்களில் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையர்களுக்கு உதவிய நித்யாவையும் இந்த வழக்கில் கைது செய்துள்ளோம்" என்றனர்.