Published:Updated:

5,000 ரூபாய்க்கு விற்கப்பட்டாரா? - சென்னை சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்

எஸ்.மகேஷ்

சென்னையில் 16 வயதுச் சிறுமிக்கு சொல்ல முடியாத அளவுக்கு கொடுமை நடந்துள்ளது.

Representational image
Representational image

போலீஸ் நிலையத்தில் சிறுமி அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சிறுமியிடம் விசாரணை நடத்திய போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் தனக்கு நடந்த கொடுமைகளை விரிவாக அவர் கூறியுள்ளார்.

``சம்பவத்தன்று வீட்டில் சண்டைபோட்டுவிட்டு நான் வெளியேறினேன். அப்போது எங்கு செல்வது என்று தெரியவில்லை. ஓட்டேரியில் நாங்கள் குடியிருந்தபோது ஜெபினா என்பவரை எனக்குத் தெரியும். அதனால் அவரிடம் நான் வீட்டை விட்டு வெளியேறிய தகவலைத் தெரிவித்தேன். உடனே அவரும் தன்னுடைய வீட்டுக்கு வரும்படி என்னிடம் கூறினார்.

Representational image
Representational image

அங்கு சென்றபோது ஜெபினா ஆன்ட்டி என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார். அப்போது, நான் இனிமேல் வீட்டுக்குச் செல்ல மாட்டேன் என்று கூறியதோடு எனக்கு வேலைவாங்கித் தரும்படி தெரிவித்தேன். அதற்கு ஜெபினா ஆன்ட்டி வேலைவாங்கித் தருகிறேன் என்று கூறினார். அதன்பிறகு என்னை அழைத்துக் கொண்டு முபினா பேகம் ஆன்ட்டி வீட்டுக்குச் சென்றார். அங்கு முபினா பேகமும் ஜெபினாவும் வேலை வாங்கித் தருவது தொடர்பாகப் பேசினர்.

அவர்கள் இருவரையும் நம்பினேன். உனக்கு வேலை ரெடியாகிவிட்டது என்று கூறிய முபினா பேகம், என்னை நிஷா ஆன்ட்டி வீட்டுக்கு அழைத்துச் சென்றார். நிஷா ஆன்ட்டியும் என்னிடம் அன்பாகப் பேசினார்கள். எவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டார்கள். என் படிப்பு, குடும்ப பின்னணிகளைக் கேட்டார். நான் பதில் சொன்னதும் என்னை ஒரு அறையில் தங்க வைத்தனர்.

நிஷா
நிஷா

அப்போது எனக்கு புது டிரஸ் வாங்கிக் கொடுத்தனர். அதை என்னை அணிந்துகொள்ளும்படி கூறினர். அதன்படி நானும் புது டிரஸ்ஸை அணிந்துகொண்டேன். இந்தச் சமயத்தில் எனக்கு மது வாங்கித் தந்தனர். அதைக் குடித்தவுடன் போதையில் மயங்கிவிட்டேன். கண்விழித்தபோது என் நிலைமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.

அறையைவிட்டு வெளியேறிய நான், நிஷாவிடம் சண்டை போட்டேன். ஆனால், அவரோ என் பேச்சைக் கேட்கவில்லை. அதோடு என்னை அந்த வீட்டிலிருந்து வெளியேற அனுமதிக்கவில்லை. இதனால் அந்த அறைக்குள் முடங்கிக் கிடந்தேன். அப்போது அங்குவந்த சிலர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இந்தக் கொடுமை தொடர்ந்து நடந்தது. இதனால், நிஷாவிடம் கதறி அழுதேன். அங்கு எனக்கு நடந்த கொடுமையைத் தாங்க முடியாமல் தப்பி வீட்டுக்கு வந்தேன்" என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

முபினா பேகம்
முபினா பேகம்

இதையடுத்து ஜெபினா, நிஷா, முபினா பேகம் ஆகிய மூன்று பேரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் 16 வயது சிறுமியை 5,000 ரூபாய்க்கு விலை பேசியுள்ளார் நிஷா. அதில் 1,500 ரூபாயை எடுத்துக்கொண்டு மீதியுள்ள 3,500 ரூபாயை முபினா பேகத்திடம் கொடுத்துள்ளார் நிஷா. அந்தப் பணத்தில் 1,000 ரூபாயை எடுத்துக்கொண்ட முபினா பேகம், மீதமுள்ள 2,500 ரூபாயை ஜெபினாவிடம் கொடுத்துள்ளார். அதை அவர் வைத்துக் கொண்டார். சிறுமிக்கு புது டிரஸ் மட்டும் வாங்கிக் கொடுத்தது தெரியவந்தது.

நிஷா மீது ஏற்கெனவே வழக்குகள் உள்ளன. மேலும் அவர் பாலியல் புரோக்கர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்று பெண்கள் மீதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் குடும்ப பின்னணி குறித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அப்பா இல்லை. இதனால் அம்மா, பாட்டி அரவணைப்பில் அவர் இருந்துள்ளார். மேலும், அவளுக்கு இரண்டு சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி அடிக்கடி வீட்டைவிட்டு வெளியில் சென்று தங்குவதும் ஒரு சில தினங்களுக்குப் பிறகு வீடு திரும்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஜெபினா
ஜெபினா

கடந்த 3-ம் தேதி காணாமல்போன சிறுமி, வீட்டுக்கு வரவில்லை என்றதும் 7-ம் தேதிதான் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீஸாரும் பல இடங்களில் தேடிய நிலையில் சிறுமியே தானாக வீடு வந்து சேர்ந்துள்ளார். அவர் கூறிய தகவல்களால் நிஷா, முபினா பேகம், ஜெபினா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.