விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சிபுரம் சந்திப்பில் சாத்தூர் சுங்கச்சாவடிப் பணியாளர்கள் சாலையோரத்தில் தடுப்புகள் அமைத்து பராமரிப்பு வேலைகளைச் செய்துகொண்டிருந்தனர். இந்தப் பணியில், திருவிருந்தான்பட்டியைச் சேர்ந்த செல்வப்பாண்டி (33), வாழவந்தாள்புரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (32), சிவந்திபட்டியைச் சேர்ந்த ராம்குமார் (32) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் குருசாமி (55) என்பவர் சாத்தூரிலிருந்து கோவில்பட்டியை நோக்கி தன்னுடைய காரில் வந்திருக்கிறார். குருசாமி மது போதையில் காரை வேகமாக ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மூன்று பணியாளர்கள் மீதும் பயங்கரமாக மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சாலை விபத்தில் சாலையோரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த சுங்கச்சாவடிப் பணியாளர்கள் செல்வபாண்டி, கருப்பசாமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சாத்தூர் தாலுகா போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு, சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்த சிவந்திபட்டியைச் சேர்ந்த ராம்குமார், திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்தில் கார் ஓட்டுநர் குருசாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீஸார் குருசாமி மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.