Published:Updated:

வேலூர்: காதல் தகராறில் இளைஞர் கொலை! - சடலத்தைப் புதருக்குள் புதைத்த நண்பர்கள் சிக்கியது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தோண்டி எடுக்கப்பட்ட பாலமுருகனின் சடலம்
தோண்டி எடுக்கப்பட்ட பாலமுருகனின் சடலம்

கொலை செய்திருக்கிறோம் என்ற அச்சமின்றி தலைமுடியைக் கோதிவிட்டுக்கொண்டே மூன்று பேரும் கால்வாய்ப் பகுதிக்குள் சென்றனர். அவர்கள் காட்டிய இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, பாலமுருகனின் சடலம் உருகுலைந்து இருந்தது.

வேலூர், சத்துவாச்சாரி அருகேயுள்ள பெருமுகை மேலாண்டை தெருவைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். தோட்டப்பாளையத்தில் வசித்துவந்த இவரின் குடும்பத்தினர் ஓராண்டுக்கு முன்புதான் பெருமுகைப் பகுதிக்கு மாறியிருக்கின்றனர். சுந்தரராஜனின் 20 வயது மகன் பாலமுருகன், மெக்கானிக் வேலை செய்துவந்தார்.

2019-ம் ஆண்டில், வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுகுமார் என்பவர் கொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கில் பாலமுருகன் கைதுசெய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜாமீனில் வெளிவந்த பிறகும், அவர் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்ததாக விவரிக்கிறது, வேலூர் காவல்துறை. தோட்டப்பாளையம் பகுதியிலேயே சுற்றிக்கொண்டு தன் வயது இளைஞர்களுடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற போதைப் பழக்கங்களையும் கற்றுக்கொண்டாராம் பாலமுருகன்.

கொலைசெய்யப்பட்ட பாலமுருகன்
கொலைசெய்யப்பட்ட பாலமுருகன்

இந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி வீட்டிலிருந்து வெளியில் சென்ற பாலமுருகன் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் பெற்றோர் மகனைக் கண்டுப்பிடித்துத் தரக்கோரி சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் பாலமுருகனின் நெருங்கிய நண்பர்களான தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த கரியன் என்கிற ஜெகதீஸ்வரன், மதிவாணன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரைப் பிடித்து நேற்று விசாரித்தனர். அப்போது, மூன்று பேரும் தாங்கள்தான், பாலமுருகனை அடித்துக் கொலைசெய்து புதைத்துவிட்டதாக திடுக்கிடும் தகவல்களைக் கூறியிருக்கின்றனர்.

இது தொடர்பாக போலீஸார் கூறுகையில், ``விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மூவரில் ஒருவரான மதிவாணனின் தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்திருக்கிறார் கொலைசெய்யப்பட்ட பாலமுருகன். அந்தப் பெண்ணுக்கு இவர்மீது விருப்பமில்லை எனவும் கூறப்படுகிறது. அப்படியிருந்தும், தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி மிரட்டிவந்திருக்கிறார். மதிவாணன் கண்ணெதிரிலேயே அவரின் தங்கையின் கையைப் பிடித்து இழுத்து பாலமுருகன் தவறாக நடக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது, பெண்ணின் வீட்டுக்குள் நடந்திருக்கும் சம்பவம்.

கொன்று புதைத்த இடத்தைக் காட்டும் நண்பர்கள்
கொன்று புதைத்த இடத்தைக் காட்டும் நண்பர்கள்

இது தொடர்பாக, மதிவாணனுக்கும் பாலமுருகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. 'தங்கையைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' என்று மதிவாணன் எச்சரித்திருக்கிறார். பாலமுருகன் கேட்காததால், மதிவாணன் உட்பட நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து, அவரைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். அதன்படி, 28-ம் தேதி பாலமுருகனை மது குடிக்க அழைத்திருக்கின்றனர். நண்பர்கள்தானே அழைக்கிறார்கள் என்று நம்பி அவரும் சென்றிருக்கிறார். மூன்று பேரும் பாலமுருகனைக் கூட்டிக்கொண்டு வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியிலிருக்கும் ஹோட்டல் ஒன்றின் அருகில் சென்றிருக்கின்றனர். அங்குள்ள பெரிய கால்வாய்ப் பகுதியின் முட்புதருக்குள் அமர்ந்து மது குடித்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்போது, மூன்று பேரும் சேர்ந்து பாலமுருகனைச் சரமாரியாகத் தாக்கி நிலைகுலையச் செய்திருக்கின்றனர். பின்னர், கல்லால் தாக்கி கொடூரமாகக் கொலைசெய்தனர். முட்புதருக்குள் பள்ளம் தோண்டி புதைக்க முயன்றபோது, உடல் அசைந்திருக்கிறது. அப்போது, கடப்பாரையால் குத்தி உயிரைப் பறித்தனர். அசைவு அடங்கிய பிறகு பாயில் உடலைச் சுருட்டி, பள்ளத்தில் தள்ளி, மண்ணைக் கொட்டி மூடிவிட்டதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்´´ என்றனர். இன்று காலை சம்பவ இடத்துக்கு மதிவாணன் உட்பட மூன்று பேரையும் அழைத்துச் சென்றனர் போலீஸார்.

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

கொலை செய்திருக்கிறோம் என்ற எந்தவிதமான நடுக்கமும், அச்சமுமின்றி தலைமுடியை கோதிவிட்டுக்கொண்டே மூன்று பேரும் ராஜ நடை போட்டபடி கால்வாய் பகுதிக்குள் சென்றனர். ‘எப்படிக் கொலைச் செய்தோம்?’ என்பதை மூவரும் நடித்துக் காட்டினர். பிறகு, அவர்கள் காட்டிய இடத்தில் தோண்டிப் பார்த்தபோது, பாலமுருகனின் சடலம் உருக்குலைந்து இருந்தது. மருத்துவக்குழுவினர் மூலம் அங்கேயே பிரேத பரிசோதனை நடைபெற்றது. இதையடுத்து, உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மாயமானதாகப் பதியப்பட்ட வழக்கை கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்த போலீஸார், மதிவாணன் உட்பட மூன்று பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம், வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு