Published:Updated:

`கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கலாமா?' - காங்கிரஸ் பிரமுகருக்குக் கணவன் மனைவியால் நேர்ந்த கொடூரம்

சுபாஷ் சந்திரபோஸ்
சுபாஷ் சந்திரபோஸ்

கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக போலீஸ் மோப்ப நாயை வரவழைத்தனர். ஆனால், மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி அருகில் உள்ள மற்றொரு தோட்டத்துக்குச் சென்றுவிட்டு திரும்பிவிட்டது.

தஞ்சாவூர் அருகே சில தினங்களுக்குமுன் காங்கிரஸ் பிரமுகரும் விவசாயியுமான ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகக் கணவன் மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யபட்டுள்ள நிலையில் கொலை செய்துவிட்டு, போலீஸார் வந்தபோதும் எதுவும் தெரியாததுபோல் சம்பவ இடத்திலேயே கொலையாளிகள் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை நடந்த இடத்தில் அய்யாசாமி
கொலை நடந்த இடத்தில் அய்யாசாமி

தஞ்சாவூர் அருகே உள்ள மருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 64). இவர் காங்கிரஸ் கட்சியில் தஞ்சை தெற்கு ஒன்றிய காங்கிரஸ் கிராமக் கமிட்டியின் தலைவராகவும் மருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராகவும் இருந்துள்ளார். மருங்குளத்திலிருந்து கறம்பக்குடி செல்லும் சாலையில் உள்ள நாகப்ப உடையான்பட்டியில் இருக்கும் அவருடைய வாழை தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்றவர், சில தினங்களுக்குமுன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வல்லம் டி.எஸ்.பி சேதுராமன் தலைமையிலான போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அத்துடன் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக போலீஸ் மோப்ப நாயை வரவழைத்தனர். ஆனால், மோப்ப நாய் சிறிது தூரம் ஓடி அருகில் உள்ள மற்றொரு தோட்டத்துக்குச் சென்றுவிட்டு திரும்பிவிட்டது. கொலை நடந்த இடத்தில் சொத்துப் பத்திரங்களின் நகல்கள், செல்போன், காலணி ஆகியவை சிதறிக் கிடந்தன. இந்தநிலையில் போலீஸார் சுபாஷ் சந்திரபோஸின் மகள் இந்திரா கொடுத்த புகாரின்பேரில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

சம்பவ இடத்தில் பூங்கொடி
சம்பவ இடத்தில் பூங்கொடி

இதையடுத்து இந்தக் கொலை தொடர்பாக மருங்குளம் அருகே உள்ள கோபால் நகர் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி, அவரின் கணவர் அய்யாசாமி, மருங்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் பேசியபோது, ``பூங்கொடி, சுபாஷ் சந்திரபோஸின் வாழைத்தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்தநிலையில் பூங்கொடி பத்திரத்தை அடமானம் வைத்து சுபாஷ் சந்திரபோஸிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதைத் திருப்பிக் கேட்டு வந்துள்ளார் சுபாஷ் சந்திரபோஸ். ஆனால், பணத்தைத் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார் பூங்கொடி. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதையடுத்து, சம்பவம் நடந்த தினத்தன்று பூங்கொடி, `பணத்தைத் தருகிறேன், வாழைத் தோட்டத்துக்கு வாங்க' என சுபாஷ் சந்திரபோஸை அழைத்துள்ளார். இதற்கிடையே தன்னுடைய கணவர், கள்ளக்காதலனான இளங்கோவனுடன் இணைந்து கொலைக்கான திட்டத்தை வகுத்துள்ளார். சுபாஷ் சந்திரபோஸ் வந்த பிறகு, மறைந்திருந்த இளங்கோவன் அவர் தலையில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

பூங்கொடி
பூங்கொடி

சுபாஷ் சந்திரபோஸ் கொலை விவகாரத்தில் பூங்கொடியும் அவரின் கணவரும் கைது செய்யப்பட்டிருப்பது மருங்குளம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாகப் பேசிய மருங்குளம் பகுதி மக்கள் சிலர், ``சுபாஷ் சந்திரபோஸ் கொலை செய்யபட்ட தகவல் அறிந்து ஏராளமானவர்கள் அந்த இடத்தில் திரண்டனர். அப்போது அவரின் உறவினர்கள் மற்றும் பெண்கள், `அதிர்ந்துகூட பேசாதவரை இப்படிச் செய்துவிட்டார்களே' எனக் கதறி அழுது கொண்டிருந்தனர்.

அய்யாசாமி
அய்யாசாமி

கொலை செய்துவிட்டு எதுவும் தெரியாததுபோல் அங்கே பூங்கொடியும், ` படுபாவிங்க நல்ல மனுஷனை அநியாயமா கொன்னுட்டாங்களே' என அழுதுகொண்டிருந்தார்.

அவரின் கணவர் அய்யாசாமியும் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தார். போலீஸ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தபோதும் எந்தச் சலனமும் இல்லாமல் அவர்கள் அந்த இடத்தில் இருந்துள்ளனர். சந்தேகம் எதுவும் வராமல் இருக்க இப்படிச் செய்தாலும், தங்களால் கொல்லப்பட்டவர் சடலமாகக் கிடக்க அதைப் பார்த்துக்கொண்டு அந்த இடத்திலேயே நிற்க எப்படித்தான் அவர்களுக்கு மனசு வந்ததோ தெரியவில்லை.

இளங்கோவன்
இளங்கோவன்

அந்தச் சமயத்தில் மோப்ப நாயும் வந்தது. ஆனால், கூட்டத்தில் நின்ற கொலையாளிகளைப் பிடிக்காமல் சென்றுவிட்டது. ஆனாலும் குற்றவாளிகளை போலீஸார் பிடித்துவிட்டனர்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு