சென்னை கோயம்பேட்டில் காய்கறி, பழ மார்க்கெட், மளிகை மொத்தப் பொருள் விற்பனைக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. கொரோனா காலகட்டத்தில் மூடப்பட்ட இந்தச் சந்தை கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட்டை நம்பி ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். கோயம்பேடு வாழைப்பழ மொத்த வியாபாரக் கடையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் (30) வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி சத்யா. இந்தத் தம்பதியருக்கு 2 வயதில் ஒரு குழந்தையும், 3 மாதத்தில் பெண் குழந்தையும் இருக்கிறார்கள்.

நேற்றிரவு மார்க்கெட்டிலுள்ள கடையின் முன் மனைவி, குழந்தைகளோடு ரமேஷ் தூங்கியிருக்கிறார். அதிகாலையில் ரமேஷ் கண்விழித்தபோது மூன்று மாதப் பெண் குழந்தையைக் காணவில்லை. பல இடங்களில் குழந்தையைத் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ரமேஷும் சத்யாவும் புகாரளித்தனர். அப்போது பணியிலிருந்த சப்-இன்ஸ்பெக்டர் அலட்சியமாகப் பேசியதோடு குழந்தையைத் தேட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த ரமேஷும் சத்யாவும் சமூக ஆர்வலர் ஒருவரிடம் விவரத்தைக் கூறி உதவி கேட்டனர். இதையடுத்து குழந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் சமூக ஆர்வலர் பதிவுசெய்தார். உடனடியாக அதற்குப் பல தரப்பிலிருந்து கமென்ட்கள் பதிவு செய்யப்பட்டன. இந்தத் தகவல் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலின் கவனத்துக்குச் சென்றது. உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அண்ணா நகர் துணை கமிஷனருக்கு போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். இதையடுத்து குழந்தையைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
சிசிடிவி-யில் குழந்தைகளைக் கடத்திச் செல்லும் காட்சிகள் எதுவும் தெளிவாகப் பதிவாகவில்லை. அதனால் போலீஸார் கோயம்பேடு பகுதியில் உள்ளவர்களிடம் குழந்தையின் போட்டோவைக் காட்டி விசாரித்துவருகின்றனர். திருநங்கை ஒருவர் கூறிய தகவலின்படி குழந்தையைக் கடத்தியவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் குழந்தையைக் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்தபோது அலட்சியமாக நடந்த சப்-இன்ஸ்பெக்டரிடம் (மெமோ கொடுக்கப்பட்டுள்ளது) விளக்கம் கேட்டிருக்கிறார் துணை கமிஷனர்.
கோயம்பேடு மார்க்கெட்டில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.