Published:Updated:

24 மணி நேரத்தில் சென்னையில் 3 கொலைகள்! - தீபாவளி தினத்தில் நடந்த பயங்கரம்

சென்னையில் தீபாவளி பட்டாசு சத்தம் கேட்டுக்கொண்டிருந்த சமயத்தில் 3 கொலைகள் நடந்திருப்பது காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட ஜானகிராமன்
கொலை செய்யப்பட்ட ஜானகிராமன்

முதல் கொலை

சென்னை வில்லிவாக்கம், ராஜமங்கலம், 7வது தெருவைச் சேர்ந்தவர் ஜானகிராமன். ஜ.சி.எஃப்பில் பணியாற்றி வந்தார். அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஜானகிராமன், நேற்றிரவு 10 மணியளவில் கொளத்தூர் 31வது தெருவில் பைக்கில் வரும்போது மர்மகும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பெரவள்ளூர் போலீஸார் விசாரணை நடத்தி கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.

முருகன்
முருகன்

2-வது கொலை

சென்னை, மயிலாப்பூர் மாயாண்டி காலனியைச் சேர்ந்தவர் சிட்டிபாபு. இவரின் மகன் கார்த்திக் (24). தீபாவளியையொட்டி கலங்கரைவிளக்கு, நொச்சிநகரில் உள்ள நண்பர்களைச் சந்திக்கச் சென்றார். அப்போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த பூபாலனுக்கும் கார்த்திக்குக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் கார்த்திக்கின் செல்போனை பூபாலன் பறித்துக்கொண்டார். அப்போது அங்குள்ளவர்கள், பூபாலனிடம் தகராறு செய்யாதே, நாளை வந்து செல்போனை வாங்கிக்கொள் என்று கூறினர். இதனால் கார்த்திக் அங்கிருந்து திரும்பிச் சென்றுவிட்டார்.

இதையடுத்து இன்று காலை கார்த்திக், பூபாலனைச் சந்திக்கச் சென்றார். அப்போது செல்போனைக் கொடுக்காமல் மீண்டும் தகராறு செய்துள்ளார் பூபாலன். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த பூபாலன், மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திக்கைக் குத்தினார். அதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த கார்த்திக் இறந்தார். கார்த்திக் சடலத்தை மீட்ட போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக மெரினா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கார்த்திக்
கார்த்திக்

3-வது கொலை

சென்னை அண்ணாநகர் மேற்கு பாடி புதுநகர், 13வது தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவரின் மகன் முருகன் (24). வேலைக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றிவந்தார். இந்தநிலையில் இன்று மதியம் 12-வது தெரு வழியாகச் சென்றார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் முருகனை வழிமறித்தது. பிறகு, முருகனை அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டியது. அவர்களிடமிருந்து தப்பிக்க முருகன் 12-வது தெருவிலிருந்து 11-வது தெருவுக்கு ஓடிவந்தார். இருப்பினும், அந்தக் கும்பல் விடாமல் முருகனை துரத்தி வெட்டி சாய்த்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் முருகனின் பெற்றோர் அங்கு வந்தனர். அவர்கள் முருகனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து முருகனின் சடலத்தைக் கைப்பற்றிய ஜெ.ஜெ.நகர் போலீஸார் 5 பேர் கொண்ட கும்பலைத் தேடி வருகின்றனர்.

சென்னையில் தீபாவளியையொட்டி 24 மணி நேர பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். எந்தவித பிரச்னையும் இல்லாமல் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில் 24 மணி நேரத்தில் 3 கொலைகள் நடந்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.