Published:Updated:

சென்னை: 3 பேர் கொலைக்கு என்ன காரணம்? - அதிர்ச்சி தகவல்கள்

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

சென்னை யானைக்கவுனியில் குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே வீட்டில் தாய், தந்தை, மகன் என 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.

சென்னை, சவுகார்பேட்டை, விநாயகர் மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் தலில் சந்த் (74). ஃபைனான்ஸ் தொழில் செய்து

வந்தார். இவரது சொந்த ஊர் ராஜஸ்தான் மாநிலம், பிரோகி ஜவான் என்ற கிராமம். இவரின் மனைவி புஷ்பா பாய் ( 70) மகன் சீத்தல் (38). இவர்கள் 3 பேரும் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் வீட்டுக்குள் இறந்து கிடந்தனர். தலில்சந்தின் மகள் பிங்கி பெற்றோரைப் பார்ப்பதற்காக அங்கு வந்த போதுதான் கொலை நடந்த தகவல் தெரிய வந்த்து. இதனால் அதிர்ச்சியடைந்த பிங்கி உடனே தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

யானைக்கவுனி போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வடசென்னை இணைக்கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் யானைக்கவுனி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மூன்று பேரின் சடலங்களையும் மீட்ட போலீஸார் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து சவுகார்பேட்டை போலீஸார் விசாரித்தனர்.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். தலில்சந்த்தின் மகள் பிங்கியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தலில்சந்தின் மகன் சீத்தலின் மனைவிக்கு குடும்பத்தினருக்கும், தலில்சந்த்துக்கும் இடையே கடந்த சில மாதங்களாக சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. வரதட்சணை பிரச்சனையும் இருந்த்தாக கூறப்படுகிறது. சீத்தலின் மனைவி தரப்பில் உள்ளவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தடய அறிவியல் நிபுணர்கள் கொலை நடந்த வீட்டில் நீண்ட நேரம் தடயங்களை சேகரித்தனர். மேலும் கொலை நடந்த இடத்துக்கு பத்திரிகை நிருபர்கள், போட்டோ கிராபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் கூறுகையில் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தியுள்ளோம். ஆதாரங்களை சேகரித்து அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது என்றார்

அடுத்த கட்டுரைக்கு