Published:Updated:

`கேங் மோதல்; ஒரே குழியில் புதைக்கப்பட்ட 3 பேர் ’ - 10 மாதங்களுக்குப் பிறகு சிக்கிய கொள்ளையர்கள்

தடயங்களை சேகரித்த போலீஸார்
தடயங்களை சேகரித்த போலீஸார்

இரண்டு கொள்ளைக் கும்பலுக்குள் ஏற்பட்ட ‘கேங்’ மோதலில், மூன்று பேர் வெட்டிக் கொல்லப்பட்டு, ஒரே குழியில் புதைக்கப்பட்டனர். 10 மாதங்களுக்குப் பிறகு இந்தக் கொடூர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் போலீஸார் ரோந்து சென்றுள்ளனர். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக பதுங்கியிருந்த திருவலத்தை அடுத்த சீக்கராஜபுரம் மோட்டூர் பஜனைக் கோயில் தெருவைச் சேர்ந்த யுவராஜ் (26), பல்லவ நகர் கன்னிக்கோயில் தெருவைச் சேர்ந்த வாசு (19), திருவலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த அரவிந்தன் (19) ஆகிய மூன்று பேரும் பிடிபட்டனர்.

முதலில் கைதுசெய்யப்பட்ட 3 பேர்
முதலில் கைதுசெய்யப்பட்ட 3 பேர்

விசாரணையில், அவர்கள் மூன்று பேரும் இரண்டு சக்கர வாகனத் திருட்டு, செயின் பறிப்பு உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்தது. கடந்த மார்ச் மாதம், சிப்காட் அக்ராவரம் மலைமேடு பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி வள்ளியின் கழுத்திலிருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான தங்கச்செயினையும் இவர்கள் பறித்தது தெரியவந்தது. தொடர் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4-ம் தேதி, திருட்டு, வழிப்பறி செய்வதில் ஏற்பட்ட ‘கேங்’ மோதலில், சென்னையைச் சேர்ந்த ஆசீப் அகமது (28), விழுப்புரம் மாவட்டம் தெளி கிராமத்தைச் சேர்ந்த மரியபாலன் என்கிற சூர்யா (18), நவீன் (25) ஆகிய மூன்று பேரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ளனர். அந்த மூன்று பேரின் சடலங்களையும் திருவலம் கெம்பராஜபுரம் கிராமம் பனந்தோப்புப் பகுதி பொன்னையாற்றில் ஒரே குழியில் புதைத்துள்ளதாக வாக்குமூலம் கொடுத்ததுடன், கொலை செய்யப்பட்ட நபர்களின் புகைப்படங்களையும் கொடுத்தனர்.

கொலை செய்யப்பட்ட 3 பேர்
கொலை செய்யப்பட்ட 3 பேர்

அவர்கள் கூறியதைக் கேட்டு போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். கொலை நடைபெற்ற பகுதி திருவலம் போலீஸ் கட்டுப்பாட்டில் வருவதால், சிப்காட் போலீஸார் தங்களிடமிருந்த தகவல்களை அவர்களிடம் தெரிவித்தனர். பிடிபட்ட மூன்று பேரையும் செயின் பறிப்பு வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, காட்பாடி டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையில் திருவலம் போலீஸார், புதைக்கப்பட்ட சடலங்கள் குறித்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இந்தச் சம்பவத்தில், சீக்கராஜபுரம் பல்லவ நகரைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சென்னை போரூரைச் சேர்ந்த இளங்கோ, திருவொற்றியூரைச் சேர்ந்த சாரு மற்றும் சகோதரர்கள் சதீஷ், சூர்யா ஆகிய மேலும் 5 பேருக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. இந்தக் கும்பலுக்கு இளங்கோ தான் தலைவனாக இருந்துள்ளார். கொலை செய்யப்பட்ட கும்பலுக்கும், இந்தக் கும்பலுக்கும் குற்றச் செயல்கள் மூலம் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மது விருந்து கொண்டாட்டங்களில் ஒன்று கூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

திருவலம் காவல் நிலையம்
திருவலம் காவல் நிலையம்

இந்த நிலையில், இளங்கோ கும்பல் அடிக்கடி போலீஸில் சிக்கினர். கொலை செய்யப்பட்ட நபர்கள்தான், போலீஸில் தங்களை போட்டுக் கொடுப்பதாக இளங்கோ கும்பல் சந்தேகித்துள்ளனது. இதனால், அவர்கள் 3 பேரையும் தீர்த்துக்கட்ட முடிவுசெய்துள்ளனர். சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாளில், கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் விழுப்புரத்தில் இருந்தனர். அவர்களை நைசாகப் பேசி ராணிப்பேட்டைக்கு வரவழைத்துள்ளனர்.

அதன்பிறகு, பொன்னை ஆற்றுப்படுகையில் உள்ள காப்புக்காட்டுக்குச் சென்று மது அருந்தியுள்ளனர். இந்த இடம், இவர்கள் அனைவருக்குமே பழக்கமானதுதான். ஏனெனில், தாங்கள் திருடும் இரண்டு சக்கர வாகனங்களை இங்கு கொண்டு வந்துதான் பிரித்தெடுத்து மூட்டை கட்டி எடுத்துச்சென்று விற்பனை செய்வார்களாம். மேலும், அந்த இடத்தில் ஒன்றுகூடி விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பழக்கமான இடம் என்பதால் வழக்கமான மது விருந்துக்குத்தான் அழைக்கிறார்கள் என்று நினைத்து, கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் அங்கு வந்துள்ளனர்.

தோண்டியெடுக்கப்படும் சடலங்கள்
தோண்டியெடுக்கப்படும் சடலங்கள்

போதை தலைக்கேறிய பிறகு, ஏற்கெனவே திட்டம் போட்டபடி, இளங்கோ உள்பட அவரின் கூட்டாளிகள் 8 பேரும் சேர்ந்து ஆசீப் அகமது, சூர்யா, நவீன் ஆகிய மூன்று பேரையும் கத்தியால் குத்தி இரும்பு ராடால் தலையில் தாக்கி கொடூரமாகக் கொலை செய்து, ஒரு குழியைத் தோண்டி மூன்று பேரின் சடலங்களையும் புதைத்துவிட்டது தெரியவந்தது. இந்த நிலையில், கொலையில் தொடர்புடைய திருவொற்றியூரைச் சேர்ந்த சகோதரர்கள் சதீஷ், சூர்யா ஆகிய 2 பேரும் சிக்கினர்.

சம்பவ இடத்துக்கு இந்த இரண்டு பேரையும் போலீஸார் அழைத்துச்சென்றனர். காட்பாடி தாசில்தார் பாலமுருகன், டிஎஸ்பி துரைபாண்டியன், இன்ஸ்பெக்டர் புகழ் ஆகியோர் முன்னிலையில் சடலங்களைப் புதைத்த இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர். குழியிலிருந்து 3 பேரின் சடலங்களும் எலும்புக் கூடுகளாகத் தோண்டி எடுக்கப்பட்டன. உடைகளைக் கொண்டு இறந்த மூன்று பேரும் அடையாளம் காணப்பட்டனர். அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டு பேர் மூலம் உடல் பாகங்கள் அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

குழியில் கிடைத்த எலும்புக் கூடுகள்
குழியில் கிடைத்த எலும்புக் கூடுகள்

சேகரிக்கப்பட்ட மண்டை ஓடுகள், எலும்புகள் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஏற்கெனவே மூன்று பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது பிடிபட்ட சகோதரர்கள் இரண்டு பேரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் இளங்கோ, ஜெயப்பிரகாஷ், சாரு ஆகிய மூன்று பேரையும் பிடிக்க தனிப்படை பல்வேறு பகுதிகளுக்கு விரைந்துள்ளது. 10 மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்த கொடூரச் சம்பவம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு