Published:Updated:

`போலீஸ் கெட்டப்; போலிச் சான்றிதழ் செட்டப்!'- விளையாட்டு கோட்டாவில் நடந்த வில்லங்கம்

போலிச் சான்றிதழ் மூலம் காவலர் பணிக்குத் தேர்வானது குறித்துப் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

போலிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணிக்குத் தேர்வானவர்கள்
போலிச் சான்றிதழ் கொடுத்து அரசுப் பணிக்குத் தேர்வானவர்கள்

`விளையாட்டு வீரர்' எனப் போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த போலீஸ்காரர் உட்பட 3 பேரை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்த நிலையில் இதேபோன்று போலிச் சான்றிதழ் கொடுத்து போலீஸ் பணிக்குத் தேர்வான மேலும் 3 பேர் சிக்கியுள்ளனர். போலிச் சான்றிதழ் விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலிச் சான்றிதழ் விவகாரத்தில் ஏற்கெனவே கைதானவர்கள்.
போலிச் சான்றிதழ் விவகாரத்தில் ஏற்கெனவே கைதானவர்கள்.

காவல்துறை தேர்வில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் போலிச் சான்றிதழ் கொடுத்து சிலர் தேர்வாகி காவலர்களாகப் பணிபுரிந்து வருவதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ-க்கள் குகனேஸ்வரன், முருகநாதன் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

கமுதி அருகே உள்ள ஒ.கரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவரிடம் நடத்திய விசாரணையில், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கபடி பயிற்சியாளர் சீமான் என்பவர் விளையாட்டு வீரருக்கான போலிச் சான்றிதழ்களை வழங்கியதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவருக்கு வலைவிரித்த போலீஸார் ராஜீவ்காந்தி மூலம் புதிதாகச் சான்றிதழ் ஒன்றைக் கேட்டுள்ளனர்.

சீமானும் இதற்கு 50 ஆயிரம் விலையை நிர்ணயித்துள்ளார். இதையடுத்து அவரது வங்கிக் கணக்கில் ரூ.50 ஆயிரத்தை ராஜீவ்காந்தி மூலம் செலுத்தியுள்ளனர். இதில் சீமான் வகையாகச் சிக்கினார். அவர் மூலம், போலிச் சான்றிதழைப் பெற்று காவலராகத் தேர்வாகி திருச்சி ஆயுதப்படையில் பணியாற்றி வந்த மணிராஜ் என்பவரும் கைதானார். இதையடுத்து வீரமணி, ராஜீவ்காந்தி, மணிராஜ் ஆகிய மூவரையும் கைது செய்த போலீஸார் தொடர் விசாரணையில் ஈடுபட்டனர்.

தற்போது சிக்கிய ராஜசேகரன், தவமுருகன், முத்துமணி
தற்போது சிக்கிய ராஜசேகரன், தவமுருகன், முத்துமணி

இதுபோன்று மேலும் பலர் போலிச் சான்றிதழ் மூலம் காவலர் பணிக்குத் தேர்வானது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கமுதி வேப்பங்குளத்தைச் சேர்ந்த முத்துமணி, முதுகுளத்தூரைச் சேர்ந்த ராஜசேகரன் ஆகிய இருவரும் ஏற்கெனவே கைதாகி உள்ள ராஜீவ்காந்தியிடம் தலா 30 ஆயிரம் ரூபாயைக் கொடுத்து போலிச் சான்றிதழ் பெற்றதும், அதன்மூலம் சமீபத்தில் நடந்த காவலர் தேர்வில் பணிக்குத் தேர்வானதும் தெரியவந்தது.

இதேபோல் ஏ.புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த தவமுருகன், சீமானிடம் ரூ.17 ஆயிரம் கொடுத்து தேசியக் கபடி போட்டியில் பங்கேற்றதாகப் போலிச் சான்றிதழ் பெற்றுள்ளார். இந்தச் சான்றிதழ் மூலம் சமீபத்தில் நடந்த இந்தோ-திபெத் எல்லைக் காவல்படை பணிக்குத் தேர்வாகியுள்ளார். இதையடுத்து இவர்கள் மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

போலீஸ் அதிகாரி வேடத்தில் வீரமணி
போலீஸ் அதிகாரி வேடத்தில் வீரமணி

கபடி பயிற்சியாளரான வீரமணி, தான் சினிமாவில் நடித்த போலீஸ் அதிகாரி கெட்டப் போட்டோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு அதன்மூலம் கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களிடம் தான் ஒரு போலீஸ் அதிகாரி என அறிமுகமாகியிருக்கிறார். அந்த இளைஞர்களிடமிருந்து பணத்தை வாங்கிக்கொண்டு விளையாட்டு வீரர்களுக்கான போலிச் சான்றிதழைக் கொடுத்திருப்பதும் மேலும் சிலர் இதுபோல் போலிச் சான்றிதழ்களைக் கொடுத்து காவலர் பணிக்குத் தேர்வாகியிருப்பதும் தெரியவந்துள்ளது.