Published:Updated:

`காரில் வந்த நபர்; மிரண்ட காய்கறிக் கடைக்காரர்!' -புதுக்கோட்டையைக் குறிவைத்த கள்ளநோட்டுக் கும்பல்

பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்
பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டுகள்

இந்தக் கும்பல் புதுக்கோட்டை காந்திநகரில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து யாருக்கும் தெரியாத வகையில் ரகசியமாகக் கள்ள நோட்டுகளை அச்சடித்து அவர்களே அதை மெல்ல மெல்லப் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற நபர் போலீஸாரிடம் சிக்கினார். தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்த ரூ.68,00,000 மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.

போலீஸாரிடம் சிக்கிய கும்பல்
போலீஸாரிடம் சிக்கிய கும்பல்

இந்தநிலையில், புதுக்கோட்டையில் தொடர்ந்து கள்ள நோட்டுகளை அச்சடித்து சிலர் புழக்கத்தில் விடுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவல்களின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே, புதுக்கோட்டை காய்கறி மார்க்கெட்டுக்கு காரில் வந்து இறங்கிய நபர் காய்கறிக் கடைக்காரரிடம் 2,000 ரூபாயைக் கொடுத்து காய்கறி வாங்கிவிட்டுச் சென்றுள்ளார்.

அவர் கொடுத்த பணத்தின் மீது கடைக்காரருக்குச் சந்தேகம் வரவே, நோட்டைச் சோதனை செய்து பார்த்திருக்கிறார். இதில், கடைக்காரருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அது கள்ள நோட்டு என்று தெரிந்தவுடன் உடனே கடைக்காரர் கணேஷ் நகர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையில், புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர்தான் காரில் வந்து கள்ள நோட்டை மாற்ற முயன்றுள்ளார் என்பது தெரியவந்தது. ஜெயராமன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த காந்தி நகரைச் சேர்ந்த வேலு, பனையப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன் ஆகிய மூன்று பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.7,15,000 மதிப்பிலான கள்ள நோட்டுகளைக் கைப்பற்றினர்.

`பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கனெக்‌ஷன்?’ - நெல்லை அருகே கள்ளநோட்டு புழக்கத்தில் விட்டவர் கைது

மேலும், ஒரு கம்ப்யூட்டர், ஒரு பிரின்டர், கார் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுபற்றி போலீஸாரிடம் கேட்டபோது, "ரகசியத் தகவல்களின்பேரில், தொடர்ந்து விசாரணை நடத்திக்கொண்டு வருகிறோம். இந்தக் கும்பல் புதுக்கோட்டை காந்திநகரில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து யாருக்கும் தெரியாத வகையில் ரகசியமாகக் கள்ள நோட்டுகளை அச்சடித்து அவர்களே அதை மெல்ல மெல்லப் புழக்கத்தில் விட்டுள்ளனர்.

திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டைப் பகுதிகளில் கள்ளநோட்டுகளை அதிகளவில் புழக்கத்தில் விட்டுள்ளனர். இதில் இன்னும் சிலருக்குத் தொடர்பு உள்ளது என்று சந்தேகிப்பதால், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதுபோன்று கள்ள நோட்டுகளை யாரேனும் மாற்ற முற்படுவது தெரிந்தால், தயங்காமல் போலீஸாரிடம் புகார் அளிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு