Published:Updated:

`கோடிகள் கொட்டும்; நோய் நொடி வராது!' -இரிடியம் மோசடியில் ஆடு வியாபாரியை மிரளவைத்த தி.மு.க பிரமுகர்

இரிடியம்
இரிடியம்

திருப்பூரில் இரிடியம் மோசடியில் ஈடுபட்ட தி.மு.க பிரமுகர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் மூலனூரைச் சேர்ந்தவர் சாமிநாதன் (50). ஆடு வியாபாரி. இவரைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம் (38), ராஜா (43) மற்றும் சோமனூரைச் சேர்ந்த தனபால் (33) ஆகியோர் சந்தித்துள்ளனர்.

இரிடியம்
இரிடியம்
மாதிரி படம்

அப்போது, அவரிடம், `எங்களிடம் கோயில் கலசத்தில் உள்ள இரிடியம் இருக்கிறது. இதை வைத்திருந்தால் உங்களுக்கு யோகம் பெருகும். நோய் நொடிகள் நீங்கும். கோடிக்கணக்கில் பணம் குவியும். பிறகு, உங்களை யாரும் அசைக்க முடியாது' என்று ஆசைவார்த்தை கூறியுள்ளனர்

இதை நம்பிய சாமிநாதன் இரிடியம் வாங்குவதற்குச் சம்மதித்துள்ளார். அந்த இரிடியத்தின் விலை ரூ.25 லட்சம் என்று கூறியுள்ளனர். இதற்காக, ரூ.5 லட்சத்தை முன்பணமாகத் தந்த சாமிநாதன், மீதிப்பணத்தை ஒரு வாரத்தில் கொடுப்பதாகக் கூறியுள்ளார். இந்த நிலையில், இரிடியம் வாங்குவதற்காக சாமிநாதனை கோவைக்கு அழைத்துள்ளனர்.

ஆறுமுகம்
ஆறுமுகம்

இதை நம்பி கோவைக்கு வந்த சாமிநாதனிடம், `இரிடியம் காருக்குள் இருக்கிறது. மீதிப்பணத்தைக் கொடுத்து பெற்றுக்கொள்ளுங்கள்' என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த சாமிநாதன் இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ஆறுமுகம், ராஜா மற்றும் தனபால் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

தனபால்
தனபால்

தொடர்ந்து, அவர்கள் வந்த காரையும், ரூ.90,000 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட தனபால், சாமிநாதனுக்கு ஏற்கெனவே நன்கு பழக்கமானவர். அவர் மூலமாகத்தான் மற்ற இருவரும் சாமிநாதனுக்கு அறிமுகமாகியுள்ளனர். முக்கிய குற்றவாளியான ஆறுமுகம் திருப்பூர் மாவட்ட தி.மு.க விவசாயிகள் அணி துணை ஒருங்கிணைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vikatan

இரிடியம் மோசடி குறித்துப் போலீஸார் கூறுகையில், `` 5 லட்ச ரூபாயைப் பெற்றுக்கொண்டவர்கள், இரிடியத்தைக் கொடுக்காமல் தாமதம் செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சாமிநாதன் கேட்டபோது, `இரியடித்துக்கு பவர் ஏற்ற சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது' என்று கூறியுள்ளனர். இதனால், சந்தேகமடைந்து அவர் தனது நண்பர்களிடம் விசாரித்துள்ளார்.

ராஜா
ராஜா

அப்போதுதான், அவர்கள் இதேபோல் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. வெள்ளிக் குடத்தில் மண் போட்டு இரிடியம் என்று சாமிநாதனிடம் சொல்லியுள்ளனர். இந்தக் கும்பல் தமிழகம் மற்றும் கேரளாவில் இதேபோல பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர்" என்கின்றனர்.

பின் செல்ல